செவ்வாய், 29 மே, 2012

பாரதி பெயரில் போலி நாடகம்; கொழும்புக்குச் செல்லாதீர்! வைகோ வேண்டுகோள்!

பாரதி பெயரில் போலி நாடகம்; கொழும்புக்குச் செல்லாதீர்! வைகோ வேண்டுகோள்!

[தமிழ்க்காப்புக்கழக வேண்டுகோள்பரவுகிறது]

vaiko300
கொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதி சங்கமும் இணைந்து, ஜூன் 1 ஆம் தேதியன்று, கொழும்பில் பாரதி விழா நடத்துவதாகவும், தமிழகத்தில் இருந்து பேராசிரியர்களும், சொற்பொழிவாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிகிறேன். இதனுடைய கருப்பொருள், ‘தேமதுரத் தமிழ் ஓசை, உலகெலாம் பரவச் செய்வோம்’ என்று அறிவித்து உள்ளனர்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், தமிழர் தாயகத்தில் சிங்களமயமாக்கலும், பௌத்த மயமாக்கலும் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழர் பகுதிகளில், சிங்கள இராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு, தமிழ் ஈழமே ஒரு அடக்குமுறைச் சிறைக்கூடமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுகின்றன. திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் சிலைகளை எல்லாம் உடைத்து எறிந்து விட்டனர். பாரதியாரின் அனைத்து நூல்களும் இடம் பெற்று இருந்த யாழ் நூலகத்தையும் அன்று சிங்களவர்கள் எரித்தனர். தமிழர்களின் ஊர்ப் பெயர்கள் அனைத்தையும் மாற்றி, சிங்களப் பெயர்களாக ஆக்கி விட்டனர். இலங்கைத் தீவில், தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் அழிவதையே தடுக்க முடியாதவர்கள், உலகெங்கும் தமிழோசைப் பரப்பப் போவதாகக் கூறுவது, உலகத்தை ஏமாற்ற சிங்கள அரசுக்குத் துணை போகும் செயல் ஆகும்.
ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளை, இப்பொழுதுதான் அனைத்து உலக நாடுகள் உணரத் தொடங்கி இருக்கின்றன. ஆனால், படுகொலைகளை மூடி மறைக்க, அங்கு அமைதி ஏற்பட்டு உள்ளது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த, சிங்கள அரசும், இந்திய அரசும் திட்டமிட்டுப் பல போலி நாடகங்களை நடத்தி வருகின்றன. இப்போது ஒன்றாம் தேதி நடைபெறுவதாக உள்ள நிகழ்ச்சியில், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ஜஸ்டின் மோகன் கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள தீவுகளில் தமிழர்கள் தாக்கப்படுவதை எண்ணி நெஞ்சம் வெடித்து, தன் துயரத்தை எரிமலைச் சிதறலாய்க் கவிதை ஆக்கியவன் பாரதி.
‘விதியே, விதியே என் தமிழச் சாதியை என் செய நினைத்தாயோ?
பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவினும் பரவி
இவ்வெளிய தமிழ்ச்சாதி,
தடி உதையுண்டும் காலுதை உண்டும், கயிற்றடியுண்டும்
வருந்திடுஞ் செய்தியும், மாய்ந்திடும் செய்தியும்
இதெல்லாம் கேட்டும் எனது உளம் அழிந்திலேன்’
என்று, நெஞ்சம் வெடித்துக் குமுறும் கவிதை தந்தவன் பாரதி.
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, சிங்களப் பேரினவாத அரசு ஈவு இரக்கம் இன்றிக் கொடூரமாகப் படுகொலை செய்தது. துடிதுடித்து மாண்ட நம் குழந்தைகள், தாய்மார்களுக்காக, வெகுண்டெழுந்து சிங்களரைக் கண்டனம் செய்ய வேண்டிய தமிழ்ச்சங்கம், உண்மையை மூடி மறைக்க, இப்படி நிகழ்ச்சி நடத்துவது மிகவும் வேதனை அளிக்கின்றது.
பாரதி இன்று இருந்திருந்தால், சிங்களரைச் சபித்து அறம் பாடி இருப்பார். ஊழிக்கூத்தென நெருப்புக் கவிதை தந்து இருப்பார்.
எனவே, கொழும்பு நகரில் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிகழ்ச்சியில் பங்கு எடுக்க வேண்டாம் என சென்னை பாரதி சங்க நிர்வாகிகளையும், பேராசிரியர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
28.05.2012 மறுமலர்ச்சி தி.மு.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக