வியாழன், 12 மே, 2011

Sculpture of malai kaali memorial stone found in kalvarayan hills : கல்வராயன் மலையில் மலைக்காளி நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

வரலாற்றுப் பண்பாட்டு உணர்வுடன் இது போன்ற செயதிகளைத் தொடர்ந்து வெளியிடும் தினமணிக்குப்  பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கல்வராயன் மலையில் மலைக்காளி நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

First Published : 12 May 2011 12:53:35 AM IST


எருக்கம்பட்டுமலையில் கிடந்த நடுகல், தேவனூர்மலையில் உள்ள நடுகல், ராகுத்தன்நல்லூர்மலையில் கிடந்த நடுகல்.
கள்ளக்குறிச்சி, மே 11: கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் காட்டுப் புதரில் மறைந்துக் கிடந்த மலைக்காளி நடுகல் சிற்பத்தை தமிழக பழங்குடி மக்கள் ஆய்வு மைய களப்பணி ஆய்வாளர் எஸ்.கே.மணி, வரலாற்றுத் துறை மாணவர் ஆரோக்கிய ஜெயசீலன், காரல் மார்க்ஸ், அமெரிக்க பொறியாளர் எய்த்தான் டோரான் அண்மையில் கண்டெடுத்தனர்.  ÷விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது கல்வராயன்மலைப் பகுதியாகும். கள்ளக்குறிச்சியில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் இம்மலை அமைந்துள்ளது. மலையின் உயரம் 1500 மீட்டரும், 600 சதுர மீட்டர் சுற்றளவும் கொண்டதாகும். இம் மலையில் தேன்பாடி, சிறுக்கலூர், பேராரு, மேகம், முட்டறவி உளளிட்ட 10 அருவிகள் உள்ளன.  ÷15 பஞ்சாயத்துகளை கொண்ட பகுதியாகும். இம் மலையை குரும்பக் கவுண்டன், சடையக் கவுண்டன், அறையக் கவுண்டன், சாதாக்கவுண்டன் உள்ளிட்டோர் ஆண்டு வந்தனர்.  ÷பின்னர் 23.06.1976-ல் கொத்தடிமை முறை சட்டம் செல்லும் என்பதன்படி கொத்தடிமை முறையிலிருந்து ஆகஸ்ட் மாதம் 1976-வது ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். ÷இந்த நடைமுறைகள் இருந்தபோது, சென்னை மாநில வருவாய்த் துறைக்கு தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியராக பத்பநாபன் இருந்தார்.÷  ÷5.9.77-ல் இந்த நிலையில்தான் கல்வராயன்மலைக்கென்று ஒரு தனி சிறப்புநிலை ஆட்சியர் சம்பந்தம், வருவாய் கோட்டாசியர் செங்கல்வராயன், தனி காவல் துணை ஆய்வாளர் முருகையன் பணியில் இருந்தனர்.  ÷இம் மலையில் தமிழக பழங்குடி மக்கள் ஆய்வு மைய களப்பணி ஆய்வாளர் எஸ்.கே.மணி, வரலாற்றுத் துறை மாணவர் ஆரோக்கிய ஜெயசீலன், கல்வராயன்மலை சிறப்பு கொத்தடிமை மக்களின் வாழ்வும் வரலாறும் புத்தக இணை ஆசிரியர் எம்.காரல்மார்க்ஸ் மை இந்தியா கிராமப் புற ஆய்வாளர் அமெரிக்க பொறியாளர் எய்த்தான் டோரான் மலையின் வரலாற்றுக்கு களப்பணியில் எருக்கம்பட்டு கிராமத்தில் ஈடுபட்டிருந்தனர்.  ÷அப்போது மலை காட்டுப் புதரில் மறைந்துக் கிடந்த மலைக்காளி நடுகல் சிற்பத்தை கண்டெடுத்தனர். இந்த நடுகல் சிற்பம் குறித்து கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைப் பெருந்தலைவர் இன்னாடு உண்ணாமலை, மலையக விவசாயி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் ஊர் வழக்கத்தை கூறினர்.  மலை வரலாறு  ÷அக்கா தங்கை இரண்டு பேர் மலையில் வாசம் செய்து வந்துள்ளனர். இவர்களின் தங்கைக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது.  ÷மலைக்காட்டில் அக்காள், தங்கை இருவரும் குழந்தையை தூக்கிக் கொண்டு மூவரும் காட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.  ÷அங்கு வந்ததும் தங்கை தன் பெண் குழந்தையை அக்காவிடம் கொடுத்து, "பார்த்துக் கொள். நான் காட்டுக்குள் சென்று நமது பசிக்கு காரக்காய், சூரக்காய், கள்ளுமடையான், பன்னைக்கீரையைத் தேடி பார்த்து பறித்து ஆய்ந்து எடுத்து வருகிறேன்' என்று கூறி சென்று விட்டார்.  ÷சற்று நேரம் ஆனதும் இவளின் அகோர பசிக்கு தங்கையின் பெண் குழந்தையை கால் பகுதியில் இருந்து தனது வாய் வழியாக விழுங்க ஆரம்பித்து விட்டாள்.  ÷அப்போது குழந்தை அழ ஆரம்பித்து தொடர்ந்து அழும் சப்தம் விட்டு விட்டு வந்து கொண்டு இருக்கவே சப்தம் கேட்டு கீரை பறிக்கப் போன குழந்தையின் தாய் ஓடிவந்துள்ளார்.  ÷தன் குழந்தை, அக்காளின் அகோர பசிக்கு, கால் பகுதியிலிருந்து உடல், வயிறு, மார்பகம் பகுதி வரை விழுங்கி இருப்பதைப் பார்த்ததும் அழுது கதறிக் கொண்டு "அக்கா மிஞ்சாதே' என்று குரல் கொடுத்தும் அவர் குழந்தையை விழுங்குவதை அப்படியே நிறுத்தியுள்ளார். அப்போது கழுத்துக்கு மேல் தலை பகுதி வெளியில் நின்று விட்டது.  ÷இந்த அகோர நிகழ்வை பார்த்த தங்கை, கோபத்தோடு அக்காவிடம், "நீ வெங்கோடு, எருக்கம்பட்டு, நடுப்பகுதி காட்டுக்குள் போய் இருந்துக் கொள். நான் பட்டுலேயே இருந்துக்கிறேன் உனக்கும், எனக்கும் ஒத்துவராது. உனக்கு மக்களை விழுங்கும் வேங்கை பசி இருக்கும்வரை நீ தனியாக இருக்க வேண்டும்.  ÷உனக்கு என்னிக்கு காய்கனி பசி எடுக்கிறதோ? அன்று நான் வசிக்கும் பட்டு மக்கள் யாரிடமாவது கனவில் வந்து என்னைப் பார்க்க வாருங்கள் என்று அழைக்கிறாயோ? அப்போது ஊர்கூடி ஒன்று திரண்டு அங்கு வந்து மலை நாட்டில் கிடக்கும் உணவு தானியங்களையும் காய்கனிகளையும், காட்டு பழவகைகளையும் எடுத்துக் கொண்டு வருவோம். அன்றுவரை யாரும் உன்னை வந்து தனியாக பார்க்க மாட்டோம்.  ÷"அங்கு வரும்போது பிறந்த மேனியாகவோ அல்லது வெள்ளை ஆடை உடுத்தி நீ இருக்கும் சம்பாவி அம்மை சோலைக்கு வருவோம். உன்னை பார்க்க பெண்கள் வரமாட்டோம். ஆண்கள் மட்டும் வருவார்கள்' என்றாள்.  ÷அந்த காலம் முதல் 2011-ம் ஆண்டுவரை அந்த சம்பாயி அம்மா யார் சொப்பணத்தில் எந்த ஆண்டு எப்போ வரசொல்லுகிறாளோ? அந்த ஆண்டு காட்டுசோலை கோயிலுக்கு என்று மலை நாட்டு கிராம நெம்பியான் பூசாரி என்று ஒருவரை நியமனம் செய்து பூஜை செய்து படையல் இட ஊர்மக்கள் நியமிப்பர்.  ÷நல்ல விசேஷமாக, சம்பாவி என்று இருந்து மருவி சம்பாயி அம்மா என்று விளங்கும் மலைகாட்டு காளிதேவிக்கு பொங்கல், பூஜை நடைபெறுமாம். இப்படி பூசாரியாக (நெம்பியான்) இருந்து நடத்தியவர் இறந்து விடுவது உண்டாம்.  ÷அதனால் இந்த சம்பாவி அம்மாளுக்கு சாமி கனவு சொப்பனம் கிடைக்க, பத்து, பதினைந்து ஆண்டு கூட ஆகுமாம் என்று கூறினர். இந்த செய்தியை விளக்கும் வகையில் இந்த நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ÷இந்த நடுகல் 4 அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் கொண்டது. முழு பலகை கல்லான இந்நடுக்கல், புடைப்பு சிற்பங்களைக் கொண்டது. இந்த உறவு அமைப்பைக் கொண்டு பார்த்தால் மலைக்காளி அமைப்பைக் கொண்டு காணப்படுகிறது. ஆனால் மலை கிராம மக்கள் சம்பாயி அம்மா என்று அழைக்கின்றனர்.  ÷மலைக்காளி தலையில் கிரீடம் தரித்து விரிசையுடன் காணப்படுகிறாள். மூக்கில் புல்லாக்கு, காதணி, கழுத்து மாலைகள் ஆடை அணிகள் தரித்தும் காணப்படுகிறாள். இவள் எட்டு கைகளை கொண்டு விளங்குகிறாள்.  ÷கையில் சூலம், வாள் கேடயம், கபாலம், வில் அம்பு, கஜகஸ்தம் வைத்து இருக்கிறாள். மேலும் ஒரு குழந்தையின் உடலை தனது கையில் வைத்திருக்கின்றாள். இவள் இடது காலை ஊன்றி அதன் கீழ் வீரன் இறந்த நிலையில் இருப்பதும் அதன் மீது சூலம் பாய்ச்சுவது போலவும் காணப்படுகிறாள். வலதுகால் மடக்கிய நிலையில் அமர்ந்துள்ளாள்.  ÷மலைக்காளிக்கு நேர் எதிர்புறம் இரண்டு வீரர்கள் ஆடையின்றி காணப்படுகின்றனர். அதன் கீழ்புறம் இரண்டு பெண் உருவம் காணப்படுகிறது. அவர்கள் நடனம் ஆடி திருவிழா கோலம் கொண்டு இருப்பதை இது உணர்த்துகிறது.  ÷இதன் காலம் சரிவர உணரப்படவில்லை. நடுகல் அமைப்பை வைத்துப் பார்த்தால் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக தெரிகிறது என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை கௌரவ விரிவுரையாளர் பி.சுதாகர்.  ÷சூரனை சூலாயுதத்தால் காலில் போட்டு மிதித்து குத்துவதுபோல் உள்ளது. தேவனூர் சோலையில் இராகுத்தன் நல்லூர் மலை ஐய்யனார் கோயில் அருகிலும் குதிரையில் சவாரி செய்வது போலவும் வனக்காளி சிற்பம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக