வடக்கில் படைக்குறைப்பை வலியுறுத்திய பிரித்தானியத் தூதுவர் மீது பாய்கிறது சிறிலங்கா
பதியப்பட்ட நாள்May 26th, 2012
சிறிலங்காவின்
வடக்கில் இராணுவத்தைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக கொழும்பிலுள்ள
பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின், வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கருத்து தொடர்பாக பிரித்தானிய
தூதுவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு
ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவின ஏனைய பகுதிகளைப் போன்றே
வடக்கு, கிழக்கிலும் படையினர் நிலை கொண்டிருக்க வேண்டும் என்றும், ஆனால்,
மிகப்பெரியளவிலான இராணுவத்தினர் வடக்கில் குவிக்கப்பட்டுள்ளதாகவும்
பிரித்தானியத் தூதுவர் கூறியிருந்தார்.
இவரது இந்தக் கருத்து பிரித்தானியத்
தூதரகத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள காணொலி கேள்வி –
பதில் நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியத் தூதுவரின் இந்தக் கருத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர், பிரித்தானியத் தூதுவரின்
கருத்து கவனமாக ஆராயப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
அதன் பின்னர், அவர் மீதான பொருத்தமான
நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார
அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இது குறித்து கருத்து
வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,
நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களை
அடைவதற்கு ஏற்பவே சிறிலங்கா இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக
கூறியுள்ளார்.
“வடக்கு, கிழக்கில் இருந்து பெருமளவு
படையினர் குறைக்கப்பட்டு ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இங்கு
பாதுகாப்பு அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை.
ஈழப் பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரல் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஊடகங்களில் வெளிப்படையாகவே இது தெரிகிறது.
ஆயுத மோதலைத் தோற்றுவிக்கத் தயங்காத பல சக்திகள் உள்ளன.
நாடு எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சிறிலங்கா இராணுவம் நன்கு புரிந்து கொண்டுள்ளது.
தேவைகளை கவனமாக மதிப்பீடு செய்தபின்னரே, ஆயுதப்படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி, தெற்கு,
மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல், வடமேல் மாகாணங்களிலும் சிறிலங்கா
படையினர் நிலைகொண்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் குடியியல் அதிகாரிகள் கோராமல், நிர்வாகத்தில் சிறிலங்காப் படையினர் எந்தப் பங்கையும் வகிப்பதில்லை.
சுதந்திரம் பெற்ற காலத்தில் பிரித்தானிய
ஆயுதப் படைகளிடம் இருந்தே இராணுவ பாரம்பரியங்களையும் தொழிற்சார்
அடிப்படைகளையும் சிறிலங்கா பெற்றுக் கொண்டுள்ளது.
எமது இராணுவக் கோட்பாடு, பிரித்தானியாவின்
ஏனைய முன்னாள் காலனித்துவ நாடுகளில் உள்ளதைப் போன்ற, பிரித்தானிய இராணுவக்
கோட்பாட்டின் அடிப்படையிலானதே.
சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் நிலைகொள்ளல் அனைத்துலக நியமங்களுக்கு ஏற்பவே உள்ளது.
பலம்மிக்க நாடுகள் பல பிரதான நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் தமது படையினரை நிறுத்தியுள்ளன.
சில நாடுகள் தமது பிரதான நிலப்பரப்பில் இருந்து 8000 மைல் தொலைவிலும் படையினரை நிறுத்தி வைத்துள்ளன.
சிறிலங்காப் படையினர் ஐ.நா.அமைதிகாக்கும்
படை நடவடிக்கைகளுக்காக வெளியே நிலைகொண்டுள்ளனரே தவிர, ஏனையோர்
சிறிலங்காவின் தேசிய எல்லைகளுக்குள்ளே நிறுத்தப்பட்டுள்ளனர்“ என்று
கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக