திங்கள், 28 மார்ச், 2011

To-day situation should be changed - T.Ke.Si. : இன்றைய நிலை மாற்றப்பட வேண்டும்: தி.க.சி.

கட்சி அரசியல் சார்பில்லாத நல்ல கருத்தை உயர்மிகு தி.கே.சி. தெரிவித்துள்ளார். எனினும் இன்றைய தேர்தல் சூழலுக்கேற்ப ஈர்க்கும் தலைப்பைத்தினமணி அளித்துள்ளது. இத்தகைய மாற்றத்திற்கு அனைத்துத் தரப்பாரும் முயல வேண்டும். தமிழ் தலைமை பெறவும் தமிழர் முதன்மை பெறவும் வேண்டும். அப்பொழுதுதான் உலகெங்கும் தமிழரும் தமிழும் காப்பாற்றப்படுவர்; பேணப்படுவர்; போற்றப்படுவர்.
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 / தமிழே விழி! தமிழா விழி! /  எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! -

இன்றைய நிலை மாற்றப்பட வேண்டும்: தி.க.சி.

திருநெல்வேலி, மார்ச் 27: தமிழ்ச் சமுதாயம் புதுவாழ்வு பெற அடிப்படை மாற்றம் அவசியம் என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் (தி.க.சி.) வலியுறுத்தினார்.  தி.க.சி.யின் "கடல் படு மணல்' நூல் வெளியீட்டு விழா, அவரது 87-வது பிறந்த நாள் விழா திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூலை "அன்பு பாலம்' ஆசிரியர் கல்யாணசுந்தரம் வெளியிட்டார்.  விழாவில், தி.க.சி.யின் நிறைவுரை: நான் காலமெல்லாம் இலக்கியப் பணியாற்றும் களப்பணியாளன் மட்டுமே. பாரதி, பாரதிதாசன், வல்லிக்கண்ணன் ஆகியோரது லட்சியத்தில் நின்று பணியாற்றி வருகிறேன்.  தமிழ்ச் சாதிக்கு புதிய வாழ்வு தர வேண்டும் என்றான் பாரதி. இன்று தமிழ் இனத்தின் கலை, கலாசாரம், பண்பாட்டுக்கு புதிய அபாயம் ஏற்பட்டுள்ளது. அவை பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் ஒன்று அவசியம். இதுகுறித்து எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டும்.  தமிழ்ச் சமுதாயத்துக்கு புதிய வாழ்வு கிடைக்க அடிப்படை மாற்றம் அவசியம். அதற்கு அச்சு, காட்சி ஊடகங்களின் பங்களிப்பு வேண்டும். இன்று ஊடகங்கள் முழு உண்மைகளையும் மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. அரைகுறை உண்மைகளையே சொல்கின்றன. வரலாற்றுப் புரட்டுகள் நடைபெறுகின்றன. சிறு பத்திரிகைகளால் மட்டுமே உண்மைகளைச் சொல்ல முடிகிறது. எனவே, வெகுஜன ஊடகங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.  சமுதாயத்தின் அடிப்படை மாற்றத்துக்கு புரட்சி அவசியம். அதற்குத் தொழிலாளர்களும், விவசாயிகளும் வீதிக்கு வந்து போராட தயாராக இருக்கின்றனர். காரணம், அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் நடுத்தர மக்கள்தான் தயங்கி நிற்கின்றனர்.  சமுதாய மாற்றங்களுக்கு வழிகோலுவது நடுத்தர வர்க்கமும், படித்தவர்களும்தான். அவர்கள் வரலாற்றுப் புரட்டர்களையும், கலாசாரத்தைச் சீரழிப்பவர்களையும் எதிர்த்துக் குரலெழுப்பத் தயாராகும்போது மட்டுமே மாற்றம் சாத்தியப்படும். அதற்கு மக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். இன்றைய நிலை மாற்றப்பட வேண்டும் என்றார் தி.க.சி.  விழாவுக்கு தலைமை வகித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் தொ. பரமசிவன் பேசியதாவது: கடல் பல்லுயிர்களின் தாய்மடி. ஆமையின் கருவறையாக கடல் மணல்தான் உள்ளது. அதில் பிறக்கும் ஆமைக் குஞ்சு தன் தாயை சரியாகச் சென்றடைகிறது. பூமியில் வாழும் உயிரினங்களைவிட கடல் சார் உயிரினங்களும், அதன் மூலம் கிடைக்கும் செல்வங்களும் இன்னும் அறிஞர்களால் முழுமையாகக் கண்டறிய முடியாத மர்மமாகவும், புதிராகவும் உள்ளது. அப்படிப்பட்ட கடலைப் போன்றவர் தி.க.சி. என்றார் பரமசிவன்.  "யுகமாயினி' ஆசிரியர் சித்தன்: இன்றைய இலக்கிய உலகில் எழுத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எழுத்தாளர்களை முன்னுக்கு வைக்கின்றனர். அதைத் தவிர்த்து தி.க.சி.யைப்போல விருப்பு, வெறுப்பு இல்லாத விமர்சனப் பார்வை அவசியம்.  "உயிர் எழுத்து' ஆசிரியர் சுதீர் செந்தில்: இன்றும் ஓர் இளைஞரைப்போல எழுத்தாளர்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதிப் பாராட்டி வருபவர் தி.க.சி. அவரைப்போல வேறொருவர் உருவாக வாய்ப்பில்லை. புதிதாக இலக்கிய உலகுக்கு வருவோருக்கு தி.க.சி.யைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தி.க.சி.க்கு அவர்களைத் தெரியாமல் இருக்காது.  "புதுகைத் தென்றல்' ஆசிரியர் மு. தருமராஜன்: மூன்று தலைமுறை எழுத்தாளர்களை விமர்சித்து வருபவர் தி.க.சி. அவரது ஆற்று வெள்ளம் போன்ற பாராட்டு பல எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது. எதிர்கால எழுத்தாளர்கள் அவரது வழியில் நின்று செயல்பட வேண்டும்.  எழுத்தாளர் நாறும்பூநாதன், பதிப்பக நிர்வாகி நிவேதிதா சுவாமிநாதன், ஜனநேசன், கீழக்கலங்கல் ஜீவா படிப்பக நிர்வாகி சண்முகவேல் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.  நூலைத் தொகுத்த வே. முத்துக்குமாரை பாராட்டி தி.க.சி. பொன்னாடை போர்த்தினார். இலக்கிய ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கவிஞர் கிருஷி வரவேற்றார். எழுத்தாளர் கழனியூரன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக