செவ்வாய், 17 ஜனவரி, 2012

வெறித்தனமாகக் கற்றுக் கொண்டேன்!

சொல்கிறார்கள்



மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ள ராஜாத்தி: என் உடன் பிறந்தவர்கள் ஐந்து பெண்கள்; நான் தான் மூத்தப் பெண். தாத்தா காலத்திலேயே, பிழைப்பிற்காக கேரளா போய்விட்டோம். வறுமையிலும், எங்க அப்பா, என்னை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்.டாடா நிறுவனம் நடத்திய, மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்கூடத்தில், டையிங் பிளான்டில் வேலை பார்த்தேன். அங்கு என்னைப் போலவே, மாற்றுத் திறனாளியான பாலமுருகன் என்பவரை, திருமணம் செய்து கொண்டேன். கடந்த, 2004ல், பிழைப்புத் தேடி திருமங்கலம் வந்துவிட்டோம்.நான் மாற்றுத் திறனாளி தானே தவிர, சிறு வயதிலிருந்தே, துறுதுறுன்னு இருப்பேன். விளையாட்டு என்றால், மிகவும் இஷ்டம். மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் பயிற்சி அளிப்பதாக, பத்திரிகையில், விளம்பரம் பார்த்த என் கணவர், அதில் சேரும் படி ஊக்கமளித்தார்.அப்போது நான், இரு குழந்தைகளுக்குத் தாய். எதைப் பற்றியும் கவலைப்படாமல், விளையாட்டுப் பயிற்சியில் சேர்ந்தேன். அங்கு சொல்லிக் கொடுத்ததை, வெறித்தனமாக கற்றுக் கொண்டேன்.கடந்த, 2007ல், மாநில அளவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில், பதக்கங்கள் வாங்கிக் குவித்தேன். கடந்த, 2008ல், லண்டனில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று, ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, இரு பதக்கங்களை வென்றேன்.போட்டி முடிந்து, ஊருக்கு திரும்பிய சில நாட்களில், எனக்கு உடல் நிலை பாதித்தது. மருத்துவ பரிசோதனையில், புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஒரு பக்கம் சக்கர நாற்காலியில் உள்ள கணவர்; மறுபக்கம் வறுமையில் உள்ள குடும்பம். நோயைக் குணப்படுத்தியே தீருவேன் என்று, மாதக் கணக்கில் மருத்துவமனையில் இருந்து, தேறி வந்தேன். தற்போது, மாற்றுத் திறனாளிகளுக்கான, முதல்வர் பதக்க விருது போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக