செவ்வாய், 23 அக்டோபர், 2012

நூறாயிரம் நூல்கள் கொண்ட அரிய தமிழ் நூலகம்

ஒரு லட்சம் நூல்கள் கொண்ட
 அரிய தமிழ் நூலகம்

சென்னை:உலகளவில் குறிப்பிடத்தக்க நூலகங்களுள் ஒன்றாக திகழ்கிறது, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நூலகம். இங்கு,  
ஓர் இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.ஆய்வாளர்கள், மாணவர்கள் என, பல தரப்பினருக்கும் உதவி வரும் இந்த நூலகத்திற்கு, தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். பொதுவாக, ஆய்வு நூலகங்களில் நூல்களை நேரடியாக தேட முடியாது. இந்த நூலகத்தில், ஆய்வாளர்கள் தங்களுக்கு தேவையான நூல்களை தாங்களே தேடி எடுத்துக் கொள்ள முடியும்.

அரிய நூல்கள்:தமிழகத்தின் மிக அரிய, ஒரு முறை பதிப்பில் வெளிவந்து பின்னர் வெளிவராத பல நூல்கள், இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் முதல் பதிப்புகள், எங்கும் காண கிடைக்காத, 1927ல் பொன்னுசாமி பிள்ளை என்பவர் எழுதி வெளிவந்த பூர்வீக சங்கீத உண்மை, அபிதான கோசத்தின் 1092ல் வெளிவந்த பதிப்பு, 1911ல் வெளிவந்த ஆரியர் சத்திய வேதம், 1893ல் வெளியான நாகூர் புராணம், 1887ல் வெளியான திருவேங்கட தலபுராணம் போன்ற நூல்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.இலக்கியங்கள் மட்டுமல்லாமல், 1889ல் வெளியான முத்துவீரியம், 1869ல் பதிப்பு கண்ட 11ம் திருமுறை ஆகிய நூல்களும் இங்கு உள்ளன.

நூலகர் பெருமாள்சாமி கூறுகையில், ""எங்கும் காண கிடைக்காத அரிய நூல்கள், இந்த நூலகத்தில் உள்ளன. இங்கு, 1 லட்சத்து 300 நூல்கள் உள்ளன. சமீபத்தில் போதிய நூலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதால், நூலகம் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது,'' என்றார்.

பழங்கால சுவடிகள்:இணை பேராசிரியர் செல்வகுமார் இதுகுறித்து கூறியதாவது:உலக தமிழாரா#ச்சி நிறுவனத்தில், தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலம், தமிழ் இலக்கியம் மற்றும் சுவடி புலம், சமூக அறிவியல் மற்றும் பண்பாட்டு புலம், அயல்நாட்டு தமிழர் புலம் என, நான்கு புலங்கள் செயல்படுகின்றன.தமிழ் இலக்கியம் மற்றும் சுவடி புலத்தின் சார்பில், இலக்கிய ஆ#வுகள் நடத்தப்படுகின்றன.

பழங்காலத்து சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இந்த சுவடிகளை படிப்பது, ஆய்வு செய்வது, பாதுகாப்பது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ஜோதிடம் முதல், மருத்துவம் வரையிலான சுவடிகள் இங்கு உள்ளன. சுவடி ஆவணக் காப்பகத்தில் அவை பாதுகாக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக