சொல்கிறார்கள்
பீகார் பெண்களிடையே, புரட்சிப் பெண்ணாக உருவெடுத்திருக்கும், 58 வயதான ராஜ்குமாரி தேவி: 23 ஆண்டுகளுக்கு முன் என் கணவர், எங்கள் நிலத்தில் புகையிலை பயிரிட்டிருந்தார். அவ்வப்போது நானும் விவசாயத்தைப் பார்ப்பேன். இந்நிலையில், மாநிலத்தில் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு கிளம்பவே, எங்களின் விவசாயம் பாதித்தது.இதையடுத்து, பீகார் விவசாயிகள் வளர்ச்சி மையத்தில் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கான பயிற்சி பெற்றேன். அதில் கிடைத்த ஆலோசனைகளின் பலனாக, எங்கள் நிலத்தில் இருந்த புகையிலையை அகற்றி, காய்கறி மற்றும் பழங்களை பயிரிட்டதில் நல்ல பலன் கிடைத்தது.நான் அடைந்த பலனை ஊர் மக்களும் அடைய வேண்டும் என்பதற்காக, 50 கிராமங்களுக்கும் சென்று இதை நான் எடுத்துக் கூறினேன். இதனால், நல்ல மாற்றம் ஏற்பட்டது. காய்கறி மற்றும் பழங்களின் பயிர்களுக்கான விதை மற்றும் உரம் இடுவதிலும் எனக்கு நல்ல அனுபவம் உண்டு.தலைநகர் பாட்னாவில் உள்ள ராஜேந்திரா வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு அவ்வப்போது சென்று, புதுப்புது வேளாண் யுக்திகளை கற்றுக்கொள்வதுடன், பல கிராமங்களுக்கும் சென்று ஆலோசனைகள் தருவேன்.ஒரு மண்ணைப் பார்த்தவுடன், அது எந்த வகையான பயிர் செய்ய உகந்தது எனக் கண்டறிவதில் நான் கில்லாடி. இதனால், கிராம மக்கள் விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்காக என்னைத் தேடி வருவர். இதற்கிடையே, ஊறுகாய், வற்றல் போன்றவற்றை தயாரித்து எங்கள் பகுதிகளில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் விற்பனை செய்கிறேன். மேலும், டில்லியில் ஆண்டுதோறும் நடக்கும் பன்னாட்டு கண்காட்சியில், "கிசான் சாச்சி உணவுப் பொருட்கள்' என்ற பெயரில் என் தயாரிப்புகளை விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். தற்போதைய ஒரு ஆண்டு, பிசினஸ் டர்ன் ஓவர் ஆறு லட்சம் ரூபாய்.நான் அடைந்த இந்த பலனை, மற்ற கிராம பெண்களும் அடைய வேண்டும் என்பதற்காக, பெண்கள் சுயஉதவிக் குழுக்களை துவங்கி, பயிற்சி அளிக்கிறேன். இதுவரை, 350 பேர் என்னால் பலன் அடைந்துள்ளனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக