ஞாயிறு, 27 மே, 2012

பெயரைக் கெடுக்க முனைகிறது அமெரிக்கா – சீறுகிறார் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்

பெயரைக் கெடுக்க முனைகிறது அமெரிக்கா – சீறுகிறார் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்

ruwan_wanigasooriya
மனிதஉரிமைகள் நிலை தொடர்பான அறிக்கையில் சிறிலங்கா மீது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவம், சிறிலங்காப் படைகளின் பெயரைக் கெடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் மற்றொரு முயற்சி இது என்று குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று முன்தினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட 2011ம் ஆண்டின் மனிதஉரிமைகள் நிலை குறித்த அறிக்கையில், சிறிலங்கா படைகள் மற்றும் அரசு ஆதரவுடன் இயங்கும் துணை ஆயுதக்குழுக்களினால் மேற்கொள்ளப்படும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் சிறிலங்காவின் முக்கியமான பிரச்சினையாக உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,
“சிறிலங்காவில் சட்டத்துக்கு முரணான கொலைகள் இடம்பெறவில்லை.
அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போன்று துணை ஆயுதக்குழுக்களும் இங்கு செயற்படவில்லை.
சீருடையில் உள்ள இராணுவத்தினர் சட்டரீதியாகவே ஆயுதம் ஏந்தியுள்ளனர்.
இந்தக் குற்றசாட்டுகளை எவராவது நிரூபிக்க முடியுமானால் அவர்கள் அதனை எந்தநேரமும் சிறிலங்கா இராணுவத்தின் முன்பாக கொண்டு வரமுடியும்.
நாம் அந்த முறைப்பாடு குறித்து விசாரிப்போம். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம்.
அண்மையில் கனேடியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் மீது சிலர் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி.
என்ன நடக்கிறது என்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக