செவ்வாய், 26 ஏப்ரல், 2011

war crimes and genocide - India will save singhala govt. :போர்க்குற்றவாளி என்று கண்டிக்கப்படும் சூழல்: மன்மோகன் காப்பாற்றுவார் -இலங்கை நம்பிக்கை

தாயால் எங்கள் இனம் அழிகிறது. மகனால் உங்கள் இனம்அழிகிறது. எனச் சீக்கியர்கள் தமிழர்கள்பால பரிவும் பற்றும் உள்ளவரகளாக உள்ளார்கள். ஆனால், மன்மோகன் சிங், பதவி  தந்த சோனியாவின் கையாளாக உள்ளமையால் தமிழினப் படுகொலைக்குத் துணை நிற்கிறார். எனவேதான் இது வரை சிங்களத்திற்குத் துணை நின்றார். இந்தியாவும் கூட்டுக் கொலையாளி என்பதால் சிங்களத்தைக் காப்பாற்றும் என்னும் நம்பிக்கை சிங்களத்திற்கு உண்டு. அதனை வெளிப்படையாகச் சொல்லாமல் இவ்வாறு பேசியுள்ளார் சிங்கள அதிகாரி. எவ்வாறு இருப்பினும் காலம் கடந்ததேனும் இனப்படு கொலையாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இதன் மூலம் உலகில் வேறு எங்கும் இனி இனப்படுகொலை நடப்பது தடுக்கப்படும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 




போர்க்குற்றவாளி என்று கண்டிக்கப்படும் சூழல்: மன்மோகன் காப்பாற்றுவார் -இலங்கை நம்பிக்கை

First Published : 26 Apr 2011 06:10:05 AM IST


கொழும்பு,ஏப்.25: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அத்துமீறி நடந்துகொண்டதற்காக போர்க்குற்றவாளி என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலால் தீர்மானிக்கப்படும் நிலை வந்தால், இந்தியா - அதிலும் குறிப்பாக - பிரதமர் மன்மோகன் சிங் தங்களைக் காப்பாற்றிவிடுவார் என்று இலங்கை அரசு நம்பிக்கையோடு இருக்கிறது.  இலங்கை அரசின் மூத்த அதிகாரியொருவர் தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையோடு இதை கொழும்பில் திங்கள்கிழமை தெரிவித்தார்.  "இலங்கைக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உதவிக்கு வந்திருக்கிறார். இலங்கையுடனான உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மற்றவர்களைவிட அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளையும் ஜெனீவா உடன்பாட்டு கோட்பாடுகளையும் இலங்கை அரசு அப்பட்டமாக மீறிவிட்டது, எனவே அதைக் கண்டிக்க வேண்டும் என்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் 2009-ல் முயற்சி நடந்தபோது அதை முறியடித்துக் காப்பாற்றியது இந்தியாதான். இலங்கையைக் கடுமையாகக் கண்டிக்கும் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியா பேசியதால் அது கைவிடப்பட்டது.  பொருளாதார நிலைமை காரணமாக வெளிநாட்டு வர்த்தகப் பற்று-வரவில் பற்றாக்குறையால் இலங்கை அரசு தத்தளித்துக் கொண்டிருந்தபோது மேற்கொண்டு பண உதவி அளிக்க பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.) இழுத்தடித்துக் கொண்டிருந்தபோது இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்குக் கடன் வழங்குங்கள் என்று வலுவாகப் பரிந்துரைத்து வாங்கித் தந்தது.  சமீபத்தில் இந்தியப் பெருங்கடல் டுனா கமிஷன் கூட்டத்தில் பிரிட்டனுக்குச் சொந்தமான கடல்பரப்பில் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக மீன் பிடித்ததற்காகக் கடுமையாகக் கண்டிக்கப்படவிருந்த தருணத்திலும் இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்கு ஆதரவாகப்பேசி மீட்டது.  சீனா, ரஷியாவை நம்ப முடியாது: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவும் ரஷியாவும் நிரந்தர உறுப்பு நாடுகள். வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரம் உள்ள சக்திவாய்ந்த நாடுகள். ஆனால் மனித உரிமை மீறல் புகார்கள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் வரும்போது இலங்கைக்கு ஆதரவாக அந்த இரண்டும் செயல்படும் என்று நம்ப முடியாது. இந்தியா இப்போது தாற்காலிக உறுப்பு நாடாக சுழற்சி அடிப்படையில் இடம் பெற்றிருக்கிறது. ரத்து அதிகாரம் இல்லாவிட்டாலும் அது இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஆதரிக்காமல் ஒதுங்கியிருந்தாலே இலங்கை காப்பாற்றப்படும்.  ஈரான், சூடான், லிபியா ஆகிய நாடுகளையும் இதே போல மனித உரிமை மீறலுக்காகக் கண்டிக்கும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோது சீனாவும் ரஷியாவும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்துவிட்டன. எங்கள் விவகாரத்திலும் அப்படிச் செய்யக்கூடும். ஆனால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் எங்களைக் கண்டிக்கத் தீவிரம் காட்டுகின்றன. அமெரிக்கா கூட தனது நிலையை இறுதியில் மாற்றிக்கொள்ளலாம். ஐரோப்பிய நாடுகளால்தான் பிரச்னை. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு எங்களைக் காப்பாற்றும்.  மனித உரிமைகள் கமிஷன் எங்களைக் குற்றஞ்சாட்டிய உடனேயே இலங்கை அரசின் நிலையை விளக்க வெளிநாட்டுத் தூதர்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். சீனத் தூதர் அதில் பங்கேற்கவில்லை. காரணம் கேட்டபோது தங்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று பதில் கிடைத்தது.  நாங்கள் ஃபேக்ஸ் மூலம் அழைப்பை அனுப்பிவிட்டு தொலைபேசி மூலமும் அது வந்து சேர்ந்ததை உறுதி செய்துகொண்டோம். ஏதோ காரணத்துக்காக சீனா வரவில்லை. அத்துடன் அந்த அறிக்கை குறித்துகூட அது கருத்து தெரிவிக்கவில்லை. எனவே அது எங்களை ஆதரிக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. ரஷியாவைப்பற்றியும் உறுதியாக எதையும் கூற முடியவில்லை. ரஷியாவும் சீனாவும் எங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாத நிலையில், இந்தியா எங்களை ஆதரித்தால் நாங்கள் மீண்டுவிடுவோம்' என்று அந்த இலங்கை உயர் அதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக