சொல்கிறார்கள்
"துடுப்பாக பிடித்துக் கொண்டேன்!'
கார் டிரைவிங் கற்றுத் தரும் பூங்கொடி: சைக்கிள் கூட சொந்தமாக வாங்க முடியாத, அளவிற்கு ஏழைக் குடும்பத்து பெண் நான். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் முடிந்து திருச்சிக்கு வந்தேன். கணவருக்கு தனியார் மில்லில் மெக்கானிக் வேலை. ஆனால், எனக்கு டூவீலர், கார் ஓட்டணும்னு பல கனவுகள் இருந்தது. வீட்டில் சும்மா பொழுதுபோக்க விருப்பமில்லை. ஒயர் கூடை பின்னுவது, வீட்டில் இருந்தபடியே அரிசி வியாபாரம் செய்வது, பேபி சைக்கிள் வாங்கி, வாடகைக்கு விடுவது என்று என்னை சுறுசுறுப்பாக்கிக் கொண்டேன். என் இரு பெண் குழந்தைகளும் வளர்ந்த பின், அவர்களைப் பள்ளிக்குக் கொண்டு போய் விட்டு வர, என் கணவரின் டூ வீலரைப் பயன்படுத்தினேன். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்களில் சிலர், "எங்க பிள்ளைகளையும் கொண்டு போய் விட்டுட்டு வாங்க, அதற்கான பணத்தைக் கொடுக்கிறோம்னு,' சொல்ல, இது ஒரு நல்ல ஐடியாவாக பட்டது. இதையே ஒரு துடுப்பாக பிடித்துக் கொண்டு, உறவினர்கள், நண்பர்கள் உதவியால், பணம் புரட்டி ஒரு கார் வாங்கினேன். கடந்த 2005ல் டிரைவிங் கார் துவங்கினேன். அந்த நேரத்தில், என் கணவர் வேலை பார்த்த மில் மூடப்பட்டது. என் கணவரும், கார் ஓட்ட கற்றுக் கொண்டு, பயிற்சியாளரானார். டூ வீலர் மற்றும் கார் டிரைவிங் என இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக