வியாழன், 31 மே, 2012

திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்!'

சொல்கிறார்கள்

"திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்!'
கற்பித்தல் முறை பற்றி கூறும் மனநல ஆலோசகர் ராஜ்மோகன்: குருகுல முறை, திண்ணைப் பள்ளி போன்ற, பல படிநிலைகளைத் தாண்டி வந்தது தான், இன்றைய பள்ளிக் கல்வி முறை. குருகுல முறையில், மாணவர்களுக்கு, இதைத் தான் கற்பிக்க வேண்டும் என்ற விதி கிடையாது. குரு, தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு, பல வேலைகளைக் கொடுப்பார். அதிலிருந்து, மாணவர்களே சுயமாக உணர்ந்து கற்றுக் கொள்ள, அதை மேம்படுத்தும் சக்தியாக மட்டுமே, குரு இருப்பார்.இன்றைய கற்பித்தல் முறையில், குரு என்கிற, "பிராண்டை' மட்டும் தான், பெரும்பாலான ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். குருவிற்கு உரிய, சகல திறமை, அர்ப்பணிப்புடன் இருந்தால் தானே, மாணவன் - ஆசிரியர் உறவு, குளிர்ச்சியாக இருக்கும்!"சகல திறமை' என்பது, இன்று கேள்விக்குறியாக இருப்பது வேதனை. "ஆசிரியர் வேலையை, மனம் விரும்பி தேர்ந்தெடுத்து வந்தேன்' என்று கூறுபவர்களை விட, "எந்த வேலையும் கிடைக்கலே, அதனால டீச்சர் வேலைக்கு வந்தேன்' என்கிற ஆசிரியர்கள் தான், தனியார் பள்ளிகளில் அதிகம் காணப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் மாட்டுகிற மாணவன் தான், அல்லல்படுகிறான்."அடுத்த வேலை கிடைக்கும் வரை, இந்த வேலையில் இருப்போம்' என்று பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவனின் கற்றல் திறமையை மேம்படுத்த, எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள்.ஒரு மாணவனை நல்லவனாக, சிறந்தவனாக, பண்புள்ளவனாக உருவாக்க, ஒரு ஆசிரியர், தன் உழைப்பையும், அறிவையும், நேரத்தையும் முதலீடு செய்பவராக இருப்பது அவசியம். மாணவன், தொடர்ந்து கற்றுக் கொள்வதற்கும், ஆர்வமாகத் தெரிந்து கொள்வதற்கும், ஆசிரியர் உந்துதலாக இருக்க வேண்டுமே ஒழிய, மாணவன், முழுக்க முழுக்க தன்னைச் சார்ந்து இருக்கும்படியான கற்பித்தலை உருவாக்காமல் இருப்பது, அந்த பணிக்கும், உறவிற்கும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக