ஞாயிறு, 21 அக்டோபர், 2012

ஓய்வு நேரத்திலும் ஆதாயம் பார்க்கலாம்!'

சொல்கிறார்கள்


"கொலு வைப்பதேதொழில் தான்!'
திருமணம், நிச்சயம் போன்ற நிகழ்ச்சிகளில், அதற்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை, கொலு பொம்மைகள் மூலம் காட்சிக்கு வைக்கும் கவிதா, ஜெயஸ்ரீ, அஞ்சனி, சத்தியபாமா:கவிதா ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த பள்ளியில் தான், எங்களின் குழந்தைகள் படிக்கின்றனர். அங்கு தான், நான்கு பேரும் அறிமுகமானோம். கவிதாவிற்கு, கை வேலைப்பாடுகளில் அதிக ஆர்வம். ஓய்வு நேரங்களில், கிராப்ட் வேலைகள் செய்ய ஆரம்பித்து விடுவார். அதில், ஆர்வமாகி பாராட்டியதுடன், கற்றுக் கொள்ளவும் துவங்கினோம்.பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் ஏதாவது தொழில் செய்யலாம் என, தீர்மானித்தோம். அப்போது தான், திருமணத்திற்கான ஆரத்தி, அலங்காரங்கள், கொலு பொம்மைகள் என, "கான்செப்ட்'டிற்கு ஏற்ப செய்து கொடுப்பதையே, நாமும் ஒரு தொழிலாக எடுத்து செய்யலாம் எனத் தோன்றியது.சென்னை, மேற்கு மாம்பலத்தில், ஒரு, "பிளாட்'டை வாடகைக்கு எடுத்தோம். சுப விசேஷங்களுக்கான, ஆரத்திகள் மற்றும் சீர்தட்டுகள், மண்பானை அலங்காரங்கள், விழா அரங்கில் கொலு பொம்மைக் காட்சி என, மூன்றும் செய்து தருகிறோம் என, தெரிந்தவர்களிடம் வாய்ப்பு கேட்டோம். இந்த புதுமையான யோசனைக்கு, பலர் தயங்கினாலும், சிலர் ஆர்வமாயினர்.மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயம், முகூர்த்தம், முளைப்பாரி, மோதிர விளையாட்டு என, சுபசடங்குகளை, நாங்கள் கொலுவாக வைப்பதை பார்ப்பவர்கள் ரசித்ததுடன், வாய்ப்பும் கொடுத்தனர்.ஒரே மாதிரியான, கொலு பொம்மைகளையே அனைத்து விசேஷங்களிலும் வைக்காமல், ஒவ்வொரு, "ஆர்டரு'க்கும், புதிதாக ஏதாவது யோசித்து செய்வோம். விழா நடத்துபவர்களின் விருப்பங்கள், அவர்களின் சமுதாயப் பழக்கம் அனைத்தையும், கொலுவில் கொண்டு வருவோம். இப்போது, பல, வி.ஐ.பி., வீட்டு விசேஷங்களுக்கும் எங்களுக்கு ஆர்டர் வருகிறது.தினமும் காலை, 10:00 மணிக்கு அலுவலகத்திற்கு வருவோம். ஆர்டர்கள், கணக்கு வழக்கு அனைத்தையும், ஒவ்வொருத்தரும் பகிர்ந்து செய்வோம். 1:00 மணிக்கு, வீட்டிற்கு கிளம்பி விடுவோம். இந்த நான்கு ஆண்டாக, குடும்பமும், தொழிலும் ஒன்றை ஒன்று தொந்தரவு செய்யாமல் போகிறது.
"ஓய்வு நேரத்திலும் ஆதாயம் பார்க்கலாம்!'
 இல்லத்தரசிகள் பங்குச் சந்தையில் ஈடுபடுவது பற்றி வகுப்பெடுக்கும் தர்மஸ்ரீ: திருமணத்திற்குப் பின், கணவரின் வேலை காரணமாக, மும்பையில் இருந்த போது, ஓய்வு வேளையில், "ஷேர் மார்க்கெட், கமாடிட்டி மார்க்கெட், கரன்சி மார்க்கெட்' என, பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன், பங்குச் சந்தை நேரடி வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். துவக்க காலத்தில் பங்குச் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் சரிவர புரியாமல் நிறைய நஷ்டங்கள்.நஷ்டம் வருவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்ததில், எந்த வித அடிப்படை அறிவுமின்றி, மனம் போன போக்கில் செய்த முதலீடுகள், அதிகபட்ச நஷ்டத்தை தந்திருப்பது புரிந்தது. தவிர, நிபுணர் கருத்துக்களை மட்டுமே நம்பி முதலீடு செய்ததாலும், நஷ்டம் ஏற்பட்டதை உணர்ந்தேன். இந்த அனுபவத்தின் மூலம், மெல்ல மெல்ல, சந்தையின் போக்கைக் கவனிக்க ஆரம்பித்தேன்.இதில் நான் கற்றுக் கொண்டதை, நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, இதையே மற்றவர்களுக்கு வகுப்பாக எடுத்தால், மற்ற பெண்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என, யோசனை கூறினர். அது எனக்கு சரியென பட, கணவரின் ஒப்புதலுடன் பங்குச் சந்தை பற்றிய வகுப்பெடுக்க ஆரம்பித்தேன்.மொத்தம் ஐந்து வகுப்புகள். பங்குச் சந்தை என்றால் என்ன, அடிப்படை விஷயங்கள், பங்குகளை ஆன்-லைன் மூலம், வாங்குவது, விற்பது, நாள் வர்த்தகத்தில் ஈடுபடும் முறைகள், நல்ல நிறுவனங்களை கண்டுபிடிப்பது எப்படி என, படிப்படியாக சொல்லிக் கொடுப்பேன். சில சமயம், வெளியூர்களுக்கும் சென்று வகுப்பெடுப்பேன்.பங்குச் சந்தையில் முன் அனுபவமே இல்லாதவர்கள், முன் அனுபவம் இருந்தும் நஷ்டப்பட்டவர்கள் என, பல தரப்பட்டவர்களையும், இந்த வகுப்பின் மூலம் சந்திக்க முடிகிறது. இந்த துறையில், பெண்கள் குறைவாகத் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காரணம், பங்குச் சந்தை என்றாலே, "சூதாட்ட களம்' என்ற மாயை தான்.வீட்டில் ஒரு கம்ப்யூட்டரும், குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் முதலீடும் இருந்தாலே போதும். பங்குச் சந்தை பற்றிய நெளிவு, சுளிவுகளைக் கற்று, ஓய்வு நேரத்தில், நல்ல லாபம் பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக