திங்கள், 28 மே, 2012

"திறமையை வளர்த்துக் கொண்டேன்!'

சொல்கிறார்கள்

"திறமையை வளர்த்துக் கொண்டேன்!'



காய்கறிகளிலும், பழங்களிலும் சிற்பங்களை உருவாக்கும், "செப்' வினித்குமார்: நான், 1996ம் ஆண்டு, ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தவுடன், எழும்பூரில் உள்ள ஓட்டலில், ஜூஸ், சாலட் செய்து கொடுக்கும் வேலையில் சேர்ந்தேன். எட்டு மாதமாக, இந்த வேலை தான். அதன்பின், மூன்று நட்சத்திர ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கும் அதே வேலை தான்.ஆனால், நான் என் திறமையை வெளிக்காட்டும் விதமாக, சீன, தென்னிந்திய உணவு வகைகளை சமைக்க ஆரம்பித்தேன்; நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன.ருசியாக சமைத்தாலும், அதை பரிமாறும் முறையையும் கற்றுக் கொண்டு, செயல்படுத்தினேன். வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் கிடைத்தது."கேட்டரிங்' அப்போது தான் வளர்ந்து வரும் காலம் என்பதால், உணவை அலங்கரிக்க உபயோகப்படுத்தும், "கர்விங்' கலையெல்லாம் மக்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலமடையவில்லை. ஆனாலும், அதில் எனக்கு இருந்த ஆர்வத்தையும், திறமையையும் வளர்த்துக் கொண்டேன்.அடுத்த கட்டமாக, ஐந்து நட்சத்திர ஓட்டலில், வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு, 12 மணி நேர வேலை. அதனால், "கர்விங்'கில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. ஆனாலும், எனக்கு கிடைக்கும் விடுமுறையில், பூசணிக்காயை வாங்கி, மகாபலிபுரத்திற்கு போய் விடுவேன்.அங்கு, சிற்பிகள் சிலை செதுக்குவதை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு, பூசணிக்காயில் கத்தியை வைத்து செதுக்க ஆரம்பித்தேன். பூசணிக்காயில் சிற்பங்கள் அற்புதமாக வர ஆரம்பித்தன. இப்படித் தான், "கர்விங்' கற்றுக் கொண்டேன்.நான் இப்படி, "கர்விங்'கில் அதிக ஆர்வமாக இருப்பதைப் பார்த்து, ஓட்டல் நிர்வாகமே என்னை முழு நேர, "கர்விங்' செய்வதற்கு அனுமதித்தது.காய்கறிகள் தவிர, தெர்மகோல், வெண்ணெய், ஐஸ் கட்டி, சாக்லெட், சர்க்கரை போன்ற பொருட்களிலும், சிற்பங்கள் செய்ய ஆரம்பித்தேன். "கர்விங்' கலையை இன்னும் புதிய பரிமாணத்தில் கொண்டு வர வேண்டும் என்பது என் விருப்பம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக