திங்கள், 22 அக்டோபர், 2012

புகுந்த வீட்டில் கழிவறை இல்லையா? பெண்களே திருமணம் செய்யாதீர்கள்: செய்ராம் இரமேசு

புகுந்த வீட்டில் கழிவறை இல்லையா? பெண்களே திருமணம் செய்யாதீர்கள்: செய்ராம் இரமேசு

First Published : 21 October 2012 06:16 PM IST
திருமணப் பேச்சு எடுத்து விட்டார்களா? நீங்கள் புகும் வீட்டில் முதலில் கழிப்பறை இருக்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் திருமணம் செய்துகொள்ளாதீர்கள்... இப்படி அறிவுரை கூறியுள்ளார் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். நாட்டில் கழிப்பறைகளைக் காட்டிலும் கோயில்கள் அதிகம் என்று ஒரு கருத்தைக் கூறி சர்ச்சைக்கு உள்ளான தேசிய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஞாயிற்றுக் கிழமை இன்று இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். 
ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள காஜுரி கிராமத்தில் நிகச்சி ஒன்றில் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரு வீட்டில் கழிப்பறை இல்லை என்றால் அந்த வீட்டுக்கு மணப்பெண்ணாகச் செல்லாதீர்கள் என்று கூறிய ஜெய்ராம் ரமேஷ், அந்த கிராமத்தின் பெண்களிடம் ஒரு உறுதிமொழி வார்த்தையையும் கூறினார். “கழிப்பறை இல்லையா; கல்யாணமும் இல்லை” என்பதை திரும்பத் திரும்பச் சொல்லுமாறு கிராமப் பெண்களிடம் கூறினார்.
நீங்கள் எல்லாம் ஜோதிடர்களைப் பார்த்து ராகு-கேது நிலைகளையும், தகுந்த நட்சத்திரம் குறித்தும் கேட்டு அறிகிறீர்களே! ஆனால் உங்கள் புகுந்த வீட்டுக்குப் போகும் முன், அங்கே கழிப்பறை உள்ளதா என்பதைக் கேட்டு விட்டு, பிறகு கல்யாணத்தைப் பற்றி யோசியுங்கள்” என்றார் அவர்.
பின்னர் அவர் கோடா மாவட்டத்தில் நிர்மல் பாரத் யாத்ராவின் மூன்றாம் கட்டத்தை சங்கோட் கிராமத்தில் துவங்கிவைத்தார். இந்த யாத்திரையில், “கழிப்பறை இல்லையா; கல்யாணமும் இல்லை” என்ற உறுதிமொழி ஹரியானா அரசின் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசியபோது, ஜெய்ராம் ரமேஷ் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டார். அங்கே அனிதா நாரே என்ற பெண், திருமணமாகிச் சென்ற இரண்டே நாளில் கணவர் வீட்டில் இருந்து தன் தாய் வீட்டுக்குத் திரும்பி விட்டார். காரணம் புகுந்த வீட்டில் கழிவறை இல்லை. இதைக் குறிப்பிட்ட ஜெய்ராம் ரமேஷ், எனவே கழிவறை என்பது பாதுகாப்பானதும் கௌரவமானதும் ஆகும் என்றும் கூறினார். மக்களுக்கு பாதுகாப்பான கழிவறை வசதிகளைச் செய்துகொடுப்பதில், ராஜஸ்தான் அரசு மெத்தனமாகச் செயல்பட்டுள்ளதாக, ஜெய்ராம் ரமேஷ் ராஜஸ்தான் அரசைச் சாடினார். அங்குள்ள 9177 கிராமப் பஞ்சாயத்துகளில் 321 மட்டுமே திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாதவையாகத் திகழ்கின்றன. அடுத்த ஐந்து வருடங்களில், அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் இந்த நிலையை ஏற்படுத்த இந்த விழிப்பு உணர்ச்சி யாத்திரையும் திட்டமும் உதவும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
இருப்பினும், இவர் செல்லும் இடங்களில் இவர் சொன்ன கோயில்-கழிப்பறை ஒப்பீட்டுக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து இயக்கங்களின் தொண்டர்கள் இவருக்கு எதிராக கறுப்புக் கொடிகளைக் காட்டி கோஷம் எழுப்பினர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக