புதன், 24 அக்டோபர், 2012

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத உறுதி:தமிழகச் செங்கல் கட்டடத்தொழில்நுட்பம்

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத உறுதி:தமிழக செங்கல் கட்டட தொழில்நுட்பம்

சென்னை: பண்டைய செங்கற் கட்டட கலையின் நுட்பங்களை, நவீன கட்டடங்களில் பயன்படுத் தினால், காலத்தால் அழியாத உறுதியான கட்டடங்களை உருவாக்க முடியும் என, தொல்லியல்
அறிஞர் சத்தியமூர்த்தி கூறினார்.

பண்டைய செங்கற் கட்டட கலை பற்றிய கருத்தரங்கம் தொல்லியல் துறையில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய, தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர், முனைவர்.சத்தியமூர்த்தி, பேசியதாவது:சங்க காலம் முதலே, செங்கற்களை கொண்டு கட்டடங்கள் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. கட்டட பொருட்களில், செங்கல் மட்டுமே பஞ்சபூதங்களின் உதவியோடு தயாரிக்கப் படுபவை.
பல வடிவங்களில்...:


கட்டடங்களுக்கு தகுந்த வகையில் செங்கற்கள் தயாரிக்கப்பட்டு கட்டுவதே பண்டைய தொழில் நுட்பம். இதனால், பல வடிவங்களில், விதவிதமான செங்கற்கள் தயாரிக்கப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள மேற்பரப்பு மண்ணை கொண்டே செங்கல் தயாரிக்கப்பட்டது.இந்த செங்கற்கள் தான், பாறைகளை குடைந்து கட்டப்பட்ட கோவில்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தன. பெரும்பாலான கற்கோவில்களில், இரு கல் சுவர்களுக்கு இடையில் உறுதி தன்மைக்காக, செங்கற்கள் தான் நிரப்பப்பட்டன. ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற இடங்களில் உள்ள கட்டடங்கள், சுடாத செங்கற்களை கொண்டு தான் கட்டப்பட்டன. செங்கல் பயன்பாட்டில், ஏற்பட்ட மாறுபட்ட வளர்ச்சியை கொண்டு, நாகரிக வளர்ச்சியை அறிய முடியும்.
வேப்பத்தூரில்...


கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூரில், வீற்றிருந்த பெருமாள் கோவில் முற்றிலுமாக செங்கற்களின் துணை கொண்டே கட்டப்பட்டது. இந்த கோவில் பற்றிய குறிப்புகள் கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் உள்ளன.தரையில் இருந்து, 4 மீ., உயரத்தில், மூன்று அடுக்குகளாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம், இன்னும் சிதைந்த நிலையில், காட்சி அளிக்கிறது.நம் நாட்டு செங்கற் கலையின், நுணுக்கங்களை கற்று கொண்டு கம்போடியா நாட்டில், 1,000 ஆண்டுகளுக்கு முன், விஷ்ணு அவதாரங்கள் இடம் பெற்ற கோவில் கட்டப்பட்டுள்ளது.
இப்போதும் செய்யலாம்:


இப்போது, நாம் பயன்படுத்தும் செங்கற்களை, கட்டடத்தின் வளைவு பகுதிகளுக்கு ஏற்ப, உடைத்து தான் பயன்படுத்துகிறோம். இம்முறையினால் தான், வீடுகள் உறுதி தன்மையின்றி, விரிசல் விடுகின்றன.பண்டைய செங்கற் கட்டட கலையின் நுணுக்கங்களை, நவீன கட்டடங்களில் பயன்படுத்தினால், அழியாத பல கட்டடங்களை உருவாக்கலாம். இவ்வாறு, சத்தியமூர்த்தி பேசினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக