வியாழன், 31 மார்ச், 2011

எங்களுக்கு If any thing happen to us, Jayalalitha is responsible - KanimoZhi: ஏதாவது நேர்ந்தால் ஜெயலலிதாவே பொறுப்பு: கனிமொழி பேச்சு

கனிமொழி சொல்வது எல்லாம் சரிதான். ஆனால், மக்கள் தி.மு.க.வைக்கைவிட வில்லை என்பதையும் தமிழர் படுகொலைகளுக்குத் துணை நின்றமையால் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள சற்று ஓய்வு கொடுக்க விரும்புகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.சாதனை மன்னரான, சொல்வதைச் செய்பவரான, கடும் உழைப்பாளியான, காட்சிக்கு எளியரான கலைஞரை விட அடாவடிக் கட்சித்தலைமையை மக்கள் ஏற்க ஆயத்தமாகிறார்கள் என்றால் எந்த அளவிற்கு அவர்களிடம் ஈழத்தமிழர்களின் உயிர் பறிப்புகளும் உடைமை பறிப்புகளும் நிலப் பறிப்புகளும் தமிழக மீனவர்களின் துயரங்களும் வடுவை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் ஜெயலலிதாவே பொறுப்பு: 
கனிமொழி பேச்சு

திருச்சி, மார்ச் 30: எங்களில் யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு என்றார் மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி.திருச்சி மாவட்டம், துறையூரில் திமுக வேட்பாளர் என். பரிமளா தேவியையும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் என். செல்வராஜையும் ஆதரித்து புதன்கிழமை அவர் பேசியது:திமுக அணியில் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பாடுபடும் கட்சிகள்தான் இணைந்துள்ளன. ஆனால், எதிரணியில் யார், யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். கூட்டணி முடியும் முன்பே அதிமுக போட்டியிடும் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. ஜெயலலிதா யாரையும் மதிக்கக் கூடியவர் அல்லர். இத்தனை ஆண்டுகள் இருந்த மதிமுகவை தேர்தல் நேரத்தில் சுயநலத்துக்காகவும், சொந்தக் காரணங்களுக்காகவும் ஒரே நொடியில் திட்டமிட்டு தூக்கி எறிந்தவர் ஜெயலலிதா.இப்போது, வெளியே வந்துவிட்டு ஜெயலலிதாவுக்கு ஆணவம், அகங்காரம் குறையவில்லை என்கிறார் வைகோ. என்றைக்கும் ஜெயலலிதாவிடம் ஆணவம், அகங்காரம் குறையாது என்று நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. உழவர் சந்தைகளை மூடியவர் ஜெயலலிதா. சத்துணவில் முட்டை போடும் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்புதான் இவை அனைத்தும் வழங்கப்பட்டன.இப்போது, பெண்களுக்கான திருமண உதவித் தொகை ரூ. 30,000 ஆக உயர்த்தி வழங்கத் தேர்தல் அறிக்கையிலேயே உறுதி அளித்துள்ளார் கருணாநிதி. மேலும், ஏழை மக்களின் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.ஆனால் ஜெயலலிதா மீண்டும் அவர்களை ஆடு மேய்க்கச் செல்ல, வீட்டுக்கு நான்கு ஆடுகள் இலவசமாக வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். வீட்டைத் தேடி வேளாண் இடு பொருள்கள் கொண்டு வந்து வழங்கப்படும் என்று கருணாநித் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார். சொன்னதைத் தாண்டியும் செய்வார். சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறோம். ஆனால் ஜெயலலிதா பொய் உரைகளையும், தவறான பிரசாரத்தையும் செய்கிறார். முதல்வர் கருணாநிதியை இழித்தும் பழித்தும் பேசி வருகிறார். ஏமாற்ற முற்படுகிறார். ஜெயலலிதா நாகையில் பேசிய போது, "உடல் நலக் குறைவு என்று சொல்லி கருணாநிதி மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார்' என்று கூறியிருக்கிறார். உடல் நலக் குறைவு என்றால் மருத்துவ மனைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. உடன்பிறப்புகளின் முகத்தை பார்த்தாலே, உடன்பிறப்புகளின் கைத்தட்டலைக் கேட்டாலே உடல் நலக் குறைவு சரியாகிவிடும். அடுத்ததாக கனிமொழியை தாக்கிவிட்டு, அனுதாபம் தேடிக் கொள்ள முயற்சிப்பார்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். தந்தையே மகளைத் தாக்கும் மனது இருக்க முடியுமா?யாரையும் நம்பி நான் இங்கு வரவில்லை; பேசவில்லை. உடன்பிறப்புகளை நம்பித்தான் இங்கே வந்திருக்கிறேன். இந்த உடன்பிறப்புகளைத் தாண்டி தாக்கும் தைரியம் யாருக்கும் இல்லை. எங்களில் யாருக்கு எது நேர்ந்தாலும் அதற்குப் பொறுப்பு ஜெயலலிதாதான் என்றார் கனிமொழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக