புதன், 30 மார்ச், 2011

Jaya flys -stalin criticise: எலிகாப்டரில் பறக்கிறார் செயலலிதா:தாலின் விமர்சனம்

எல்லாம் உண்மைதான். என்றாலும் கொலைகாரக் காங்.உடன் உறவு வைப்பதில் இருவரும் ஒன்றுதான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஹெலிகாப்டரில் பறக்கிறார் ஜெயலலிதா: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை, மார்ச் 29- தேர்தலின் போது கூட சாலை வழியாக பயணம் செய்து மக்களை நேரில் சந்திக்க விருப்பமில்லாமல், ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பறக்கிறார் என்று துணை முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் திமுக தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் அல்ல. எந்த சூழ்நிலையிலும் மக்களுடன் நெருங்கியிருப்பவர்கள் நாங்கள். 2006ஆம் ஆண்டு தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றியிருக்கிறோம். 2006 தேர்தல் அறிக்கையில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கோதுமை மாவு, பாமாயில் ஆகியவற்றை வழங்குவோம் என்று கூறவில்லை, ஆனால் தாய்மார்களின் துயர் துடைக்க இன்று துவரம் பருப்பு ரூபாய் 30க்கும், உளுத்தம் பருப்பு ரூபாய் 30க்கும், பாமாயில் ரூபாய் 25க்கும் வழங்கி வருபவர் முதல்வர் கருணாநிதி. இலவசமாக அரிசியை தருவேன் என்று கூறும் ஜெயலலிதா, தனது ஆட்சியில் ரூ.3.50க்கு விற்ற ரேஷன் அரிசியை, 6 ரூபாய்க்கு உயர்த்தியவர். 2006 தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கருணாநிதி குறிப்பிட்டார். அதேப்போலவே ஆட்சிப் பொறுப்பேற்ற மேடையிலேயே விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடனை முழுமையாக தள்ளுபடி செய்தார். ஆனால் ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தார். 18 ஆண்டுகள் முதல்வராக பொறுப்பு வகித்திருக்கின்ற கருணாநிதி ஒரு போதும் அரசு ஊழியர்களை அச்சுறுத்தியதில்லை, எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களை அரசு ஊழியர்கள் மீது ஏவி அவர்களை கைது செய்து துன்புறுத்தியதும் இல்லை. ஆனால் ஜெயலலிதா தனது ஆட்சியில் அரசு ஊழியர்களை கேவலப்படுத்தி, சிறையில் தள்ளி சித்ரவதை செய்தார்.2011ஆம் அண்டு தேர்தல் அறிக்கையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் அளவை ரூபாய் 4 இலட்சமாக உயர்த்தியதோடு, ரூபாய் 2 லட்சம் மானியம், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை, அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 4 மாதம், 58 வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு 3 சீருடைகள், முதியோர் உதவித் தொகையை ரூபாய் 750ஆக உயர்வு, திருமண நிதியுதவி ரூபாய் 30 ஆயிரமாக உயர்வு, ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசம், அனைத்து மாணவர்களுக்கும் இலவச லாப்டாப், தாய்மார்களுக்கு கிரைண்டர், மிக்சி, மாவட்டந்தோறும் செவிலியர் மற்றும் மருத்துவ கல்லூரிகள், விசைப்படகு மீனவர்களுக்கு 2000 லிட்டர் டீசல், நாட்டுப் படகு மீனவர்களுக்கு 500 லிட்டர் மண்ணெண்ணெய், அரசு அலுவலர்களின் குறை களைய நிரந்தர ஆணையம் என பல நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் கருதி செயல்படுத்த இருப்பதாக கருணாநிதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆனால் ஜெயலலிதா தான் சுயமாக சிந்தித்து, தனது கட்சிக்கு தேர்தல் அறிக்கையை தயாரிக்காமல் அவசரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதையே ஜெராக்ஸ் காப்பி போல தனது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். தேர்தலின் போது கூட சாலை வழியாக பயணம் செய்து மக்களை நேரில் சந்திக்க விருப்பமில்லாமல், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பறக்கிறார். ஆனால் இந்த வயதிலும் முதல்வர் கருணாநிதி சாலை வழியாகவே மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி, கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி.க்கு நினைவு இல்லம், பாரதியாருக்கு நினைவு இல்லம், சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத் தேவனுக்கு மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கத்திற்கு மணிமண்டபம், இஸ்லாமிய பெரும் புலவர் உமறுப்புலவருக்கு மணிமண்டபம் அமைத்ததும் கருணாநிதி தான். இதுமட்டுமல்ல, தூத்துக்குடியில் அரசு பொறியியல் கல்லூரியை ஏற்படுத்தி தந்துள்ளார். தூத்துக்குடி நகரை மாநகராட்சியாக உயர்த்தியவரும், பக்கீல் ஓடையை சீரமைத்தவரும் முதல்வர் கருணாநிதி தான். இவ்வாறு ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக