ஞாயிறு, 15 ஜனவரி, 2012

Youth Stone: உன்னைக் கல் தேடுதே: காளையர்களைத் தேடும் இளவட்டக்கல்


 உன்னைக் கல் தேடுதே: காளையர்களைத் தேடும் இளவட்டக்கல்


"கல்லைத் தூக்கு கருப்பட்டி தாறேன்'... இந்த பாடல் நினைவிருக்கிறதா? சிறுவயதில் தட்டானைப் பிடித்து அதன் வாலில் நூலை கட்டி, தரையில் சிறு கல்லை வைத்து, "கல்லைத் தூக்கு கருப்பட்டி தாறேன்' என பாடியிருப்போம். தட்டானும் கல்லைத் தூக்கும். ஆனால் யாரும் கருப்பட்டி தரமாட்டார்கள். "ஏய் சொன்னேன்ல...' என, உற்சாகமாக துள்ளி மகிழ்ந்தனர், அந்தக்கால சிறுவர்கள்.

கல்லைத் தூக்கிய தட்டானுக்கு கருப்பட்டி கிடைக்காவிட்டாலும், கல்லைத் தூக்கும் இளைஞனுக்கு பெண் கொடுத்தது, ஒருகாலம். இப்போதும் ஒருசில கிராமங்களில் "இளவட்டக் கல்லை' தூக்கும் போட்டி வைக்கப்படுகிறது. ஆனால் கல்லை நம்பி, பெண் கொடுப்பதில்லை. மதுரையில் கடந்த எட்டாண்டுகளாக, இளவட்டக் கல்லையே மறந்து போன, கிராமத்தை தேடினோம். கள்ளிக்குடி அருகே எம்.புளியங்குளம். ஒற்றையடி தார்ரோட்டில், இருபக்கமும் பஞ்சமின்றி பசுமை புகழ் பாடியது, கிராமம். ஆங்காங்கே சிறுகோவில்களில் "ஊர்க் காவலன்' சாமி கையில் அரிவாளுடன், அருகில் வெள்ளைக் குதிரையுடன் காட்சி தருகிறார். ஊர்க்காவலன் சாமி கோயிலின் சுவரை ஒட்டிய மணல் பகுதியில் கல் புதைக்கப்பட்டிருந்தது. காரணம் கேட்ட போது, "எட்டு வருஷமா... யாருமே கல்லைத் தூக்கலை. அதான் யாரோ புதைச்சிட்டாங்க. இந்த பொங்கலில் இருந்து, கல் தூக்கும் போட்டி நடத்துவோம்' என்று உறுதியளித்தார், பஞ்., தலைவர் கணேசமூர்த்தி. "அப்படினா... கள்ளிக்குடி மண்ணை காப்பாத்த யாருமே இல்லையா...' என்றதும், துள்ளிக் கொண்டு சீறிவந்தார் சரவணபாண்டி. மதுரை மண் என்றாலும், கடந்தாண்டு "மிஸ்டர் விருதுநகர்' பட்டம் பெற்ற ஆணழகனாம்.

கல்லைத் தொட்டு தடவியவாறே இரு கைகளாலும் அணைத்தார். அப்படியே நெஞ்சில் ஏற்றி தோளுக்கு மாற்றி, பின்புறமாய் எறிந்தார். மண்ணில் அரையடி பள்ளம் உண்டானது. தோளுக்கு தோள் மாற்ற முடியுமா...என்ற அடுத்த சவாலையும், எளிதாக செய்து முடித்தார். "எங்கே... தலைக்கு மேலே கல்லைத் தூக்குங்க' என்றதும், "நீங்க கல்லைத் தூக்கி கையில் வைங்க... நான் தலைக்கு மேலே தூக்குறேன்,' என்றதும், "விடுங்க... நாமென்ன அப்படியா பழகுறோம்' என்று சமாளித்தோம்.

சரவணப்பாண்டியை பார்த்தும், பலருக்கும் கல் தூக்கும் ஆசை வந்தது. சுற்றியுள்ளோர் உசுப்பேத்த இரண்டு மாரிச்சாமிகள், செந்தில்குமார், முத்துப்பாண்டி ஆகியோர் "தம்' கட்டி கல்லைத் தூக்கினர். வைரவலிங்கம் வந்தபோது, பின்னாலிருந்த ஒருவர், " அட போப்பா... இளவட்ட கல்லே, இவரு வயித்துக்குள்ள அமுங்கிப் போகும்' என சீண்டிவிட, கோபத்துடன் தலைக்கு மேலே கல்லைத் தூக்கி, கண்ணை உருட்டினார். மெல்ல மலையேற்றி, கீழே போட வைத்தோம். "அசைக்கவே முடியல... அந்த காலத்துல தூக்கினேன்' என்று கல்லைத் தொட்டு பார்த்து, கழன்று கொண்டார், கந்தசாமி. பஞ்., தலைவர், பாதி வரை கல்லைத் தூக்கி பார்த்து, கீழே போட்டு விட்டார்.
அந்தக் காலத்துல, இளவட்டக் கல்லை யாராவது மிதிச்சுட்டா... கட்டாயம் கல்லைத் தூக்கணும். இல்லைனா அபராதம் கட்டணும். புதுமாப்பிள்ளைக்கு கருப்பட்டி பணியாரம் செஞ்சு கொடுத்து, கல்லை தூக்கச் சொல்வோம், என்றார் மாரிமுத்து. "தூக்கலைனா, பொண்ணை மாப்பிள்ளையோட அனுப்ப மாட்டீங்க தானே' என்றதும், "ஆங்... கட்டிக் கொடுத்தாச்சு, கல்லைத் தூக்குனா என்ன... தூக்காட்டா... என்ன...' என்று சமாளித்தார். எல்லோருமே தூக்கியதால், சினிமால காட்டுற மாதிரி "டூப்பு கல்லோ' என, கல்லின் மீது சந்தேகம் வந்தது. தராசுக்காக, அரைமணி நேரம் காத்திருந்து, எடை பார்த்தோம். 76 கிலோ காட்டியது. கிராமத்து பாஷையில், அரைப் பொதி எடை, ஒரு நெல் மூட்டையின் கனம் இருந்தது. பரவாயில்ல...உங்க எடையளவு இருந்ததால தூக்கிட்டீங்க... என்றதும் "சும்மா... ஒரு கைப்பிடிச்சு தூக்கி பாருங்க' என்றனர். மொழு மொழு உருண்டை கல்லை, எந்தப் பக்கம் பிடிப்பதென தெரியாமல், கல்லைப் பார்த்து கையசைத்து கிளம்பினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக