கற்பனை என்பது அவரவர் உரிமை. முடிவு வரும்வரை என்ன வேண்டும் என்றாலும் கற்பனை செய்து கொள்ளலாம். நமக்குத் தேவை தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முன்னுரிமையும் தரும் - தமிழ் ஈழ ஏற்பைப் பெற்றுத் தரும் தமிழ் நல அரசு.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
முந்தும் தி.மு.க.! தொடரும் அ.தி.மு.க !
கவின் மதிப்பீடு
எந்தத் தேர்தலையும்விட, இந்த முறை தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கடுமையான போட்டியைச் சந்தித்தது. இரண்டு பெரிய அணிகளுக்குமே வாக்கு பலம் ஏறத்தாழ சமமாக இருந்ததால், வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி மிகக்குறைவாகவே இருக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கணிப்பு. கள நிலவரமும் அதுதான். அதனால்தான் இரண்டு அணிகளில் உள்ள கட்சிகளுமே வெற்றி நிச்சயம் என்று நம்புகின்றன.
அ.தி.மு.க. தரப்பின் எதிர்பார்ப்பு 160 முதல் 180 தொகுதிகளாக இருக்கிறது.
தி.மு.க தரப்பில் அதிகபட்சம் 140 அல்லது 150 தொகுதிகள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முடிவுகளை முன்கூட்டியே கணிப்பதில் ஆங்கில ஊடகங்களுக் கிடையே பலத்த வேறுபாடு நிலவுகிறது. ஒரு சேனல் தி.மு.க.வுக்கு 130 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது. மற்றொரு சேனல் அ.தி.மு.க.வுக்கு 132 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்கிறது.
மேற்குவங்க மாநிலம் தொடர்பான கருத்துக்கணிப்பில் அனைத்துச் சேனல்களுமே மம்தா பக்கம் பலமான காற்று வீசுவதாகத் தெரிவிப்பதையும், தமிழகத் தேர்தல் களம் குறித்து மாறுபட்ட கருத்துகளை வெளியிடுவதையும் கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கும்மிடிப்பூண்டியில் தொடங்கி குமரிமுனை வரை ஒரே மாதிரியான போக்கு நிலவுவது வழக்கமாக இருந்து வந்தது. அந்த நிலை, கடந்த தேர்தல்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு விதமான போக்கு நிலவுகிறது. மேற்கு மண்டலம் எனப்படும் கொங்கு மண்டலம் அ.தி.மு.க. கூட்டணிக்குச் சாதகமாகவும் வடக்கு மண்டலம் தி.மு.க. கூட்டணிக்குச் சாதகமாகவும் அமைந்துள்ளது.
தெற்கு மண்டலத்தில் இரு அணிகளும் பலத்த போட்டி போடுகின்றன. அதில், அ.தி.மு.க. அணி சற்று கூடுதல் பலத்துடன் உள்ளது. மத்திய மண்டலமான டெல்டா மாவட்டங்களிலும் போட்டி வலிமையானதுதான். இங்கு, தி.மு.க. கூட்டணிக்கு கூடுதல் பலம் காணப்படுகிறது.
எந்த மண்டலத்திலும் சேராத சென்னைக்குட்பட்ட தொகுதிகளில் இந்த முறை, தி.மு.க. அணி படுவீழ்ச்சியடையும் என்பது பொதுவான எதிர்பார்ப் பாக இருந்தது. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய மதிப்பீடுகளின்படி, சென்னையில் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலானவை அதற்குச் சாதகமாகவே இருக்கின்றன. சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் மிகப் பெரும்பாலான வை அ.தி.மு..க அணிக்குத் தாரை வார்க்கப்பட்ட தொகுதிகளாகவே இருக்கின்றன.
இத்தகைய நிலவரங்களை கவனத்தில் கொள்ளாமல் வெறும் புள்ளி விவரங்களின் அடிப்படையில், பொதுவான ஃபார்முலாவைக் கொண்டு கணிப்புகளை வெளியிடுவது பொருத்தமாக இருக்காது.
இந்தத் தேர்தல் களத்தில், தி.மு.க. அணி தனது சாதனைகளை முன்வைத்து வாக்கு கேட்டது. அ.தி.மு.க. அணி, தி.மு.க. ஆட்சியின் ஊழல் முறைகேடுகளையும் தி.மு.க.வின் குடும்ப அரசியலையும் முன்னிறுத்தி வாக்கு கேட்டது.
தி.மு.க. அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் பயன் தந்திருக் கின்றன. அதே நேரத்தில், ஒவ்வொரு ஊரிலும் உள்ள தி.மு.க. பிரமுகர்களின் நடவடிக்கைகள் அந்தந்தப் பகுதிகளிலும் கடும் அதிருப்தியை உண்டாக்கி யுள்ளன. குறிப்பாக, சில அமைச்சர்கள், அவர்களின் ஆதரவாளர்கள், தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் பொதுமக்களை நடுங்க வைத் திருப்பதைத் தேர்தல் களத்தில் காண முடிந்தது. அத்துடன், தி.மு.க. வேட்பா ளர்களுக்கு எதிராக தி.மு.க. பிரமுகர்களே பல உள்குத்து வேலைகளைப் பார்த்துள்ளனர். இவையெல்லாம் தி.மு.க. அணிக்கு ஏற்பட்ட பாதிப்புகள்.
அ.தி.மு.க. அணிக்குச் சாதகமாக இருந்த முக்கிய அம்சங்கள் எவை யென்றால், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பலமில்லாத காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கித்தந்த 63 தொகுதிகள், உள்ளூர் தி.மு.க.வினரின் நடவடிக்கைகள், ஊடகங்களின் பலத்த ஆதரவு, படித்த வாக்காளர் களிடையே நிலவிய மாற்றம் தேவை என்ற மனநிலை ஆகியவையாகும்.
இந்த நிலையில், தேர்தல் களத்தில் தி.மு.க. தரப்பு மேற்கொண்ட அணுகுமுறைகள், கூட்டணிக் கட்சியினருடனான ஒருங்கிணைப்பு, தாராளமான செலவு ஆகியவை அதன் பலவீனங்களைப் பின்தள்ளியது.
அ.தி.மு.க. அணியில் தொண்டர்களின் தேர்தல் பணிகள் சிறப்பாக இருந்தன. குறிப்பாக, முதன்முறையாகக் கூட்டணி கண்ட தே.மு.தி.க.வின் தொண்டர்கள் வெற்றி வெறியுடன் வேலை பார்த்தார்கள். ஆனால், இதனை ஒருங்கிணைக்கக்கூடிய அளவில் கூட்டணித் தலைமையின் அணுகுமுறைகள் இல்லை. அத்துடன், தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர் களில் பெரும்பாலானவர்கள் செல்வி ஜெயலலிதாவை மாற்று சக்தியாக வோ, மாற்றம் தரக்கூடிய தலைவர் என்றோ கருதவில்லை.
10 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஜெயலலிதா , தமிழகம் முழுவதும் செய்த பிரச்சாரத்தில் தன்னுடைய சாதனைகள் என்று எதையும் சொல்லமுடியவில்லை. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அடியொற்றி அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜெயலலிதா, அதில் தெரிவித்த திட்டங்களையும்கூட தேர்தல் பிரச்சாரத்தில் பெரிதாக வலியுறுத்தவில்லை.
அதே நேரத்தில், தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி தனது 5 ஆண்டு கால சாதனைகளை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதைத் தி.மு.க.வினர் தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.
இலவசத் திட்டங்களால் நேரடிப் பலனடைந்த பெண்களின் வாக்கு இம்முறை தி.மு.க.வுக்கு ஆதரவாகத் திரும்பியிருப்பது அந்த அணிக்கு சாதகமாக உள்ளது. அனைத்துப் பிரிவினரையும் மனதிற்கொண்டு நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களும் வாக்கு வங்கியாக மாறியிருப்பதை தேர்தல்கள ஆய்வுகளில் அறிய முடிகிறது.
இந்த வாக்குவங்கியை ஒருமுகப் படுத்துவதில் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அணுகுமுறைகள் நல்ல பலன் தந்துள்ளன. கட்சிக்காரர்களைத் தேர்தல் பணிகளில் முடுக்கிவிட்டது, கூட்டணிக் கட்சியினரை ஒருங்கிணைத்துச் சென்றது, எதிர்க்கட்சியினர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து சாதனைகளைச் சொல்லியே ஓட்டு கேட்டது, அதன் மூலம் பெண்களை அதிகளவில் கவர்ந்தது என மு.க.ஸ்டாலினின் தேர்தல் பணிகள் தி.மு.க. கூட்டணிக்கு வலு சேர்த்தன.
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், திட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கையும், ஜெயலலிதா பதவிக்கு வந்தால் இவையெல்லாம் நிறைவேற் றப்படுமா என்ற பயமும் பெண்கள் பலரிடம் காணப்படுகிறது. இதுவும் தி.மு.க. கூட்டணிக்குச் சாதகமான அம்சங்கள்.
புதிய தலைமுறை வாக்காளர்களில் நகர்ப்புறங்களைச் சார்ந்த - படித்த வாக்காளர்கள் மாற்றம் தேவை என்ற மனநிலையில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்துள்ளனர். அதே நேரத்தில், கிராமப்புறத்தைச் சேர்ந்த புதிய தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு தி.மு.க. அணிக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
2ஜி உள்ளிட்ட விவகாரங்களும் நகர்ப்புறத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கிராமப்புறங்களில் மின்வெட்டு, விலைவாசியேற்றம் போன்றவை தி.மு.க.வின் வாக்கு வங்கியை ஓரளவு பாதித்துள்ளது. இவையெல்லாம்தான் தி.மு.க. அணிக்கும் அ.தி.மு.க. அணிக்குமான போட்டியைக் கடுமையாக்கியது.
இந்தப் போட்டியின் இறுதிக்கட்டத்தில், தி.மு.க. கூட்டணி மேற்கொண்ட தேர்தல் நிர்வாகத்திறன் (Poll management), தனக்கு ஆதரவான வாக்குகளை வாக்குச்சாவடிக்குக் கொண்டுவரும் பணி, தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியையும் மீறி வாக்காளர்களை ‘கவர்’ செய்த முறை உள்ளிட்டவற்றால் அந்த அணி, அ.தி.மு.க.வைவிட சற்று கூடுதல் இடங்களைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன.
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, அதன் பொருளாளர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் பலர் உள்ளிட்டோர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்கின்றனர். அதே நேரத்தில், தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி போன்றவர்கள் வெற்றிக் குத் திணறுகிறார்கள்.
புதிதாகக் களம் காணும் தி.மு.க. வேட்பாளர்களில் ஆயிரம் விளக்கு அசன் முகமது ஜின்னா, நன்னிலம் இளங்கோவன், திருவிடைமருதூர் கோவி.செழியன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, சாத்தூர் கடற்கரைராஜ் உள்ளிட்ட பலருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அதே நேரத்தில், இவர்களில் பலருக்குச் சொந்தக் கட்சிக்காரர்களே குழி பறித்துள்ளனர். தி.மு.க. கூட்டணியில், காங்கிரசின் நிலை படுகவலைக்கிட மாக உள்ளது. பா.ம.க.வும் விடுதலைச் சிறுத்தைகளும் தி.மு.க. கூட்டணிக் குப் பலம் சேர்க்கிறார்கள்.
அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க தனது தனிப்பட்ட செல்வாக்கால் தி.மு.கவின் எண்ணிக்கையை நெருங்கும் அளவுக்கு வெற்றியினைப் பெறும் வாய்ப்புள்ளது. எனினும், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி எண்ணிக் கை குறிப்பிடும்படியாக இல்லை. வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கும் என்பதால், இரு அணிகளுக்குமான வெற்றித் தொகுதிகளின் எண்ணிக்கைக்கிடையிலான வேறுபாடும் மிகக் குறைவாகவே இருக்கும். அப்படியென்றால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படுமா?
ஏற்படும். 1984 தேர்தலுக்குப் பிறகு, ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. அதில் இம்முறை மாற்றம் ஏற்பட்டு, ஆளும் தி.மு.க.வே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தி.மு.க. கூட்டணிக்கு 120 முதல் 130 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. தோழமைக் கட்சிகளின் துணையுடன் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய சூழலுக்குத் தி.மு.க. உள்ளாகிறது. அ.தி.மு.க. அணிக்கு 100 முதல் 110 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழக சட்டமன்றம் புதிய பரபரப்புகளைக் காணவிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக