ஞாயிறு, 15 ஜனவரி, 2012



ஆங்கிலேயரின் ஆட்சிக்காலமான 19ம் நூற்றாண்டில் தென்தமிழகத்தில் மானாவாரி விவசாயம்செய்து வந்தனர். பருவ மழை பொய்த்ததால் 1806ம் ஆண்டுமுதல் 1840ம் ஆண்டு வரை பெரும் பஞ்சம் தமிழகத்தை ஆட்டிப்படைத்தது. நிலைமையை சரிசெய்ய ஆங்கிலேய அரசு பர்மாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து வினியோகம் செய்தது. இருந்தாலும், நிலைமை சீரடையவில்லை. கடும் பஞ்சத்தால் வரிவசூல் பாதிக்கப்பட்ட நிலையில், நீர்வள ஆதாரங்களை அதிகரிக்க பொறியாளர்களுக்கு ஆங்கில அரசு உத்தரவிட்டது.

ஆய்வு: துவக்கத்தில் ஆங்கிலேய பொறியாளர்கள் பலர் இப்பகுதியில் அணை கட்டுவதற்கான பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். கூடுதல் செலவு செய்து அணை கட்டமுடியாது என சில பொறியாளர்கள் திட்டத்தை கிடப்பில் போட்டனர். எப்படியும் அணை கட்டியே தீர வேண்டும் எனவும், யாராவது உருப்படியான திட்டத்தை கொண்டு வரமாட்டார்களா என அனைவரும் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் "கேப்டன் பென்னி குக்' வந்தார்.

பென்னிகுக்: இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் 1841ம்ஆண்டு ஜனவரி 15ம் தேதி பிறந்தார் பென்னிகுக். இவரது தந்தை பெயரும் பென்னிகுக். தாயின் பெயர் சாரா. இவருக்கு ஐந்து சகோதரர்கள். மூன்று சகோதரிகள்.

ராணுவப்பணி: பென்னிகுக் பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு கேப்டன். பிரிட்டனில் பொறியியல் படித்தவர். குறிப்பாக கட்டட வரையியலை ஆழ்ந்து வாசித்தவர். பொறியியல் படிப்பை முடித்து 1858ல் இந்தியா வந்தார். இந்தியாவில் மூன்று ஆண்டுகள் வேலை செய்து, உயர்கல்வி படிப்பதற்காக மீண்டும் லண்டன் சென்றார். உயர்கல்வி முடித்து 1861ல் மீண்டும் இந்தியா வந்தார். இரண்டு ஆண்டுகள் கழிவதற்குள் அபிசீனியாவில் போர் வெடித்ததால் இவரை போராட்டக்களத்தில் குதிக்க அழைத்தது பிரிட்டன் ராணுவம். நன்கு படித்தவர் என்பதால் துவக்கத்திலேயே இவர் கமாண்டர் பதவியில் இருந்து மாறி ஒரு கேப்டனாக வளர்ச்சியடைந்தார்.

முல்லைப்பெரியாறுக்காக வந்த பென்னிகுக்: 1867ல் மீண்டும் இந்தியாவுக்கு வந்த இவர் பெரியாறு அணை சர்வே திட்ட அதிகாரியாக பணியாற்றினார். பெரியாறு அணை கட்ட வேண்டும். எங்கே கட்டினால் சரியாக இருக்கும் என்பதை கண்டுபிடித்து சொல்ல வேண்டியது இவரின் பணி. அது தவிர அணை கட்ட எவ்வளவு தொகை செலவாகும் என்பதையும் தோராயமாக சொல்ல வேண்டும். அணையின் உயரம் என்ன? தண்ணீர் தேங்கும் அளவு என்ன? அணையில் நீர் நிரம்பும் போது நீரில் மூழ்கும் வனப்பகுதியின் பரப்பளவு எவ்வளவு? எத்தனை கூலியாட்கள் தேவைப்படுவார்கள், அவர்களை எங்கே தங்க வைப்பது? அணையின் கட்டுமானப்பணிகளுக்காக சுண்ணாம்புக்கற்கள் எங்கே கிடைக்கும், அதை எப்படி எடுப்பது, கற்களை எங்கே வேக வைப்பது? போன்ற பல்வேறு கேள்விகளையும் எழுதி வைத்துக் கொண்டு, விடை தேடி அலைய ஆரம்பித்தார் பென்னிகுக்.

கருங்கல் அணை: கட்டினால் கருங்கல் அணைதான் கட்ட வேண்டும் எனற முடிவுக்கு வந்தார் பென்னி குக். மோல்ஸ்வொர்த் பார்முலாதான் அதற்கு உகந்தது என்பதையும் அவர் கண்டுபிடித்தார். அணையை வடிவமைக்கும் பணியைத் தொடங்கினார். அணை கட்டும் போது பல்வேறு இடைஞ்சல்கள் குறிக்கிட்டது. ஆண்டு முழுவதும் அணை கட்டுமானப் பணிகளை செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. காரணம் மழை அடிக்கடி குறுக்கிடுவதால் ஆண்டிற்கு 200 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடியும். அணை கட்டுவதற்காக கூடலூர் அருகே குறுவனூத்து என்னும் பகுதியில் சுண்ணாம்புக் கற்கள் இருப்பது கண்டு பிடித்து அதனைக் கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தினார்.

நம்பிக்கை: ஒட்டு மொத்தத் திட்டத்தையும் உள்ளங்கைக்குள் வைத்திருந்த பென்னிகுக், அபரிமிதமான நம்பிக்கையுடன் அணையை கட்டி முடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் அணை கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டார். அணை கட்டுமானப் பணிகள் நடக்கும் போது வனவிலங்குகள் தொந்தரவு, கடும் பனி, அட்டைப்பூச்சிகளின் தொந்தரவு போன்ற பல்வேறு இடைஞ்சல்களில் தொழிலாளர்களை வைத்து பணியை செய்து வந்தார். அணை கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் போது 1889 டிச.17ல் கன மழை பெய்தது. பல மணி நேரம் தொடர்ந்து பெய்த கன மழையால் அணை பலத்த சேதமடைந்தது. இதைக் கண்டு மனம் தளராத பென்னிகுக் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று தனது மனைவியுடன் முகாமிட்டு அணை கட்டுமானப் பணியை தொடர்ந்தார்.

அற்புதம்: முல்லைப் பெரியாறு அணை என்பது பென்னி குக்கைப் பொறுத்தவரை ஒரு கட்டுமானம் அல்ல. செய்து முடித்து விட்டு ஊர்ப் போய்ச் சேர வேண்டிய ஒரு பணியாக அவர் நினைக்கவில்லை. இது மக்களின் வாழ்வாதாரம். பல ஆயிரம் ஏக்கர் நிலத்தைச் செம்மைப்படுத்தப்போகும் அற்புதம். பலவேறு இன்னல்களிடையே, மிகுந்த சிரமங்களுக்கு நடுவே முல்லைப்பெரியாறு அணையைக் கட்டி முடித்தார் பென்னி குக்.

1895 அக்.10: வரலாற்றுப் பதிவுகளில் நிரந்தரமாக தங்கிப்போன தினம். மாலை 6 மணிக்கு சென்னை ராஜதானியின் கவர்னர் லார்ட் வென்லாக், தன் படை பரிவாரங்கள் புடை சூழ தேக்கடிக்கு வந்து சேர்ந்தார். முல்லைப்பெரியாறு அணையைத் திறந்து வைத்தார். அணையில் இருந்து சீறிப்பாய்ந்து நீர் வழிந்தோடுகிறது. பென்னிகுக்கும், அவரது மனைவியும் ஆனந்தக் கண்ணீருடன் அணையைப் பார்த்தனர். மனித நடமாட்டமே இல்லாத மலைப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டி, மலையைக் குடைந்து, சுரங்கம் வெட்டி ஆற்றின் திசையையே திருப்பியது, அசுர சாதனைதான். இத்தகைய முல்லைப்பெரியாறு அணை கட்டடக்கலையில் ஓர் அற்புதம்தான். மக்கள் நீர்வளம் பெற்று, தன்னிறைவுடன் வாழ வேண்டும் என்பதுதான், பென்னிகுக்கின் கனவு. அந்தக் கனவை நனவாக்கத்தான் தன் சொத்துக்களை விற்று அணையைக் கட்டி முடித்தார். எந்தவித ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் அணையை உருவாக்கினார் பென்னிகுக். தமிழக விவசாயிகளின் கடவுளான பென்னிகுக் ஸ்காட்லாந்தில் 1899ம் ஆண்டு இறந்தார். உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்திலும், தேக்கடி ஆய்வாளர் மாளிகை மற்றும் பெரியாறு அணையிலும், மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் பென்னிகுக்கின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடலூர் லோயர் கேம்பில் பென்னிகுக் மணிமண்டபம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக