திங்கள், 7 மே, 2012

வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை குறைப்பதில் சிறிலங்கா அக்கறை காட்டவில்லை – பிரித்தானியா குற்றச்சாட்டு

வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை குறைப்பதில் சிறிலங்கா அக்கறை காட்டவில்லை – பிரித்தானியா குற்றச்சாட்டு

Army-in-Jaffna
சிறிலங்காவின் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் போது கணவன்மாரை இழந்த 90,000 வரையான பெண்கள் வாழ்வதாக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விவகாரம் தொடர்பாக, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் காணாமற் போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் என்பன 2011 இறுதியில் அதிகரித்துக் காணப்பட்டதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட 2011 நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பரில், சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அரசியற் செயற்பாட்டாளர்கள் இருவர் காணாமற் போயுள்ளனர்.
அத்துடன் 2010 இல் காணாமற்போன கேலிச் சித்திரவடிவமைப்பாளரான பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை உள்ளடங்கலாக, கடந்த காலங்களில் காணாமற் போனோர் தொடர்பாக எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு, யுத்த மீறல்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாததாக சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட சில சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்கா காவற்துறையினர் எந்தவொரு முறைப்பாடுகளையும் பதிவு செய்ய மறுப்பதாகவும் பிரித்தானிய வெளியுறவுப் பணிமனையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புப் படையினரின் நடமாட்டம் அங்குள்ள பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள போதிலும் கூட, சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் எந்தவொரு குறைந்த முன்னேற்றத்தைக் கூடக் காண்பிக்கவில்லை என பிரித்தானிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்துலக நெருக்கடிகள் குழுவும் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் வாழும் பெண்களின் அபிவிருத்தி தொடர்பாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய அறிக்கை, உலக பொருளாதார மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட பூகோள பால்நிலைச் சுட்டியில் 16 ஆவது இடத்திலிருந்த சிறிலங்கா தற்போது 31 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்காவில் 2011 முழுமையும் மனித உரிமைகள் தொடர்பிலும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், சிறிலங்காவில் மனித உரிமையை பாதுகாத்தல் என்பது கடந்த ஆண்டில் கேள்விக்குறியாக காணப்பட்டதாகவும் பிரித்தானிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக