புதன், 18 ஜனவரி, 2012

யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை!

ஞாயிறு கொண்டாட்டம்
யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை!

First Published : 15 Jan 2012 12:00:00 AM IST


கல்யாண வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. எதிர்பார்த்த இடத்தில இருந்து பணம் கிடைக்கலை. தாலி வாங்கணும். அதுக்குப் பணமில்லை. இப்ப என்ன செய்றதுன்னே தெரியலை''தன் எதிரே நின்று கண் கலங்கப் பேசிக் கொண்டிருந்தவரின் தோள்களைத் தட்டி, அமைதியாக இருக்கச் சொல்கிறார், சோமயாஜுலு. வீட்டுக்கு வந்து தன் இக்கட்டானநிலையைச் சொல்லி உதவி கேட்டவருக்கு எப்படியும் உதவ வேண்டும் என்ற எண்ணம். ஆனால் சோமயாஜுலுவிடம் அப்போது பணம் இல்லை. வீட்டின் உள்ளே சமையலறையில் இருந்த மனைவி மீனாட்சி அம்மாளை அழைக்கிறார். எதற்காகக் கூப்பிடுகிறார் என்று தெரியாமல் மரியாதையோடு வந்து நின்ற மனைவியிடம், ""தாலியைக் கழட்டிக் குடு. அதுக்குப் பதிலாக மஞ்சள் கயிறைக் கட்டிக்கோ'' என்கிறார். ஏன்? எதற்கு? என்று கேட்காமல் கழட்டிக் கொடுக்கிறார் மீனாட்சி அம்மாள்.இது கதையல்ல. உண்மை நிகழ்ச்சி. சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.என்.சோமயாஜுலுவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்தான் இது.மதுரை டவுன்ஹால் ரோடு - மேலமாசி வீதி சந்திப்பு. 1927 ஆம் ஆண்டு. ஆறு, ஏழு பேர் கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு கையில் நீளமான வாள்களை ஏந்திக் கொண்டு ஊர்வலமாக வருகிறார்கள். அப்போது ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியர்கள் 6 அல்லது 8 அங்குல அளவுதான் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்று தடை உத்தரவு போட்டிருந்தது. அதை எதிர்த்துத்தான் அந்த ஊர்வலம். ஊர்வலமாக வந்தவர்களில் சோமயாஜுலுவும் ஒருவர்.அதே ஆண்டு. சென்னையில் இன்று ஸ்பென்சர் பிளாசா இருக்குமிடத்துக்கு எதிரே ஒரு சிலை பிரிட்டிஷாரால் வைக்கப்பட்டது. அது 1857 முதல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களைக் கொன்ற கர்னல் நீலன் என்பவரின் சிலை. அந்தச் சிலையை உடைக்கத் திட்டமிட்டார் சோமயாஜுலு. சிலையின் மேலே இருவர் ஏறி அதை உடைத்துக் கொண்டிருக்கும்போது, துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு காவல்துறையினர் வந்துவிடுகின்றனர். "சுடத்தானே வந்தாய், சுடு' நெஞ்சைத் திறந்து காட்டுகிறார் சோமயாஜுலு.1931 ஆம் ஆண்டு. கள்ளுக்கடை மறியல் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கோவில்பட்டியில் சோமயாஜுலு நடத்திய கள்ளுக்கடை மறியல் போராட்டம் நாட்டின் கவனத்தைக் கவர்ந்த ஒன்று.தூத்துக்குடி சோமயாஜுலுவும்தொண்டர் சுப்பையாவும் பேசிவரசாத்துக்குடி பழச்சாறு போலே சனங்கள்உள்ளத்தில் வீறு வரஎன்று சோமயாஜுலுவின் பேச்சுத் திறனைப் பற்றி ஒரு பாடலே உள்ளது.சோமயாஜுலு இப்போது இல்லை. 1990 இல் மறைந்துவிட்டார். உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் நாட்டுக்காகப் போராடிய சோமயாஜுலு போன்ற தியாகிகளை இந்த நாடு எந்த அளவுக்கு நினைவில் வைத்திருக்கிறது? கேள்விகள் மனதைக் கனக்க வைக்க, சென்னை கொரட்டூர் உள்ள சோமயாஜுலுவின் மகள் ராஜம் ராமகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினோம்:""அப்பாவின் சொந்த ஊர் திருச்செந்தூருக்கு அருகே உள்ள ஆத்தூர். சோமசுந்தரம், சீதையம்மாள் தம்பதியின் மகன். 1902 இல் பிறந்தார். சிறுவயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் அப்பா ஈடுபட்டு விட்டார். எப்போது பார்த்தாலும் போராட்டம் நடத்திக் கொண்டு, சிறைக்குச் சென்று கொண்டிருந்த அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. அவருடைய 42 ஆம் வயதில்தான் திருமணம் நடந்திருக்கிறது. என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு பேர் பிறந்தோம். அதில் சீதா மூத்தவர். அண்ணன் சோமசுந்தரம், நான், தங்கைகள் கோமதி, விஜயா, தம்பி ராமகிருஷ்ணகுமார் ஆகிய அறுவரில் சீதாவும், ராமகிருஷ்ணகுமாரும் மறைந்துவிட்டனர். நாங்கள் நால்வர் மட்டுமே இப்போது இருக்கிறோம்.சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்காக அரசு வழங்கிய இரண்டு ஏக்கர் நிலத்தை அப்பா வாங்க மறுத்துவிட்டார். நான் நாட்டுக்காக உழைத்ததற்கு விலை தேவையில்லை என்று சொன்னார் அப்பா. ஆனால் அகில இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கம் சார்பாகவும், தமிழகச் சுதந்திரப் போராட்ட வீரர் சங்கம் சார்பாகவும் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பென்ஷன் வாங்கிக் கொடுக்க அப்பா தவறவில்லை.அப்பா சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் சுப்பிரமணிய சிவாவிடம் நெருக்கமான பழக்கம். சுப்பிரமணியசிவாவின் நாடகங்களிலும் நடித்திருக்கிறார். அதில் "தேசிங்கு ராஜா' நாடகத்தில் பெண் வேடம். தானே "இராஜ சுகுணா' என்ற நாடகத்தை எழுதி இயக்கியுமிருக்கிறார்.அப்பா படித்தது வெறும் பத்தாம் வகுப்புதான். ஆனால் ஆங்கில மொழி அறிவு மிகவும் அதிகம். ஒருமுறை சங்கரன் கோவிலுக்கு நேரு வந்திருந்தார். கூட்டத்தில் அவர் பேசும்போது மொழி தெரியாததால் மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. அதற்குப் பின்பு நேரு பேசியதை அப்பா தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லியிருக்கிறார். கூட்டத்தினர் மத்தியில் அவ்வளவு மகிழ்ச்சி. கைதட்டல். நேரு, வியந்து போயிருக்கிறார்.சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் பலமுறை சிறை சென்றிருக்கிறார் அப்பா. நீலன் சிலையை உடைக்க முயன்றதற்காக 19 மாதம் சிறைத் தண்டனை. கோவில்பட்டியில் கள்ளுக் கடை மறியலுக்காகக் கைது. 124 ஏ, 153 பிரிவின் கீழ் ராஜ துவேஷ வழக்குப் போட்டனர் வெள்ளைக்காரர்கள். அப்பாவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியவர்கள் யார் தெரியுமா? வ.உ.சி., சோமசுந்தரபாரதியார், கிருஷ்ணசாமி பாரதி ஆகியோர்.பாரதியாருடன் நெருங்கிப் பழகிய அப்பா, அவர் பாடல்கள் என்றால் பைத்தியமாக இருந்திருக்கிறார்.போகிற இடங்களில் எல்லாம் பாரதியாரின் பாடல்களைப் பாட எல்லாருக்கும் கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, எட்டயபுரத்தில் பாரதி மணி மண்டபத் திறப்பு விழாவை முன்னின்று நடத்தியிருக்கிறார். இதைப் பற்றி கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்.சுதந்திரத்துக்குப் பின்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அப்பா 1952 -57 காலகட்டத்தில் திருநெல்வேலி எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பின்பு நடைபெற்ற தேர்தல்களில் அவர் ஏனோ போட்டியிடவில்லை.காங்கிரஸ் இயக்கத்தில் முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள் இருந்தார்கள். அவர்களில் என் அப்பாவும் ஒருவர். தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டப் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார். அப்போது ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ் போன்றவர்களும் அப்பாவுடன் அந்த அமைப்பில் இருந்தனர்.அதுமட்டுமல்ல, தாழையூத்தில் உள்ள இந்தியா சிமெண்ட் தொழிலாளர் சங்கத்தில் தலைவராகவும் இருந்திருக்கிறார்.அப்பாவுக்கு ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கிடையாது. என் சகோதரர்களைப் போலவே என்னையும் சம உரிமை கொடுத்து வளர்த்தார். பெண் பிள்ளைகள் எல்லாம் வீட்டை விட்டுப் போகக் கூடாது என்று கருத்து நிலவிய அந்தக் காலத்தில், என்னைக் கோவையில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்க அனுமதித்தார். தான் அதிகம் படிக்கவில்லை என்றாலும் தன்னுடைய பிள்ளைகள் அதிகம் படிக்க வேண்டும் என்று நினைத்து எல்லாரையும் படிக்க வைத்தார். நாங்கள் எல்லாரும் படித்திருந்தாலும், அரசாங்கத்தில் உள்ள பலர் அப்பாவுக்குத் தெரிந்திருந்தாலும், எங்களை அரசு வேலையில் சேர்த்துவிட அவர் முயலவில்லை. யாரிடமும் சிபாரிசுக்காகக் கெஞ்சுவது அவருக்குப் பிடிக்காத ஒன்று. "நீங்களாகவே வாழ்க்கையில் முன்னேற வேண்டும்' என்று எங்களிடம் சொல்வார். அதனால் நாங்கள் யாருமே அரசுப் பணிக்குச் செல்ல முடியவில்லை. அப்பாவின் 82 ஆவது வயதில் மகாராஷ்டிரா கவர்னராக அவரை நியமிக்க ஆர்.வெங்கட்ராமன் நினைத்தபோது, வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.அப்பா குறைவாகப் படித்திருந்தாலும் நிறையப் புத்தகங்களை எழுதியிருக்கிறார். "நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு', "மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு', "விசுவாமித்திரர்' ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். அவர் ஒரு பத்திரிகையாளரும் கூட. "விஜயா', "நெல்லைச் செய்தி' ஆகிய பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார்.அப்பாவின் புத்தகங்களை தமிழக அரசு அரசுடமையாக்கி வாரிசுகளுக்கு நிதியுதவி தர வேண்டும். அந்த நிதியைக் கொண்டு அப்பா பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவ வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்'' என்றார் ராஜம் ராமகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக