கோட்டயம் :முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆராய, உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்மட்டக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "கேரளாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை' என, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜெ.ஜோசப் தெரிவித்திருந்தார். இதற்கு உயர்மட்டக்குழுவில் கேரளா தரப்பு பிரதிநிதியாக இடம் பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ், "அமைச்சர் சொன்னபடி நடப்பதற்காக, உயர்மட்டக்குழுவில் என்னை நியமிக்கவில்லை' என பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக - கேரள எல்லையை ஒட்டி, 119 ஆண்டு பழமையான முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணை பலவீன மடைந்து விட்டதாகவும், அதனால், புதிய அணை கட்டவேண்டும் எனவும், கேரளா வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணை பிரச்னை குறித்து ஆராய்ந்து அறிக்கை தர, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் உயர்மட்டக்குழுவை நியமித்தது. இக்குழுவில் தமிழக பிரதிநிதியாக நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரளா பிரதிநிதியாக நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர். ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, கடந்த மாதம் 25ம்தேதி அறிக்கை தாக்கல் செய்தது.
கேரளா அதிருப்தி :அந்த அறிக்கையின் நகல்கள், இரு மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டன. அதில், முல் லைப் பெரியாறு அணை உறுதியுடன் இருப்பதாகவும், புதிய அணை கட்டத்தேவையில்லை என்றும் உயர்மட்டக்குழு தெரிவித்துள்ளது. இதில், கேரளா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜெ.ஜோசப் கூறுகையில், "முல்லை பெரியாறு விவகாரத்தில், புதிய அணை கட்டுவது ஒன்றே தமிழகத்துடனான, பல ஆண்டு பிரச்னைக்குத் தீர்வு. இவ்விஷயத்தில் நீதிபதி தாமஸ், கேரளாவுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. இது சம்பந்தமாக கேரளாவின் அதிருப்தியை மத்திய அரசிடம் தெரிவிப்போம்' என்றார்.
நீதிபதி வீட்டுக்கு பேரணி:கோட்டயத்தில் குஞ்ஞிகுழியில் உள்ள நீதிபதி தாமஸ் வீட்டுக்கு நேற்று முன்தினம் முல்லைப் பெரியாறு போராட்ட சமிதியினர், எம்.எல்.ஏ., பிஜிமோள் தலைமையில் ஊர்வலமாகச் சென்றனர். வீட்டுக்கு சற்று முன்பாக ஊர்வலத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசுக்கும், ஊர்வலம் சென்றவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நீதிபதி கண்டனம்:அமைச்சர் பி.ஜெ.ஜோசப் தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு, நீதிபதி தாமஸ் பதில் அளித்துள்ளார்.
அவர், கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உயர்மட்டக்குழு அறிக்கையை முழுவதுமாகப் படிக்காமல், அமைச்சர் ஜோசப் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தவறான தகவல்களை பகிரங்கமாக தெரிவித்து, பொதுமக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், நான் நேர்மையாக நடந்துள்ளேன். அணை குறித்து உண்மைகளை உயர்மட்டக்குழுவிடம் தெரிவிக்கவே என்னை நியமித்தனர். அமைச்சர் சொன்னபடி கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய என்னை நியமிக்கவில்லை. நான் சொல்வதும், செய்வதும் உண்மையாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எனக்குண்டு. என்னை கேரளாவைச் சேர்ந்தவன் என்றோ, தமிழகத்தைச் சேர்ந்தவன் என்றோ சொல்வதில் அர்த்தமில்லை. இரு மாநிலத்தினருக்கும் நியாயமானதைச் செய்யவே அறிக்கை அளித்துள்ளேன்.இவ்வாறு தாமஸ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக