வெள்ளி, 26 அக்டோபர், 2012

உலகில் வீணாகும் உணவில் 50 கோடி பேர் பசியாறலாம்

உலகில் வீணாகும் உணவில் 50 கோடி பேர் பசியாறலாம்

தினமலர்

புதுடில்லி: ஆண்டுதோறும், சர்வதேச அளவில் வீணாக்கப்படும் ஒட்டு மொத்த உணவைக் கொண்டு, 50 கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என, ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எப்.ஏ.ஓ.,) தெரிவித்துள்ளது.உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது. குறிப்பாக, வளர்ச்சியடைந்த நாடுகளில், 68 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான உணவுப் பொருள் வீணாக்கப்படுகின்றன. வளரும் நாடுகளில் இதன் மதிப்பு, 31 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.

இதற்கு, நடுத்தர மற்றும் அதிக வருவாய் கொண்ட நாடுகள், அதிகளவில் நுகர வேண்டும் என்ற மனப்பாங்கே முக்கிய காரணம் என, எப்.ஏ.ஓ., ன் தலைமை இயக்குனர் ஜோஸ் கிராசியானோடி சில்வா தெரிவித்தார்.இதற்கு எடுத்துக்காட்டாக, 150 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கும் அதேசமயம், 87 கோடி பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள பல்வேறு நாடுகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என, எப்.ஏ.ஓ., மேலும் தெரிவித்துள்ளது.திருமணம் மற்றும் ஏனைய சமுதாய விழாக்களில்தான் அதிகளவு உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ், தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக