ஞாயிறு, 15 ஜனவரி, 2012

solkiraarkal, dinamalar: நல்ல நிலைமை வரும்





"ஆண்கள் அலட்டிக்கொள்வதில்லை!' தோல் நோய் லேசர் சிகிச்சை மருத்துவ நிபுணர் பாலசுப்ரமணி: பெரும்பாலானோர் நினைப்பது போல் பரு, டீன் வயதினருக்கு மட்டும் உரித்தான பிரச்னையில்லை. 13 வயதில், அடையாளம் காட்ட ஆரம்பிக்கும் பரு, சிலருக்கு அதிகபட்சம், 45 வயது வரை கூட தொடரக் கூடும். பெண்களை விட, ஆண்களுக்குத் தான் பரு தாக்கம் அதிகம். ஆனால், ஆண்கள் அலட்டிக் கொள்வதில்லை. பெண்களைப் பொறுத்தவரை, ஹார்மோன் குறைபாடு, ஒழுங்கற்ற மாதப்போக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் என, பரு வருவதற்கு பல காரணங்கள் உண்டு. ஸ்டீராய்டு தொடர்பான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பரு வரலாம். தோலில் உள்ள, "சீபம்' என்ற மெழுகுப் பொருளின் சுரப்பே, பருவாக தெரிகிறது. முகத்தின் எண்ணெய் அளவை கட்டுக்குள் வைத்தால், பருவைக் கட்டுப்படுத்தலாம். பரு தொல்லை அதிகம் உள்ளவர்கள், மருத்துவ ஆலோசனைப்படி, சோப்புகளை பயன்படுத்துவது நல்லது. பருவில் கை வைத்து கிள்ளுவது, சுரண்டுவது போன்ற வேலைகளைச் செய்தால், நாட்பட்ட தழும்பு, கரும்புள்ளிகள் ஏற்படும். மருந்துக் கடையில், சுயமாக நாம் வாங்கி தடவிக் கொள்ளும் மருந்துகளும் எதிர்வினையை ஏற்படுத்தும். பருவை போக்குவதற்காக, கெமிக்கல், பீல், மைக்ரோடெர்மாப்ரேஷன், லேசர் சிகிச்சை போன்றவை, நவீன மருத்துவத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. கெமிக்கல் பீல் என்பது, 15 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும். பருவுக்காக மட்டுமின்றி, முகத்தின் கருமைத் திட்டுகள், தோல் சுருக்கம் போன்றவற்றிற்காகவும், இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பருவினால் உண்டான தழும்புகள் அதிகமிருப்பின், மைக்ரோடெர்மாப்ரேஷன் சிகிச்சையை மேற்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட தோல் இழையை, மிக நுண்ணிய முறையில் நீக்குவது, இந்த சிகிச்சையின் அடிப்படை. லேசர் சிகிச்சையால், பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகளை இருந்த இடம் தெரியாமல் நீக்கிவிடலாம். இதன் பலனைப் போலவே, பட்ஜெட்டும் அதிகம்!

"நல்ல நிலைமை வரும் என நம்பினேன்!' பால் வியாபாரம் செய்யும் விஜயகுமாரி: தாத்தா காலத்தில் இருந்தே பால் வியாபாரம் தான் தொழில். திருமணமாகி வந்த நான், கணவருடன் சேர்ந்து மாடுகளை கவனிக்க ஆரம்பித்தேன். அனைத்து வேலைகளையும் செய்வேன். பால் கறக்க மட்டும் தெரியாது. அதனால், கறந்து தரும் பாலை வீடுகளுக்கு வினியோகிக்க கிளம்பி விட்டேன். ஒரு பெண் சைக்கிளில் சென்று பால் ஊற்றுவதை, ஏரியாக்காரர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். என் தொழில் நேர்த்தியால், நிறைய வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர். சைக்கிளில் இருந்து, டூவீலருக்கு தற்போது மாறியுள்ளேன். எனக்கு மூன்று மகன்கள், 25 வருடத்திற்கு முன், ஒரு பெண் குழந்தை பிறந்து, அம்மை நோய் தாக்கி இறந்து விட்டாள். அழக் கூட நேரமில்லாமல், என் மற்ற பிள்ளைகளுக்குத் தெரியாமல், ஒரு துணியைப் போட்டு மூடி ஓரமாக வைத்துவிட்டு, பால் ஊற்றக் கிளம்பி விட்டேன். என் ஒரு குழந்தைக்காக, ஊரில் உள்ள குழந்தைகள் பாலில்லாமல் அழணுமான்னு, மனசை கல்லாக்கிக் கொண்டு சென்றேன். வீடு வந்து சேர்ந்த பின், நான் அழுத அழுகை கடவுளுக்குத் தான் தெரியும். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பார்க்கும் இந்தத் தொழில், கண்டிப்பாக நம்மை முன்னேற்றும் என்று நம்பினேன். நான் நினைத்தது போலவே, என் மூத்த மகன், தனியார் டிராவல்ஸ் நிறுவன டிரைவர், இரண்டாவது மகன் எம்.பி.ஏ., முடித்து ஐ.டி., நிறுவன வேலையிலும், மூன்றாவது மகன் மெரைன் இன்ஜினியரிங் முடித்து, லண்டன் கப்பல் வேலையிலும் செட்டிலாகியுள்ளனர். இதற்கு முன், 20 எருமை மாடுகள் இருந்தன. இப்போ அதை எல்லாம் விற்றுவிட்டு, ஆறு சிந்தி மாடுகள் வாங்கி கட்டியிருக்கிறோம். ஒரு மாட்டின் விலை 30 ஆயிரம் ரூபாய். காலையில், 50 லிட்டரும், மாலை 50 லிட்டரும் பால் கறக்குறோம். ஒரு லிட்டர் 28 ரூபாய்க்கு விற்கிறோம். பால் ஊற்றியே பிள்ளைகளை கரையேற்றி விட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக