திங்கள், 28 மே, 2012

மாணவர்களைச் சீண்டிப் பார்க்கும் சிறீலங்கா அரசு தொடர் போராட்டங்களுக்கு முகம் கொடுக்கும். – தாயகத்தில் இருந்து வீரமணி

மாணவர்களை ச் சீண்டிப் பார்க்கும் சிறீலங்கா அரசு தொடர் போராட்டங்களுக்கு முகம் கொடுக்கும். – தாயகத்தில் இருந்து வீரமணி

jaffna 01d
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் குறிவைத்துள்ள சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் திட்டமிட்ட சதியை எதிர்த்து மாணவர்கள் கொதித்தெழுந்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை சுமூகமாக கல்வி கற்க விடக்கூடாது என்பதற்காக சிறீலங்கா அரசும் அரச புலனாய்வாளர்களும் அவ்வப்போது மாணவர்களை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாகவே கடந்த வெள்ளிக்கிழமை காலை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந் (வயது 24) என்பவர் தாக்கப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்காலில் அரச படையினரால் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. இந்த நிகழ்விற்காகச் சென்று கொண்டிருந்த போதே தர்ஷானந் பல்கலைக்கழகத்திற்கு அண்மையிலுள்ள கலட்டிச் சந்தியில் வைத்துத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இன்று நேற்றல்ல, யாழ்.பல்கலைக்கழகம் எப்போது தமிழ் மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியதோ அப்போது இருந்தே பல்கலைக்கழகம் மீது குறிப்பாக, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிறீலங்கா அரசாங்கத்தின் பார்வை விழத்தொடங்கியது. அன்றில் இருந்து இராணுவப் புலனாய்வாளர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தை முற்றுகையிடத் தொடங்கினர். இங்கு கற்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டனர்.
குறிப்பாக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். கடந்த 2011 ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.தவபாலசிங்கம் தாக்கப்பட்டார். தற்போது செயலாளர் தர்ஷானந் தாக்கப்பட்டிருக்கிறார். இவ்விரு தாக்குதல்களும் ஒரே பாணியிலேயே இடம்பெற்றிருக்கின்றன.
கடதாசிச் சுறுள் போல நீளமாக சுறுட்டி அதற்குள் இரும்புக் கம்பிகளை மறைத்து வைத்துக் கொண்டு வந்தவர்களே திடீர் என்று மாணவர்கள் மீது தாக்குதல்களை நடத்திவிட்டுக் குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் இராணுவப் புலனாய்வாளர்களாலும் அவர்களின் கைக்கூலிகளாலும் நடத்தப்பட்டது என்ற உண்மை அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரியும்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான கடந்த 18ம் திகதிக்கு சில தினங்களுக்கு முன்னர் யாழ்.பல்கலைக்கழக வாளாகத்தினுள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் அவலங்களையும் வாழ்வியல் நெருக்கடிகளையும் சித்தரிக்கும் வசனங்கள் அந்தச் சுவரொட்டியில் ஒட்டப்பட்டு இருந்தன. இதனை அறிந்த இராணுவப் புலனாய்வாளர்கள் நேரடியாகவே பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்து சுவரொட்டிகளை அகற்றினர். அத்துடன் சில மாணவர்களையும் அவர்கள் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிக்க வேண்டாம் என்பதாகவே அவர்களின் எச்சரிக்கை அமைந்திருந்தது.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் யாழில் நிலைகொண்டுள்ள இராணுவத்திற்கும் இராணுவப் புலனாய்வளர்களுக்கும் பாரிய அடி ஒன்றினைக் கொடுத்திருந்தனர். யாழ்.பல்கலைக்கழகத்திலோ அல்லது யாழ்.குடாநாட்டில் எந்த இடங்களிலோ மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படக்கூடாது என்றும் அதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் இராணுவம் கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த வேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய தீபம் ஏற்றி மாவீரர் தினத்தைக் கொண்டாடினர். யாழ்.பல்கலைக்கழக ஆனந்தகுமாரசாமி விடுதிக்கு மேலாக உள்ள தண்ணீர் தாங்கியில் ஏறிய மாணவர்கள் சிறந்த திட்டமிடலுடன் பாரிய தீபம் ஒன்றினை ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதன் மூலம் சிறீலங்கா இராணுவத்திற்கும் புலனாய்வாளர்களுக்கும் கண்ணில் மண் தூவினர்.
இராணுவுத்தின் எந்த ஒரு நெருக்கடிகளாலும் எமது வீர உணர்வுகளை மழுங்கடிக்க முடியாது என்பதையும் எமது விடுதலை வேட்கையை எவராலும் அடக்க முடியாது என்பதையும் அன்று மாணவர்கள் மிகத் தெளிவாகவே வெளிக்காட்டினர். இதனால் சினமடைந்த இராணுவம் இனிமேல் யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எந்த ஒரு செயற்பாட்டையும் மேற்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக நின்றது. இதனாலேயே முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்விற்காக ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த காலை 8.45 மணியளவிலேயே மாணவர் ஒன்றியச் செயலாளரைத் தாக்கி படுகாயப்படுத்தியது.
மாணவர் ஒன்றியத்தில் உள்ள ஒருவரை தீர்த்துக்கட்டினால். அனைத்தையும் ஸ்தம்பிதம் அடைய வைக்கலாம் என்று சிங்களம் கனவு கண்டது. ஆனால் இழப்புகளையும் இரத்தங்களையும் கண்டு பழக்கப்பட்ட மாணவர்கள் காயமடைந்த தர்சானந்தை சிகிச்சைக்காக அனுப்பி விட்டு மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வோடு முன்னெடுத்தனர். தர்சானந் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொதித்து எழுந்தமையும் அவர்கள் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணத்தின் உருவப் படத்தினைத் தீயிட்டுக் கொளுத்தியமையும், இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயங்கள்.
கடந்த காலங்களில் பதவி வகித்த துணைவேந்தர்களை விடவும் தற்போதைய துணைவேந்தரான வசந்தி அரசரட்ணம் மாணவர்களின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்று மாணவர்களால் ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினதும் அரச ஆதரவு பெற்ற சில அரசியல் கட்சிகளினதும் நலன்களுக்கே இவர் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். மாணவர்களின் உணர்வுகளுக்கோ நலன்களுக்கோ இவர் மதிப்பளிப்பது இல்லை என்று மாணவர்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.
2011 ஆம் ஆண்டுக்கான மாணவர் ஒன்றியம் தவபாலசிங்கம் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட போது தவபாலசிங்கம் தலைவராக இருக்க முடியாது என்றும் அவர் வெளியேறினாலேயே மாணவர் ஒன்றியத்திற்கான அங்கிகாரம் வழங்க முடியும் என்றும் இதே துணைவேந்தர் கூறியிருந்தார். இவரின் இந்தக் கூற்றிற்குப் பின்னால் யாழ்ப்பாணத்தில் உள்ள அரச ஆதரவு பெற்ற அரசியல் கட்சி ஒன்று இருந்ததாகவும் மாணவர்கள் அப்போது குற்றஞ்சாட்டி இருந்தனர். ஆயினும் அப்போது மாணவர்களின் விடாப்பிடியான கோரிக்கையினால் 6 மாதங்கள் வரை இழுத்தடிக்கப்பட்ட பின்னரே மாணவர் ஒன்றியத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் தாங்கள் மாணவர்களின் நலன் சார்ந்த செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ள முடியவில்லை என்று தவபாலசிங்கம் தலைமையிலான மாணவர் ஒன்றியம் கூறியிருந்தது. அந்த ஒன்றியம் கற்றல் காலம் நிறைவடைந்த நிலையில் வெளியேறியுள்ளது. தற்போது பவானந்தன் தலைமையிலான மாணவர் ஒன்றியம் செயற்பட்டு வருகிறது. எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் இவர்களில் செயற்பாட்டுக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை இந்த மாணவர் ஒன்றியத்திற்கான அங்கிகாரமும் துணைவேந்தரால் வழங்கப்படவில்லை.
இழுத்தடிப்புகள் நடைபெற்று வருகின்றன. வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டு இருக்கின்ற மாணவர்களின் உணவுத் தேவைகள் உட்பட ஏனைய தேவைகளையும் மாணவர் ஒன்றியமே முன்னின்று நிறைவேற்றி வருகின்றது. இந்நிலையில் ஒன்றியத்திற்கான அங்கிகாரம் வழங்கப்படாமையால் அதனைச் செயற்படுத்துவதில் தாங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் கொள்வதாக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
இது போன்ற அனைத்துக் காரணிகளும் ஒன்றுசேர்ந்த விரக்தியே மாணவர்கள் துணைவேந்தரின் உருவப்படத்தை தீயிட்டுக் கொழுத்தத் தூண்டியது. துணைவேந்தரின் அலுவலகத்தை நோக்கி கற்களால் தாக்குதல் நடத்தவும் இந்த விரக்தியே காரணமான அமைந்தது. மாணவர்களையும் மாணவர்களது செயற்பாடுகளையும் முடக்கவோ அழிக்கவோ நினைக்கும் எந்த சக்திகளையும் மாணவர்கள் மன்னித்தது இல்லை.
கடந்த காலங்களில் தமிழ் மாணவர்களின் மீது சிங்கள அரசும் இராணுவமும் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளே இலங்கைத் தீவில் பெரும் போராக தோற்றம் பெற்றது. இதனால் பெரும் அழிவுகள் ஏற்பட்டதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே மாணவர்களைச் சீண்டிப் பார்க்கின்ற செயற்பாடுகளை சிறீலங்கா அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதையும் அரசு புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிடின் மாணவர்களின் தொடர் போராட்டங்களுக்கு அரசும் இராணுவமும் முகம் கொடுக்க வேண்டியேற்படும்.
நன்றி : ஈழமுரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக