புதன், 18 ஜனவரி, 2012

பாரதி வருகிறார்!
ஞாயிறு கொண்டாட்டம்
பாரதி வருகிறார்!

First Published : 15 Jan 2012 12:00:00 AM IST

திருச்சி அருகே சமயபுரத்திலுள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகளுக்கிடையே அரங்கேறிய முப்பது நிமிஷ நாடகம் சமூக அவலங்களை அம்பலப்படுத்திக் காட்டியது."பாரதி வருகிறார்' இதுதான் நாடகத்தின் தலைப்பு. மாணவ, மாணவிகளே நடித்த இந்த நாடகத்தை இயக்கியவர் பார்த்திபராஜா. திருப்பத்தூர் கல்லூரிப் பேராசிரியர்.பாரதியாரும், செல்லம்மாளும் உயிர் பெற்று சுதந்திரமடைந்த இந்த தேசத்தைக் காண வருகின்றனர். ஆசை ஆசையாய் இந்த மண்ணில் கால் வைத்த அவர்கள் இங்கு நடைபெறும் நிகழ்வுகளால் படும்பாடுதான் நாடகத்தின் கரு."காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்...' பாடல் பின்னணியில் பாரதியும், செல்லம்மாளும் வருகின்றனர்.""மறைந்து வெகுகாலம் ஆகிய பிறகு நம் தாய்த் தமிழ் நாட்டைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு, நல்ல வாய்ப்புதானே...'' என்கிறார் பாரதி.""ஆமாம்... ஆமாம்...' என ஆமோதிக்கிறார் செல்லம்மாள்.இருவருக்கும் தாகம் எடுக்கிறது. தொலைவில் தெரியும் அடிபம்பில் தண்ணீர் குடிக்க ஆர்வத்துடன் வருகின்றனர். பாரதி குழாயை அடிக்க செல்லம்மாள் தண்ணீர் குடிக்க முற்படுகிறார். தண்ணீர் வரவில்லை; காற்றுதான் வருகிறது. இருவரும் மாறி மாறி அடித்துப் பார்க்கின்றனர்.அந்த வழியே "இஞ்சி இடுப்பழகி...' பாட்டைப் பாடிக் கொண்டே செல்லும் ஓர் இளைஞன், இந்த இருவரையும் பார்த்துவிட்டு "யாருய்யா நீங்க, கார்ப்பரேஷன் குழாயைக் கழட்டிட்டுப் போக பார்க்குறீங்களா?' என அதட்டுகிறார்."இல்லை இல்லை, குழாயில் தண்ணீர் வரவில்லை' என்கிறார் பாரதி.""அடப்பாவி, என்னிக்குயா கார்ப்பரேஷன் குழாயில தண்ணீர் வந்திருக்கு?'' என்கிறார் வழிப்போக்கன்.ஒரு வழியாக பெட்டிக் கடைக்கு வழிகாட்டிவிட்டார் அவர். பெட்டிக் கடைக்காரரிடம் "அய்யா வணக்கம்' என்கிறார் பாரதி. செல்லம்மாளை தன் மனைவியென அறிமுகம் செய்து வைக்கிறார். "இருக்கட்டும் இருக்கட்டும்... என்ன வேணும்?' என்கிறார் சாவகாசமாய் பெட்டிக் கடைக்காரர்.""குடிப்பதற்கு...'' என்று பாரதி சொல்லி முடிப்பதற்குள், "அக்வாபினா' வழங்கப்பட்டது. குடித்துவிட்டு காலி பாட்டிலை பத்திரமாக கடைக்காரரிடம் கொடுக்கிறார் பாரதி. அப்போதே கடைக்காரருக்கு ஏதோ புரிந்துவிட்டது.""மிக்க நன்றி அய்யா, சென்று வருகிறோம்'' என்று கூறிவிட்டு விடைபெறுகிறார்கள் பாரதியும், செல்லம்மாளும்!கழுத்தில் கிடந்த துண்டைப் போட்டு மடக்கினார் பெட்டிக் கடைக்காரர்.""தண்ணி பாட்டிலுக்கு பதினாறு ரூபாய் எண்ணி வெச்சிட்டு நடையைக் கட்டுங்க... இல்லேன்னா இங்கேருந்து போவமுடியாது...'' என்கிறார்.பாரதி இதை எதிர்பார்த்திருக்கவில்லை.""பார்த்தாயா செல்லம்மா, தண்ணீரும் விலையாகிவிட்டது. காற்றுக்கும் விலை வைத்துவிடுவார்கள் போலிருக்கிறதே... அவமானம், அவமானம், வெட்கக்கேடு..'' என்கிறார் பாரதி.""பணம் இல்லை...'' என்றார் பாரதி.""போய்த்தொலை...'' என்று விட்டுவிடுகிறார் அந்த நல்ல மனதுக் கடைக்காரர்!வழியில் அரசியல்வாதிகள் நடத்தும் பாரதி விழா. ஓரமாக நின்று பார்க்கின்றனர். முன்னுரைகள் முடிந்து பேசத் தொடங்குகிறார் அந்தத் தலைவர்.""பாரதியார் ஒரு தொழிலதிபர்..' என்றதும் ஏகக் கைத்தட்டல். (உண்மையில் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களிடமிருந்தும்)"இந்தியாவில் எத்தனையோ தொழிற்சாலைகளை நிறுவியிருக்கிறார் பாரதி. அவர் தொடங்காத தொழில் இல்லை. நான் அனில் அம்பானியையும், முகேஷ் அம்பானியையும் கேட்கிறேன்... இன்று பாரதி இருந்திருந்தால்... அவரோடு உங்களால் போட்டி போட்டிருக்க முடியுமா?'' - முழங்குகிறார் அரசியல்வாதி.வெறுத்துப் போன பாரதி, கூட்டத்தில் குறுக்கே நுழைந்தே விட்டார்."கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரன் நுழைந்துவிட்டான், அவனை கல்லால் அடிக்க வேண்டாம், சோடா பாட்டில் வீச வேண்டாம்' என அந்தத் தலைவர் சொல்லச் சொல்ல, அத்தனையும் பாரதிக்கு நடக்கிறது.அங்கே பரிதாபமாக காவல் பணியில் இருந்த காவலர்கள் பாரதியையும், செல்லம்மாளையும் விசாரிக்கின்றனர்.""யார் நீ, என்ன பண்ற?''""நான் பாரதி. இது என் மனைவி செல்லம்மாள். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்கிறார் பாரதி.இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். பாரதியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.அப்போது வந்த ஒருவர் தனது கவிதையை யாரோ திருடிவிட்டதாகப் புகார் கூறுகிறார். என்ன கவிதை என்று கேட்டதற்கு, "ஆடுவோமே பள்ளு பாடுவோமே...' என அந்தக் கவிஞர் மெல்லத் தொடங்க, பாரதி முழுவதுமாகப் பாடி முடிக்கிறார்.இதனால் கவிதையைத் திருடியவர் பாரதி என்று முடிவு செய்கின்றனர். "இது என் கவிதை அய்யா' என்று விளக்கம் தருகிறார் பாரதி. வழக்கம்போல போலீஸார் சில விசாரணைகளைச் செய்து, பாரதி போலிக் கவிஞன் என்று முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.காவல் துறை அதிகாரி மிரட்டுகிறார். வெறுப்பின் உச்சத்தில் வெளியேறுகின்றனர் பாரதியும், செல்லம்மாளும். வெளியே அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார் பாரதி. அந்த வழியே சென்ற குழந்தைகளிடம் ""நான் யாரென்று தெரிகிறதா?'' என்று கேட்கிறார்.""அய்யோ பூச்சாண்டி..'' என்கின்றனர்.""குழந்தைகளே நான் பாரதி'' என்கிறார்.""நிச்சயமாக நீ பாரதியாக இருக்க முடியாது, எங்கள் பாரதி அழமாட்டார், வீரமாகப் பாடியவர்'' என்று குழந்தைகள் சொன்னதும், குழந்தைகளை அணைத்துக் கொள்கிறார் பாரதி.""குழந்தைகள் என்னை மனதில் கொண்டிருக்கிறார்கள். எதிர்கால இந்தியா நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது'' என்கிறார் பாரதி.""பாரதின்னா துடிப்பு, பாரதின்னா வேகம், பாரதின்னா சத்தியம், பாரதின்னா அறிவுத் தீட்சண்யம்.... இங்கே அப்படியான பாரதிகள் ஏராளம் உண்டு... பத்தாய், நூறாய், ஆயிரமாய், லட்சமாய்... இதோ... இதோ...'' எனச் சொல்லச் சொல்ல, பாரதி வேஷமிட்ட ஏராளமான குழந்தைகள் மேடையில் ஏறுகின்றனர். நாடகம் நிறைவு பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக