திங்கள், 28 மே, 2012

ஆட்சியை மாற்றலாம்! அவர்களுக்குள் இருக்கும் ஆதிக்க நினைப்பை..? – ச.ச.முத்து

ஆட்சியை மாற்றலாம்! அவர்களுக்குள் இருக்கும் ஆதிக்க நினைப்பை..? – ச.ச.முத்து

Sri Lanka's President Mahinda Rajapaksa looks up during a War Victory parade in Colombo
இன அழிப்பு, போர்க்குற்றமாக சுருங்கி அதன்பின் மனித உரிமைமீறலாக மாறி இப்போது சிறீலங்காவின் ஆட்சியை மாற்றிவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று முடிவு உருவாகி உள்ளது. பொதுவாக மேற்கில் அப்படி ஒரு கருத்துருவாக்கம் உருவாகி இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் நிலையில் அப்படியான ஒரு எண்ணம் இருக்கக்கூடிதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக மாறிவரும் நிலைமை அதனைத்தான் எண்ணவைக்கிறது.
பலம் ஏதுமற்ற ஒரு இனமாக நாம் மாறிய 2009 மே மாதத்துக்கு பின்னர் எங்களுடைய நோக்கம், எங்களுடைய பாதை என்று எதை வரித்து இறங்கினாலும் அதனை மாற்றி எம்மை அதனிலும் வலுக்குறைந்த ஒரு போராட்ட முறைக்குள் தள்ளுவதாகவே குறிப்பாக மேற்குலகின் நகர்வாகவும் இந்தியாவின் பார்வையாகவும் இருந்துவருகிறது.
2009 முள்ளிவாய்க்கால் முடிந்தவுடன், ‘இன அழிப்பு என்றும் இன அழிப்பை செய்த சிங்கள ஆட்சியாளர்களை கூண்டில் ஏற்ற வேண்டும்’ என்றும் ‘இன அழிப்புக்கு உள்ளான எமது மக்களுக்கு நிரந்தர தீர்வாக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சுய ஆட்சியை’ கோரினோம். ஆனால் மேற்குலகோ போர்க்குற்றம் என்பதையே திரும்பதிரும்ப சொல்லி எம்மையும் இன அழிப்பு என்ற கோசத்தில் இருந்து திசைமாற்றி போர்க்குற்ற விசாரணை என்ற கோரிக்கைக்குள் வலிந்து தள்ளியது.
அதிலிருந்து இன்னும் கொஞ்சம் கீழிறங்கி மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாகவும் அதற்கு தீர்வு வடக்கில் தேர்தல் நடத்தினால் போதுமானது என்றும் தீர்மானங்களும் தீர்மானங்களை வரவேற்கும் தீர்மானங்களும் சற்று முந்திய மாதங்களில் நடந்து முடிந்திருந்தை கண்டிருப்பீர்கள். அதனைக்கூட சிங்கள தேசத்தின் இனவாத முகத்தை சர்வதேசம் இனம்கண்டு கொண்டிருப்பதன் ஆரம்ப அடையாளம் என்று எமக்கு நாமே ஆறுதல் சொல்லியபடி சந்தோசத்துடனே பார்த்தோம்.
ஆனால் உலக ராஜதந்திரம் வேறுவிதமாக ஓட ஆரம்பித்துள்ளது. தூக்கிய எதிர்ப்புப் பதாகைகளை எல்லாம் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி தூக்கி வீசி விட்டு மேற்குலகு சொல்லும் கோசங்களை மட்டுமேதூக்கி ஏந்தி நிற்பதுதான் ராஜதந்திரம் என்று நாம் நினைத்தோம். அதனையே செய்யவும் செய்தோம்.
எமது ராஜதந்திரமாக பத்து கேட்போம் அவர்கள் கொடுக்கும் இரண்டை தன்னும் வாங்கி கொள்ளுவோம் என்பதே இருக்கிறது. உண்மையான ராஜதந்திரம் எப்படி என்பதற்கு சொல்லப்படுவதான The principle of give and take is the principle of Diplomacy- give one and take ten (கொடுத்து வாங்குவது என்பது இராஜதந்திரத்தில் தலையாயவிடயம் – ஒன்றைக் கொடுத்து பத்தை வாங்குவது) என்பதற்கமைய கொடுப்பதற்கு ஏதுமற்ற இனமான நாம் எமது தேசியத்துக்கான சில அடிப்படைகளை விட்டுகொடுப்பதே சிறந்த இராஜதந்திரம் என்று நினைத்து கொண்டதன் பலன் இப்போது மகிந்தவை ஆட்சிக்கட்டிலை விட்டு இறக்கி விட்டால் தமிழர்களின் பிரச்சினை அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும் என்று சொல்லி அதனை நோக்கியதாக நகர்வுகளை ஆரம்பித்தும் உள்ளது.
சம்பந்தர் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நடாத்திய மே தினம் என்பதும் இந்த நாடகத்தின் ஒரு காட்சிதான். சிங்கள தேசத்தின் இறைமையை மீறாத கீழ்படிவு எமக்கு உண்டு என்பதை காட்டுவதற்காகவே சிங்கக் கொடியையும் உயர்த்தி தென்னிலங்கை வரை தெரியக் காட்டினார். அதற்கு பிறகு காட்சிகள் மிக வேகமாகவே மாற்றங்கொள்ள தொடங்கின. நாடாளுமன்ற தெரிவுக்குழுவை இவ்வளவு நாளும் நிராகரித்துவந்த சம்பந்தர் கும்பல் இப்போது அதிலும் இணையும் சாத்தியங்கள் தெளிவாகவே தெரிகிறது.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போதோ அல்லது இன்னும் சில நாட்களுக்குள்ளாகவோ நாடாளுமன்ற தெரிவு குழுவில் இணையும் அறிவிப்பு வெளியானாலும் வெளியாகலாம். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் சம்பந்தரும் அவரின் சகாக்களும் இந்த முடிவை அறிவிக்கும் வாய்ப்புகளும் தெரிகின்றன.
இதற்கு முன்னர் காத்திரமான அடிப்படை அம்சங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்துவருவோம் என ஐக்கியதேசிய கட்சி கடிதம் மூலம் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து மே 14ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்குழு ஒன்று சிறீலங்கா ஜனாதிபதியை சந்தித்திருந்தது.
கூட்டமைப்பு சம்பந்தமாக இத்தகைய நகர்வுகள் நடந்துகொண்டிருக்க… இன்னொரு புறத்தில்… இன்று (21.05.2012) இலங்கை நேரம் மாலை 5 மணிக்கு சரத் பொன்சேகா நவலோக மருத்துவமனையில் இருந்து விடுதலையாகி உள்ளார். இவரின் விடுதலைக்கு எந்தவொரு வெளிநாட்டு அழுத்தமும் காரணம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும் சிங்கள ஊடகங்களும் சிங்கள அரசியல்வாதிகளும் கட்சிகளும் வெளி சக்தியின் அழுத்தம் காரணமாகவே இவரின் விடுதலை நிகழ்ந்துள்ளதாக கொதித்து போய் இருக்கிறார்கள்.
ஜேனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், சிங்கள தேசத்தின் இன்றைய பொருளாதார நிலை என்பன சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் மீது மேற்குலகு நிபந்தனைகளை விதிக்கும் சந்தர்ப்பங்களை சாத்தியப்படுத்தி உள்ளது. ஆனால் துரதிஸ்டவசமாக மேற்குலகு ஒரு ஆட்சி
மாற்றம் ஒன்றையே தமது ஆக இறுதியான செயற்பாடாக முன்வைத்து நகர்கின்றன என்பதுதான் உண்மை.
அதற்கு ஆதரவான நிலையை புலம்பெயர் தமிழர்களிடம் ஏற்படுத்துவதற்காக இங்கிருக்கும் சில அமைப்புகளை கூட்டறிக்கைகளை வெளியிடவைத்தும் இப்போதைக்கு மகிந்தவை நீக்குவோம் அதன் பிறகு புதிதாக ஆட்சியேறும் சரத்பொன்சேகாவோ, ரணில் விக்ரமசிங்காவோ தமிழர்களுக்கு உரிமைகளை படிப்படியாக வழங்குவார்கள் என்ற கருத்தை இவர்கள் மூலம் பரப்பவும் முயற்சிகள் தொடங்க உள்ளன. (தொடங்கியும்விட்டது) இங்குதான் மேற்குலகு தோற்கப் போகின்றது. அதிலும் அது சிங்களபேரினவாத எண்ணத்தின் முன் தோற்றுக் குனியப் போகின்றது.
மியன்மாரில் ஆட்சிமாற்றம் ஒன்றினுடாக மக்களுக்கு பயமற்று வாழும் உரிமைகளையும் விடுதலையையும் ஒருவேளை மேற்குலகம் வாங்கிக் கொடுக்கலாம். அதுவே சில
வேளை லிபியாவிலும், துனிசியாவிலும் சாத்தியமாகியும் இருக்கலாம். ஆனால் சிங்களதேசத்தில் இது சாத்தியமே இல்லை. ஏனெனில் சிங்கள சோவனிசம் அல்லது சிங்கள பேரினவாத எண்ணம் என்பது வெறும் ஆட்சிகட்டிலிலும் அதன் ஆட்சிதலைமையிலும் மட்டும் இல்லை. அது சிங்கள இனத்தின் தமிழர் சம்பந்தமான நிலைப்பாடு என்பது தொன்மநினைவுகளிலும் (அலவா) பண்டைய மகாவம்ச கோட்பாடுகளிலும் ஆழ புதைந்து போய் இருக்கிறது.
ஒரு மகிந்தவை தூக்கி எறிந்தால் அடுத்து வருகின்ற ஒரு புஞ்சி பண்டாவோ யாரோ இன்னும் மோசமான பேரினவாத நினைப்புடன் வருவார். இந்த நினைப்பை மாற்றுவதற்கு ஏதுவான சர்வதேச சட்டங்கள் எதுவும் மேற்கிடமும் இல்லை சிங்களதேசத்திடமும் இல்லை. ஏனெனில் சிங்களதேசம் கட்டியெழுப்ப பட்டிருப்பது இத்தகைய தமிழர் எதிர்ப்பு என்ற கோட்பாடுகளினதும் சிங்களபேரினவாத சிந்தனைகளினதும் மீதுதான்.
இத்தகைய சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும்வரை யார் சிங்களதேசத்தின் தலைவராக வந்தாலும் பண்டாரநாயகா செய்ததையே, சிறிமா செய்ததையே, மகிந்த செய்ததையே… மீண்டும் மீண்டும் செய்வார்கள். இந்தப் புரிதல் ஒரு கட்டத்தில் மேற்குலகுக்கு வந்தே தீரும். அதுவரை நாம் காத்திருக்காமல், எமது கோரிக்கைகளை அதே வீரியத்துடன் தொடர்ந்தும் வெளிப்படுத்தியே வரவேண்டும்.
இப்போது இருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம். போர்க்குற்றமும், இனப்படுகொலை சம்பந்தமான சர்வதேச விசாரணையுமே ஆகும். அதற்காக சர்வதேச அமைப்புகளையும் பிரித்தானிய நாடாளுமன்றத்தையும் கோரும் முயற்சிகளைத் தொடரவேண்டும்.
நன்றி : ஈழமுரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக