செவ்வாய், 23 அக்டோபர், 2012

முறிவுநோய் குறித்து அஞ்சற்க!

சொல்கிறார்கள்

"டெங்கு குறித்து ப் பீதி வேண்டாம்!'
"டெங்கு' காய்ச்சல் பற்றி, மருத்துவர் மதுபாஷிணி: எல்லா காய்ச்சலையும் போலத் தான், "டெங்கு'வும். முதல் இரண்டு நாட்கள் இருக்கும். "பாரசிட்டமால்' மருந்துகளை எடுத்துக் கொண்டால் போதும். இதிலேயே, 99 சதவீதம் பேருக்கு சரியாகி விடும். காய்ச்சல், உடல் வலி, தலைவலி, மயக்கம், வாந்தி என, இதில் ஏதாவது ஒன்று இருக்கலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள், சேர்ந்தும் வரலாம். 2009ம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம், டெங்கு காய்ச்சலை, இரண்டு வகையாகப் பிரித்தது. ஒன்று, சிக்கல் இல்லாத சாதாரண காய்ச்சல்; இரண்டாவது ரத்தக் கசிவுள்ள தீவிர காய்ச்சல்.
டெங்குவால் ஏற்படும் சாதாரண காய்ச்சலுக்கு, பொதுவாக, பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டாலே, சரியாகி விடும். பெரும்பாலானோருக்கு ஏற்படுவது, இந்த வகை காய்ச்சல் தான். இரண்டாவது வகையில், ரத்த அழுத்தம் குறையும். 1 சதவீதம் பேருக்கு மட்டுமே, இந்த வகை டெங்கு ஏற்படுகிறது. இதில், நம் ரத்தத்திலுள்ள தண்ணீர், உள் உறுப்புகளில் கசியக் கூடும்; இது தான் ஆபத்தானது. நம் ரத்தத்தின், ஒரு மைக்ரோ லிட்டரில் (ஒரு மில்லி லிட்டருக்கும் குறைவான அளவு), 1.5 முதல், 4.5 லட்சம் வரை தட்டை அணுக்கள் உள்ளன. இந்தத் தட்டை அணுக்கள் குறைந்தால் ஆபத்து. தட்டை அணுக்கள், 10 ஆயிரத்திற்குக் கீழே குறையும் போது, நாங்கள் அதை உடலில் செலுத்துவோம். டெங்கு பாதிப்பு உள்ளது என தெரிந்தால், முதலிலேயே தட்டணுக்களை செலுத்தலாமே என, சிலர் கேட்கின்றனர். அதனால், எந்தப் பலனும் இல்லை. தேவையில்லாத போது செலுத்தும் தட்டை அணுக்கள், அழிந்து போய்விடுமே தவிர, உடலில் தங்காது.
"ஆன்ட்டிபயாட்டிக்'குகள், பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே, பலன் தரக் கூடியவை. தேவையில்லாமல், "டெங்கு' காய்ச்சலுக்கு சிலர் இதை சாப்பிடுகின்றனர். சிலர், வலி நிவாரணிகளையும் எடுத்துக் கொள்கின்றனர். இவை இரண்டுமே, தவறு. வலி நிவாரணிகள், ரத்தத் தட்டை அணுக்களைக் குறைக்கும் வாய்ப்புள்ளது. "டெங்கு' பாதித்தவர்கள், நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியும் குறையவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. மற்றபடி இந்தளவிற்கு பீதியடையத் தேவையில்லை. ஏனெனில், "டெங்கு' காய்ச்சலால் இறப்பவர்கள், 1 சதவீதம் பேர் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக