திங்கள், 9 மே, 2011

Drama: India officeals visit ilangai regarding genocide: மனித உரிமை மீறல்: இந்திய அதிகாரிகள் இலங்கைப் பயணம்

கொடூரமாக நடந்த பேரினப்படுகொலைகளை மனித உரிமை மீறல் என எளிமையாக இந்தியா சொல்வதில் இருந்தே அதன் நோக்கம் என்ன வென்று புரிகிறது. எப்படிய இருந்தாலும் சிங்களத் தலைவர்களுடன் இந்தியத்தலைவர்களும் அதிகாரிகளும் தண்டனை பெற்றால்தான் இறைவன் இருக்கின்றான் என்பது உண்மையாகும். எத்தனை நாடகங்கள் வேண்டும் என்றாலும் நடத்தட்டும்! இறுதியில் கொலைகாரர்கள் தண்டனை பெறுவது உறுதி. 
உறுதியுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


மனித உரிமை மீறல்: இந்திய அதிகாரிகள் இலங்கைப் பயணம்

First Published : 09 May 2011 12:10:35 AM IST


கொழும்பு, மே.8: இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா பொதுச் செயலர் பான்-கீ-மூன் அமைத்த நிபுணர் குழு அளித்த அறிக்கை குறித்து விவாதிக்க, உயர்நிலையிலான இந்திய அதிகாரிகள் இலங்கைக்குச் செல்லவுள்ளனர்.2009-ம் ஆண்டு இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில், போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளதாக ஐ.நா.பொதுச் செயலர் அமைத்த நிபுண்ர் குழு அறிக்கை அளித்துள்ளது. இரு தரப்பினரும் இந்தத் தவறுகளை செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிக்கை குறித்து விவாதிக்க உயர்நிலையிலான இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லவுள்ளனர். வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், பாதுகாப்புத் துறைச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரடங்கிய இந்தக் குழு, வரும் வெள்ளிக்கிழமையன்று இலங்கை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை சந்திக்கவும் இக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசை இக்குழு வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக இலங்கை அதிபர் ராஜபட்ச இந்த நிபுணர் குழு அளித்த அறிக்கை முழுமையில்லாததுடன், ஒரு சார்பாகவும் உள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இலங்கையின் உயர்மட்ட அலுவலர்கள் எவரையும் ஜூன் மாதம் வரை சந்திக்க இந்திய தரப்பு மறுத்துவந்த நிலையில், இந்தியக் குழுவின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. எனினும் மே 16-ம் தேதி இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்திக்க புதுதில்லி வருவார் என்று தெரிகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக