வியாழன், 10 மே, 2012

"என்னை நம்புகின்றனர்!'

சொல்கிறார்கள்

"என்னை நம்புகின்றனர்!'


திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் உறுப்பினர் ஜெயந்தி ராணி: உறையூரிலுள்ள பள்ளியில் ஒன்றில், படிக்கும் மாணவி ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, தனக்கு விருப்பமில்லாத திருமணத்திற்கு குடும்பத்தினர் வற்புறுத்துவதாக தெரிவித்தார். மேலும், "பத்தாம் வகுப்பு தேர்வில், பள்ளியில் மூன்றாவதாக வந்துள்ளேன். எனக்கு மேற்கொண்டு படிக்கத்தான் விருப்பம்' என்றாள். உடனே, எங்கள் அமைப்பின் மூலம், ஆட்களை அனுப்பி, தகவல்களைப் பெற்றேன்.அப்போது தான், குழந்தை திருமண தடைச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. கலெக்டரின் உதவியுடன், திருமணத்தை தடுத்து நிறுத்தினோம். இப்போது அந்த மாணவி, வேறு பள்ளியில் எங்கள் பாதுகாப்பில் பிளஸ் 2 படிக்கிறார். அந்தச் செய்தி, பத்திரிகைகளில் பிரபலமாக வந்தது.அதன் பின், என் வேலை, "மைனர் பெண்களின் திருமணத்தை தடுத்து நிறுத்துவது' என்றாகிவிட்டது. எங்காவது சிறுமியருக்குத் திருமணம் நடப்பதாகத் தெரிந்தால், உடனே யாராவது எப்படியாவது எனக்குத் தகவல் சொல்லிவிடுவர்.எனக்கு விஷயம் தெரிந்தால், அந்தத் திருமணத்தை தடுத்து, சிறுமியை காப்பாற்றி விடுவேன் என, அவர்கள் நம்புகின்றனர். நானும் எனக்குக் கிடைக்கும் தகவல்களை உதாசீனப்படுத்தாமல், உடனே நடவடிக்கை எடுக்கிறேன்.அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்துவதில், அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது.அதன்படி, திருமணமான இரண்டு மாணவியரை மீட்டு, அவர்களின் திருமணம் செல்லாது என, அவர்களின் குடும்பத்தாரிடம் எடுத்துச் சொல்லி, அப்பெண்கள் மேற்கொண்டு படிக்கவும் வழி செய்துள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக