மின்சாரத்தை ச் சேமிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
மாலை மலர் Chennai
செவ்வாய்க்கிழமை,
அக்டோபர் 23,
5:29 AM IST
மின்சாரத்தை சேமிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. மதுரை கே.புதுரைச் சேர்ந்தவர் பி.முத்துகுமார். இவர், ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் வக்கீல் கிளார்க்காக வேலை செய்கிறேன். சமீபகாலமாக தினமும் அதிக அளவு மின்தடை நிலவுகிறது. ராம் லீலா மைதானம் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னறிவிப்பு இல்லாமல், அனுமதியில்லாத மின் தடையை விதிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில், முன்னறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு ஏற்படுவதால், பணிகளை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். ஒரு நாளுக்கு முன்பு மின்வெட்டு நேரம் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு வெளியிட்டால், வழக்கமான பணிகளை முன்கூட்டியே செய்து முடிக்க முடியும்.
அரசியல் சட்டம் 21-வது பிரிவின்படி, தூக்கம் தனி மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் இரவு நேரத்தில் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதால், தூங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மின்வெட்டு நேரம் குறித்து முதல் நாளே அறிவிப்பை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு 7.10.12 அன்று மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எந்த நேரத்தில் மின்தடை ஏற்படும் என்பதை எனக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் மின்தடை நேரத்தை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஆர்.சுதாகர் விசாரித்தார். அவர் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இப்போதுள்ள உச்சகட்ட மின் தட்டுப்பாட்டை அடுத்து, மாற்று தீர்வை மேற்கொள்ளும் நிலை வந்துள்ளது. இருக்கிற மின்சாரத்தை சேமிக்க வேண்டிய நேரம், தமிழக அரசுக்கு வந்துள்ளது. மின் பற்றாக்குறைக்கு பல காரணங்களை அரசு கூறுகிறது. மனுதாரர் கூறியுள்ள பிரச்சினை, மாநிலத்திலுள்ள எல்லா மக்களிடம் உள்ளது.
தமிழகம் மின் பற்றாக்குறை பிரச்சினையை பல ஆண்டுகளாக எதிர் கொண்டு வருகிறது. இப்போதுள்ள மின் பற்றாக்குறையை காரணமாக கூறாமல், பல ஆண்டுகளுக்கு முன்பே மின் பற்றாக்குறையை சமாளிக்க, அரசு அதிகாரிகள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மின் உற்பத்தியை அதிகரித்து இருக்க வேண்டும்.
எரிசக்தி துறை அமைச்சகத்திடம், மின் தேவை குறித்த தொலைநோக்கு பார்வையில்லை. இந்த இயலாமைத் தன்மையினால், மின் பற்றாக்குறை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு முன்பே மாநில அரசு தீர்வு காணவில்லை. இதை மாநில அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள மின் பற்றாக்குறைக்கு குறுகிய கால நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காணமுடியும். மின்சார உற்பத்தியையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்த முயல வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், அரசுக்கு இந்த கோர்ட்டு சில பரிந்துரைகளை வழங்க முடிவு செய்கிறது.
அரசு அலுவலகங்களில் உள்ள மின் விளக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். மூடப்பட்டுள்ள ஜன்னல் திரைகளை திறந்து வைத்தால், சூரிய வெளிச்சம் உள்ளே வந்து, மின்சார விளக்குகளின் உபயோகத்தை குறைக்கும். அதிக ஏ.சி. எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து மறு ஆய்வு செய்யவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ஏ.சி.கள் இருந்தால், அதன் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகள், மத பண்டிகைகள், பொது நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமாக விளக்குகளையும், மின்சாரத்தை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தெரு விளக்குகள் எரியவிடும் நேரத்தை வரையறை செய்ய வேண்டும். அரசு கட்டிடம், அரசு குடியிருப்புக்களை பயன்படுத்தும் அதிகாரிகள், மின்சாரம் பயன்படுத்தும் அளவை குறைக்க வேண்டும்.
இதன் மூலம் மின்சாரம் இல்லாமல் வாடும் பொதுமக்களுக்கு, அந்த மின்சாரம் கிடைக்கும். வீணாக்கும் துறை அரசு கட்டிடங்களில் மின் விளக்கு பொருத்தும் எண்ணிக்கைகளை பொதுப்பணித்துறை பரிசீலிக்க வேண்டும். அதிக மின்சாரம் வீணாவதற்கு பொதுப்பணித்துறையின் பங்குதான் அதிகம் உள்ளது. விருந்தினர் மாளிகை, அரசு பங்களாக்கள் ஆகியவற்றில் உள்ள பத்துக்கு பத்து சதுர அடி கொண்ட அறைகளுக்கு 2 டியூப் லைட்டுகள் போதுமானதாக இருக்கும். ஆனால், அதிக எண்ணிக்கையில் டியூப் லைட்டுகளை பொதுப்பணித்துறை பொருத்துகிறது. இதனால்தான் அரசு கட்டிடங்களில் மின்சாரம் அதிக அளவில் செலவழிக்கப்படுகிறது.
அதேபோல, குடிமக்களும் கட்டுப்பாடான குடும்பத்தை போல, மின்சாரத்தையும் கட்டுபாட்டுடன் பயன்படுத்த வேண்டும். அதேபோல, தொழிற்சாலை போன்ற வர்த்தக நிறுவனங்களில் வேலை நேரத்தில், மின்சாரம் தடையின்றி கிடைக்க தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? பெரிய தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகள், தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை மனதில் வைத்து, மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 1-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக