ஞாயிறு, 27 மே, 2012

இலங்கையில் இரு தேசங்கள் ஏற்க மறுக்கும் எரிக்கும், உணரவைக்கும் மே நிகழ்வுகளும்.

இலங்கையில் இரு தேசங்கள் ஏற்க மறுக்கும் எரிக்கும், உணரவைக்கும் மே நிகழ்வுகளும்.

ErikSolheim-large1
‘இலங்கைத் தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்கு, கிழக்குக்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில், இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்ததான அரசியல்த் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெருமளவு ஆதரவு நிலவுகின்றது.
அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன்’ என நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கின்றார். போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே எரிக் சொல்ஹெய்ம் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
தமிழர்களின் பிர்ச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமா அல்லது சர்வதேசம் விரும்புகின்ற, திணிக்கின்ற தீர்வைத்தான் தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பதை இங்கு ஆராய்வதை விட்டுவிட்டு, இலங்கையின் சமாதானத்திற்கு மத்தியத்துவம் வகித்த நோர்வேயின் பிரதிநிதி மேலும் கூறியுள்ளதை இங்கு கவனிக்கவேண்டும்.
‘2000ம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள வெற்றியை அடுத்து, படைபலத்தில் விடுதலைப் புலிகள் உச்சநிலையில் இருந்தபோதுதான் சமாதான முயற்சிகள் தொடங்கப்பட்டன’ என்பதை ஒத்துக்கொண்டுள்ள எரிக் சொல்ஹெய்ம், ‘இப்புற நிலையில் சமாதானப் பேச்சுகளைச் சாதகமாகக் கையாண்டிருப்பின் கூட்டாட்சித் தீர்வினை எட்டியிருக்க முடியும்.
கூட்டாட்சித் தீர்வு பற்றி ஆராய்வதைத் தட்டிக்கழித்தமை, அனைத்துலக சமூகத்திடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தியமை, இராணுவத் தீர்வில் நம்பிக்கை கொண்டிருந்தமை ஆகியன விடுதலைப் புலிகளின் தலைவர் இழைத்த தவறுகள்’ என்று குற்றம்சாட்டுகின்றார். ஆனால், அதே நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற சிறீலங்கா – விடுதலைப் புலிகளுக்கு இடையிலான பேச்சுக்களின்போதுதான் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ்பேசும் மக்களின் பூர்வீகத் தாயகத்தில், தீர்வு ஒன்றினை ஆராய்ந்து பார்ப்பதற்கான இணக்கம் காணப்பட்டதை எரிக் சொல்ஹெய்ம் மறந்துவிட்டார் அல்லது மறைத்துவிட்டார்.
அத்துடன், சிறீலங்கா அரசே போர் நிறுத்தத்தை மீறி வலிந்த தாக்குதல்களை மேற்
கொண்டதையும் அவர் மறைத்து, விடுதலைப் புலிகளே இராணுவத் தீர்வை விரும்பியதாக குற்றம்சாட்ட முனைகின்றார்.
அத்துடன், ‘தமிழர்களின் அரசியலுக்குரிய தலைமை இலங்கையைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க முடியுமே தவிர தலைமை தாங்க முடியாது என்பவர், தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக விளங்குகின்றது’ என்று கூட்டமைப்பை அடையாளம் காட்டுகின்றார்.
சர்வதேசத்தின் பார்வைக்கு தமிழ் மக்களின் ஒரே அடையாளமாக இப்போது கூட்டமைப்புத்தான் இருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், கூட்டமைப்பு அனைத்துத் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகத்தான் இப்போதும் இருக்கின்றதா என்ற கேள்வியும் உள்ளது.
தமிழ் மக்களின் ஒரே பலமாக இருந்த விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு, தாங்கள் விரும்பிய தீர்வை தமிழ் மக்கள் மீது திணிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்த உலகத்திற்கு இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லதீனியாகக் கிடைத்துள்ளது. சிங்கக் கொடியில் விருப்பம் கொண்ட, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைத்தேடும் சம்பந்தர் போன்றவர்கள் தலைமையில் கூட்டமைப்பு இருப்பதனால், ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோன்று’ மிக இலகுவாக இலங்கையின் இறையாண்மை கெட்டுவிடாமல், இந்தியா விரும்பும் 13ம் திருத்தச் சட்டத்திற்குள் தமிழர்களுக்கான தீர்வைத் திணித்துவிட முடியும் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்பையே எரிக் சொல்ஹெய்ம் வெளிப்படுத்தியிருக்கின்றார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
ஆனால் எரிக் சொல்ஹைய்ம் விரும்புவது போலவோ அல்லது சர்வதேச விரும்புவதுபோலவோ இலங்கை எப்போதும் பிரிந்துபோக முடியாத ஒரே தேசமாக இல்லை என்பதே உண்மை. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் மே-18ம் திகதி இனப்படுகொலையின் அழிவு நாளாக, கறுப்பு நாளாக கண்ணீரில் கரைந்த வேளையில்தான், தென்னிலங்கையில் வெற்றிக்கொண்டாட்டங்கள் மறுநாள் 19ம் திகதி நடந்தேறுகின்றன.
ஒரு பக்கம் கண்ணீரில் மக்கள் அழும்போது, இன்னொரு பக்கம் மகிழ்ச்சியில் மக்கள் திளைக்கின்றனர். ஒரே தேசம், ஒரே மக்கள் என்ற நிலை இருந்திருந்தால் இங்கு வேறுபட்ட முரணான இரண்டு விடயங்கள் நிகழமுடியாது. அத்துடன், வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது என்று போர் வெற்றி நிகழ்வில் மகிந்த ராஜபக்ச சூளுரைக்கின்றார்.
இவ்வாறு, தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டும், காலாச்சார- பண்பாடுகளை சீரழித்துக்கொண்டும், இன ஒடுக்குமுறைகளைச் சிங்கள தேசம் தொடர்ந்துகொண்டும் இருக்கும்போது சர்வதேசம் விரும்புவதுபோன்று இலங்கைத்தீவு ஒரே தேசமாக என்றைக்கும் இருந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏனெனில் எந்தவொரு பொருளின் மீது அளவுக்கு அதிகமான அழுத்தம் பிரயோகிக்கப்படும்போது இறுதியில் வெடிப்பு நிலையையே ஏற்படும். எனவே, சர்வதேசத்தின் நிலைமைகளில் மாற்றம் ஏற்படுகின்றபோது, தமிழ் மக்களின் ஆதரவுத் தளம் பலம் பெறுகின்றபோது விடுதலைக்கான வேள்வி மீண்டும் தொடங்குவது தவிர்க்கப்பட முடியாது. அதனை நோக்கித்தான் சிங்கள தேசத்தின் ஒடுக்குமுறைகள் தமிழ் மக்களைத் தள்ளிக்கொண்டிருக்கின்றது.
எனவே, மாநாட்டில் இறுதியாக எரிக் சொல்ஹெய்ம் எச்சரித்ததுபோன்று ‘மீண்டுமொரு ஆயுதப் போர் தொடங்குமானால் அனைத்துலக ஆதரவு துளியளவுக்கும் அற்றுப் போய்விடும்’ என்பது தமிழர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலன்றி வேறில்லை.
‘எல்லா மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்ளலாம்’ என்கின்றது ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம். ஆனால், தமிழர்களுக்கு அந்த உரிமையை மறுக்க முனைவதையே எரிக் சொல்ஹெய்மின் கருத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஆசிரியர் தலையங்கம்
நன்றி : ஈழமுரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக