புதன், 18 ஜனவரி, 2012

"ஒழுக்கத்தில் கண்டிப்புடன் இருப்பேன்!'

சொல்கிறார்கள்                                                                                                                                
 



ஸ்ரீ பாலாஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியன்: மன்னார்குடி அருகே, கண்டிதம்பேட்டை கிராமத்தில் பிறந்து, ஏழ்மை காரணமாக, எட்டாம் வகுப்பு வரை படித்தேன். அதற்குப் பின், என் அப்பா என்னை மாடு மேய்க்க அனுப்பினார். அது பிடிக்காததால், வீட்டை விட்டு வெளியேறி, அனாதை இல்லத்தில் சேர்ந்து, பத்தாம் வகுப்பு வரை படித்தேன்; அதற்கு மேல் படிக்க காசில்லை. அதன் பின், ராணுவத்தில் சேர்ந்தேன். ராணுவப் பொறுப்புகளுக்கிடையேயும், வறுமை சூழ்நிலையிலும், எம்.ஏ., பட்டதாரியானேன். ராணுவத்திலிருந்து, 28 ஆண்டுகளுக்குப் பின், ஓய்வு பெற்று, புனேயில் குடியேறினேன். "சிம்பயாசிஸ்' கல்லூரிக் குழுமத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, எனக்கு வழங்கப்பட்ட ஊதியம், மூவாயிரம் ரூபாய். அங்கு சிறிது காலம் பணியாற்றிவிட்டு, "ஸ்ரீ பாலாஜி சொசைட்டி' எனும், இன்றைய நிர்வாகக் கல்லூரிகளின் குழுமத்தை ஆரம்பித்தேன். அப்போது, என் கையில் பணம் இல்லை; நம்பிக்கை மட்டுமே இருந்தது. மாணவர்களின் விடுதியிலேயே தங்கி, அவர்களுடனேயே இருப்பதால், அனைவருக்கும் நெருக்கமானவனாக இருக்கிறேன். ஆனால், ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்புடன் இருப்பேன். என் சேவையை பாராட்டிய ஜனாதிபதி, எனக்கு கவுரவ கர்னல் பதவியை வழங்கினார். சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பல பள்ளிகளுக்கு, நான் நன்கொடைகளை வழங்கியுள்ளேன். மேலும், பல மாணவர்களுக்கு என் கல்லூரியில், இலவசமாக படிப்பளித்து, வேலையும் வாங்கித் தருகிறேன். ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கொள்கையில் உறுதி ஆகியவை இருந்தால், வாழ்வில் ஜெயிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக