புதன், 24 அக்டோபர், 2012

நுண்நொதுமி ஆய்வகம் பொட்டிபுரம் மக்களின் தேவை என்ன?

நியூட்ரினோ ஆய்வகம் பொட்டிபுரம் மக்களின் தேவை என்ன?

தேவாரம்:நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள, தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிபுரம் ஊராட்சியிலும், சுற்றுப்பகுதிகளிலும் செய்ய வேண்டிய அடிப்படைகட்டமைப்பு பணிகள் ஏராளம் உள்ளன."நியூட்ரினோ' துகள் குறித்த ஆராய்ச்சி, இந்திய இயற்பியல் துறையை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 1,320 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய அரசின் நிதி உதவியுடன், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில், 2027 மீ., ஆழத்தில் பாதாள சுரங்கம் அமைத்து, உலகின் மிகப்பெரிய மின்காந்தம்(50 டன்) அமைக்கப்படவுள்ளது. நியூட்ரினோ "டிடக்டராக' இந்த மின்காந்தம் செயல்படும்.

உலகின் பல பகுதிகளில் நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. சூரியனின் உள் வட்டம் குறித்த விபரங்கள் அறிய நியூட்ரினோ ஆராய்ச்சி முடிவுகள் அவசியம். இதற்காக அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வத்தில் நூற்றுக்கணக்கான இயற்பியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நியூட்ரினோ என்றால் என்ன?: "நியூட்ரினோ' எளிதில் அடையாளம் காண முடியாத, அணுவை விட சிறிய துகள். பெருவெடிப்பு ஏற்பட்டு, பால்வெளி வீதி (கேலக்சி) உருவான போதே நியூட்ரினோ உற்பத்தி துவங்கியது. பால்வெளியில் நட்சத்திர கூட்டங்கள் மோதும் போதும், நட்சத்திரங்கள் வெடித்து சிதறும் போதும், நியூட்ரினோ உருவாகிறது. சூரியனில் எரிசக்தி உருவாக்கத்தின் போதும், நியூட்ரினோ வெளிப்படுகிறது (சோலார் நியூட்ரினோ).
ஒளியை விட கூடுதல் வேகத்தில் பயணிக்கும், நியூட்ரினோ துகள்கள் பால்வெளியிலிருந்து பூமி பரப்பை எட்டும் வரை, எந்த சிதைவும் இல்லாமல் வந்தடைகிறது. உதாரணமாக சனி கிரகத்தில், எப்போதும் ஏற்பட்டு கொண்டிருக் கும் மின்காந்த புயலில் கூட, நியூட்ரினோ துகள் பாதிப்படைவதில்லை. நியூட்ரினோக்கள் எலக்ட்ரானை போன்ற பண்புடை யது. எடையற்ற, மின் அதிர்வை ஏற்படுத்தாத நியூட்ரினோ துகள்கள், மனிதனின் உடலில், ஒரு நொடிக்கு 50டிரில்லியன் என்ற எண்ணிக்கையில் ஊடுருவுகின்றன. பூமி உருவான அடிப்படை மூலக்கூறுகளில் நியூட்ரினோவும் அடங்கியுள்ளது.
ஆராய்ச்சி எதற்காக: நியூட்ரினோ ஆய்வு என்பது அணு துகள்கள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதி. பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிவதற்கான அடிப்படை ஆராய்ச்சி. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய உதவும், என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏற்கனவே, உலகளவில் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பங்கேற்பவர்கள்: ஐ.ஐ.டி., மும்பை, ஐ.ஐ.டி., கவுகாத்தி, அலிகார் யுனிவர்சிட்டி, தி இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெடிக்கல் சயின்ஸ், சென்னை, இந்திராகாந்தி சென்டர் பார் அட்டாமிக் ரிசர்ச், கல்பாக்கம், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச், டெல்லி யுனிவர்சிட்டி, ஜம்மு, காஷ்மீர் யுனிவர்சிட்டி உட்பட 24 நிறுவனங்கள், இந்த ஆராய்ச்சியில் பங்கேற்க உள்ளன. 100 இந்திய
இயற்பியல் வல்லுநர்கள், மற்றும் ஹவாய் யுனிவர்சிட்டி ஆகியோர் இணைந்து ஆராய்ச்சியில் ஈடு பட உள்ளனர். செலவு முழுவதும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
அம்பரப்பர் மலை தேர்வு ஏன்: தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் மலையை குடைந்து, பாதாள அறையில் நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. நியூட்ரினோ துகள்களுடன் இணைந்து பயணிக்கும் "காஸ்மிக்' கதிர்களை வடிகட்ட, கடினமான ஒற்றை கல்லால் ஆன பாறை தேவை. 2027மீ., கடினமான, அடுக்குகளற்ற, ஒற்றை பாறையாக அம்பரப்பர் மலை உள்ளது.
மலையின் அடியில் ஆய்வகம் அமையும் போது, இடையூறு இல்லாமல் நியூட்ரினோ துகள்கள் "டிடக்டரை' வந்தடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த மலையை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலா?: பாதாள சுரங்கத்தில், 50 டன் எடையுள்ள மின்காந்தம் பொருத்தப்படவுள்ளது. சுரங்கம் தோண்ட, பாறையை வெடி வைத்து உடைக்கும் போதோ, வேறு தொழில் நுட்பத்தில் பாறையை உடைக்கும் போதோ
ஏற்படும் அதிர்வாலும், பாறை தூசிகளாலும் அருகிலுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் சுற்றுப்புற கிராம மக்களிடம் உள்ளது. இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உண்டு. நவீன தொழில்நுட்பத்தில் பாறையை குடைந்து பாதாள சுரங்கம் அமைக்கப்படும் என்று, டாடா கன்சல்டன்சி ஆப் பண்டமென்டல் ரிசர்ச் விஞ்ஞானி கே.மண்டல், பொட்டிபுரம் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவித்தார். இந்த முறையில் தூசி வெளியில் பறக்காத வண்ணம் வலைகள் சுற்றி கட்டப்படும். வெட்டி எடுக்கப்படும் பாறைகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் என்றார்.
மக்களின் தேவை என்ன?: ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரம் ஊராட்சி முழுவதும், விவசாயம் சார்ந்த பகுதி. இரண்டாயிரம் மக்கள் தொகை கொண்டது. ஆய்வக கட்டுமானப்பணிகளுக்கு, நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தப்படும் போது, இங்குள்ள இறவை பாசன கிணறுகளில் நீர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, இங்குள்ள வனப்பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். பல்லிளிச்சான்பாறை கீழ் பகுதியில், சிறு அணை கட்டி மழை நீரை தேக்க வேண்டும். பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை, புதூர், பொட்டிபுரம், சின்னபொட்டிபுரம், குப்பனாசாரிப்பட்டி கிராமங்களில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி, தடையில்லா கூட்டு குடிநீர் திட்டம், கழிவு நீரோடை வசதிகளை செய்ய வேண்டும். அவசர சிகிச்சைக்கு உத்திரவாதம் அளிக்க குப்பனாசாரிபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, 24 மணி நேரம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறு தொழில், கால்நடை வளர்ப்பு,விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆய்வகத்தில் இருந்து நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு,தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஆய்வகம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள்:ஆராய்ச்சி நோக்கத்திற்காக நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர், இப்போதே, ஆய்வக கட்டுமானம் துவங்கும் முன்பே வந்து பார்த்து செல்கின்றனர். கல்வி, சுற்றுலா மேம்பட வாய்ப்புள்ளது. வெளிமாநில, வெளிநாட்டு ஆராய்ச்சி மாணவர்கள் வருகையால், மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மேம்படும்.
கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என்று மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது. தென்மாவட்ட மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். போக்குவரத்து வசதிகள் மேம்படும். உதாரணமாக மதுரை-எர்ணாகுளம் ரயில் பாதை நியூட்ரினோ ஆய்வகம் வழியாக செல்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகளை, தென்னக ரயில்வே கட்டுமான துறையினர் மேற்கொண்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில், இதற்கான ஆதரவு தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக