திங்கள், 16 ஜனவரி, 2012

prisons becoming shopping complex:குற்றம் செய்தவர்கள் திருந்துவதற்காக உருவாக்கப்பட்ட மத்திய சிறைச்சாலைகள், தற்போது, "தாபா கடை' ரேஞ்சில் செயல்படுகிறது. பீடிக்கட்டு, 25 ரூபாய்க்கும், குடல்கறி, 50 ரூபாய்க்கும், மொபைலில் ஒரு கால் பேச, 10 ரூபாய் என்ற வகையிலும், அங்கு பணியாற்றும் காவலர்கள் மூலம் அரங்கேறி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், சென்னை, மதுரை, வேலூர், சேலம், பாளையங்கோட்டை, கடலூர், திருச்சி, கோவை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள், திருந்தி வெளியில் செல்ல வேண்டும் என்பதற்காக சிறைக்குள் அடைக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில், கட்டுப்பாடுகளுடன் செயல்பட்ட சிறைச்சாலைகள், அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்தபின், சுகமாக வாழும் சுற்றுலாத்தலம் போல் மாறிவிட்டது. ஒன்றும் தெரியாத அப்பாவிகள், ஆத்திரத்தில் அறிவை இழந்து தண்டனைக்கு ஆளாகுபவர்கள், மத்திய சிறைக்குள் செல்லும்போது, அவர்களை சீனியர் கைதிகள் அடிமைப்போல் நடத்தும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால், பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.

ஒவ்வொரு சிறையிலும், கைதிகளை பார்க்கப்போகும் உறவினர்களிடத்தில், அங்குள்ள காவலர்கள், 100 ரூபாய் வரை வசூலிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, காவலர்கள், நீதிமன்றம் செல்லும் கைதிகள் மூலம், பீடிக்கட்டு, கஞ்சா, மொபைல், சிம்கார்டு, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் வாங்கி வரப்பட்டு, கூடுதல் விலைக்கு சிறையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஒரு பீடிக்கட்டின் விலை, 25 ரூபாய், மொபைலில் பேசுவதற்கு, 10 ரூபாய், கஞ்சா பொட்டலம், 50 ரூபாய், குடல்கறி(போட்டி), 50 ரூபாய்க்கு விற்பதாகவும், ஜாமினில் வெளியில் வரும் கைதிகள் மூலம் தெரியவந்துள்ளது.

சேலம், கோவை, மதுரை, கடலூர், திருச்சி உள்ளிட்ட மத்திய சிறையில், இந்த விற்பனை தற்போது கனஜோராக நடந்து வருகிறது. மொபைல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்படுவதாக, சிறை நிர்வாகம் கணக்குகாட்டினாலும், மொபைல் மீண்டும் எவ்வாறு உள்ளே செல்கிறது என்பதை கவனிக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். ஓரிரு பெண்கள் கிளைச்சிறைகளிலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. உயர் அதிகாரிகள், கைதிகளிடம் சிறையில் உள்ள நிலை குறித்து விசாரிக்கும்போது, உண்மையை சொல்வதற்கு, அங்குள்ள காவலர்கள் தரப்பில் தடை போடப்படுகிறது. மீறி உண்மையை கூறினால், அவர்களை பழிவாங்கும் செயல் அரங்கேறுகிறது. நான்கு சுவற்றுக்குள் நடப்பது வெளி உலகத்துக்கு தெரியாது என்பதால், சிறைத்துறை அதிகாரிகளும், காவலர்களும், தங்கள் இஷ்டத்துக்கு செயல்படுகின்றனர் என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.

சேலம் மத்திய சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறைச்சாலை என்பது முன்பை விட இப்போது சுகபோகமாக வாழும் வகையில் உள்ளது. 2003ம் ஆண்டுக்கு முன், பீடி, மூக்குப்பொடி, ஹான்ஸ் போன்றவை கேன்டீன் மூலமாகவே விற்பனை செய்தோம். அதன்பின், அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. சிறை வளாகத்தில் குறிப்பிட்ட இடங்களில் பீடி குடிக்கக்கூடாது என்று உள்ளது. ஆனாலும், சிலர் குடித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். நாங்கள் ரொம்ப நெருக்கடி கொடுத்தால், கலவரம் தான் வரும். பல சிறைச்சாலைகளில், பீடியால் தான் பிரச்னையே உருவாகுகிறது. இப்போது, கைதிகளுக்கு, கேன்டீனில், காலை, 7 மணிக்கு சம்சா, 8 மணிக்கு இட்லி, 10 மணிக்கு டீ, வடை, மதியம் 1 மணிக்கு, சிறை மூலம் வழங்கப்படும் சாப்பாடு, மாலை 4 மணிக்கு டீ, 6 மணிக்கு, இரவு 8 மணிக்கு உப்புமா, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு உறவினர்கள் மூலம் கொடுக்கும் பணத்தை பராமரிப்பதற்கென்றே தனி அக்கவுண்ட் உள்ளது.

கைதிகளை பார்க்கும் உறவினர்கள், காவலர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை. சிலர் செய்யும் தவறால் மொத்த சிறை நிர்வாகத்துக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது. கறியை பொறுத்தமட்டில், புதன்கிழமைகளில் கொடுக்கிறோம். அதை சிலர் கூடுதல் விலைக்கு, விற்பனை செய்வர். எதற்காக தப்பு செய்தவன், அடிக்கடி சிறைக்குள் வருகிறான். எல்லாவித சவுகரியங்களும் இருக்கிறதனால் தான். கைதிகள் திருந்தியதெல்லாம் அந்த காலம். யாராவது பொது நல மனு போட்டால், சிறைக்குள் கட்டுப்பாடுகள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக