சனி, 14 மே, 2011

தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்றுள்ளது - வைகோ

வைகோ கூறுவதுபோல் தேர்தல் ஆணையம் தன் கடமையில்  வென்றுள்ளது. அதற்கு மேலும் பல கடமைகள் காத்திருக்கின்றன, பல்லாயிரக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன, பெயர்  நீக்கம் முன் உரியவர்களுடன் தொலைபேசித் தொடர்பு,மின்னஞசல் தொடர்பு, பதிவு அஞ்சல் தொடர்பு , மேல் அலுவலரின் ஆய்வு முதலானவற்றின் மூலம் சரி  பார்த்தே  நீக்க வேண்டும்,  வாக்குரிமை உள்ளவர்கள் அனைவரின் பெயர்களும்  இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் தேர்தல் ஆணையத்திற்குப் பாராட்டுகள. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்றுள்ளது - வைகோ

First Published : 14 May 2011 03:33:47 AM IST


சென்னை, மே 13: சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்றுள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.தமிழ சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது குறித்து பல்வேறு கட்சியினர் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: கடந்த 5 ஆண்டுகளில் தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், அராஜகம், திரைப்படத்துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், பன்னாட்டுக் நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்கிவிட்டு நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகத்தை இருளில் தள்ளிய கடுமையான மின் வெட்டு, விலைவாசி ஏற்றம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அனைத்துக்கும் மேலாக ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் அரசுக்கு துணை நின்ற துரோகம் போன்ற செயல்களை மக்கள் சக்தி தூக்கி எறிந்துவிட்டது.தமிழக வாக்காளர்கள் ஊழல் பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்துக்குப் பொன் மகுடம் சூட்டிவிட்டனர். எதிர்காலத்தில் இனி அதிகார துஷ்பிரயோகத்தையும் ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் எச்சரிக்கை தரும் பாடத்தை வாக்காளர்கள் கற்பித்துள்ளனர். தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்றுள்ளது.இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்: தமிழகத்தில் பண பலம், அதிகார பலம், ஜாதி ஆதிக்கம் ஆகியவற்றைத் தாண்டி ஆட்சி மாற்றத்துக்கு வாக்காளர்கள் வித்திட்டுள்ளனர். தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும்; இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்காது என்றெல்லாம் பேசி வந்த அறிவுஜீவிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நடுநிலையோடு சிறப்பாக இருந்த காரணத்தால் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் அதிக சதவீதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தலில் முதல் வெற்றி தேர்தல் ஆணையத்துக்குத்தான்.ஐக்கிய ஜனதா தளம் பொதுச் செயலாளர் டி.ராஜகோபால்: திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு தமிழக மக்கள் மிகச் சரியான தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்தும் திமுகவால் வெற்றி பெறமுடியவில்லை. குடும்ப ஆட்சி, ஊழல், விலைவாசி உயர்வு, மின் வெட்டு, மணல் கொள்ளை, சட்டம் ஒழுங்கு பிரச்னை போன்றவையே திமுக கூட்டணியின் தோல்விக்குக் காரணம்.வன்னியர் கூட்டமைப்புத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி: கடந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழகத்தில் நீடித்து வந்த மைனாரிட்டி திமுக அரசின் ஆட்சியை மக்கள் தங்கள் ஓட்டுரிமையின் மூலம் அகற்றியுள்ளனர். இந்த மகத்தான மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழக வாக்காளர்களுக்கு நன்றி.புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்: சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள். எதிர்வரும் ஐந்து வருட ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாக அமைய வேண்டும். சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். முதலியார், வேளாளர், செங்குந்தர், சேனைத்தலைவர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி கல்வி வேலைவாய்ப்பில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.திண்டிவனம் ராமமூர்த்தி: தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள். அவருடைய தலைமையில் தமிழகம், அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மையான மாநிலமாகத் திகழ வேண்டும்.

1 கருத்து: