செவ்வாய், 26 ஏப்ரல், 2011

Postal services should be in Thamizh -ka.pa.Aravaanan: அஞ்சல் துறை சேவை தமிழில் இருக்க வேண்டும்: க.ப. அறவாணன்

நீண்டநாள் வேண்டுகோள்கள். அஞ்சல் துறையும் மத்திய அரசும் கேளாச்செவிகளாக உள்ளன. முனைவர் க.ப.அறவாணன் வேண்டுகோள் தமிழ் மக்களின் வேண்டுகோள் என்பதை உணர்ந்து  உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். தமிழில் தொலை வரி என்பது ஏமாற்று வேலையாக உள்ளது. சில பகுதிகளில் மட்டும் வாழ்த்துச் செய்திகளைத் தமிழில் அனுப்பலாம். தமிழில் செய்தியை அனுப்ப விருமபினால் எங்களுக்கு அந்த வசதி  இல்லை என்றே அஞ்சகலகங்கள் தெரிவிக்கின்றன. கணிணிக் காலத்தில் இருந்து கொண்டு தமிழில் தொலைவரி அனுப்ப முடியவி்ல்லை என்றால் இழிவல்லவா? அலைபேசிகளும் மின்மடல்களும்  பெருகிய பின் தொலைவரியின் பயன்பாடு குறைந்தாலும் அதன் தேவையும்  இருக்கத்தான் செய்கின்றது. எனவே, தொலைவரியைத் (தந்தியைத்) தமிழில் அனுப்பவும் பிற நடவடிக்கைகள்  அனைத்தையும்
தமிழில் மேற்கொள்ளவும் நடவடிக்கை  தேவை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 







அஞ்சல் துறை சேவை தமிழில் இருக்க வேண்டும்: க.ப. அறவாணன்

First Published : 26 Apr 2011 04:42:24 AM IST


சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் "இந்திய அஞ்சல் வரலாறு - தமிழகத்தின் மீதான பார்வை' என்ற புத்தகத்தை பத்திரிகையாளர் என். ராம் வெளியிட, பெற்றுக்
சென்னை, ஏப். 25: பணவிடைத் தாள் உள்ளிட்ட அஞ்சல் துறை சேவைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் வலியுறுத்தினார்.  அஞ்சல் துறைத் தலைவர் (தமிழ்நாடு வட்டம்) கே. ராமச்சந்திரன் எழுதிய "இந்திய அஞ்சல் துறை வரலாறு - தமிழகம் மீது ஒரு பார்வை' என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், க.ப. அறவாணன் பேசியதாவது:  நமது அஞ்சல் துறையின் அருமையும் வெளிநாட்டில் சில காலம் தங்கியிருந்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. 1977-ல் பிரான்ஸ் நாட்டில் பணியாற்றியபோது எனது சொந்த ஊரில் இருந்து கடிதம் வருமா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அங்குள்ளவர்களை விசாரித்தபோதுதான் அங்கு வீடு தேடி கடிதம் வராது என்பதை அறிந்தேன். அஞ்சலகத்தில் பணம் செலுத்தினால், உங்களுக்கு என ஒரு அஞ்சல் பெட்டியும், சாவியும் வழங்கப்படும். அதில் உங்களுக்கு வரும் கடிதங்கள் போடப்படும். அதை நீங்களே சென்று சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.  ஆனால், நம் நாட்டில் வீடு தேடி வந்து கடிதங்களைச் சேர்க்கும் அஞ்சல் துறையையும், ஊழியர்களையும் என்னவென்று பாராட்டுவது. மக்களிடையே நெருக்கமான துறையாக அஞ்சல் துறை திகழ்கிறது. வாக்குச் சாவடிச் சீட்டுகளைக் கூட தபால் ஊழியர் மூலம் வாக்காளர்களுக்குச் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் கருதியது.  நமது சித்த வைத்தியம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றத் தவறிவிட்டோம். இதனால்தான் தேவையற்ற மருத்துவச் செலவுகள் அதிகரித்துள்ளன. வீட்டுத் தோட்டத்து இலைகள் மூலமே நோயெல்லாம் தீர்ந்திருக்கும்.  இதேபோல நமது பாரம்பரிய அஞ்சல் முறைகளை, செய்தி பரிமாற்ற வழிகளை பின்பற்றத் தவறிவிட்டோம். சங்க இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு மாதவி எழுதிய மடலே முதல் கடிதம். நாரை, கிளியை தூது விடுவதன் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.  அஞ்சல் துறை குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ள இந்த நூல் தமிழில் வெளியிடப்பட வேண்டும். கடந்த கால நிகழ்வுகள் அடங்கிய வரலாறும் இலக்கியம் ஆக மாறும். பிரிட்டன் குறித்து அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் ஆற்றிய உரைகளே அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.  இதேபோல நேரு தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் டிஸ்கவரி ஆஃப் இந்தியா, கிளிம்சஸ் ஆஃப் வேர்ல்ட் ஹிஸ்டரி என்ற இரு படைப்புகளாக வெளியாகின.  அஞ்சல் துறையின் சேவையை மேம்படுத்த புதிய சிந்தனைகள் தேவை. திருவள்ளுவருக்கு அஞ்சல் தலை வெளியிடுவதற்குக்கூட போராட வேண்டிய நிலை கூடாது. தமிழகத்தில் அஞ்சல் துறையின் சார்பில் பணவிடைத் தாள் (மணியார்டர் படிவம்) உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் தமிழில் இருக்க வேண்டும் என்றார் க.ப. அறவாணன்.  அஞ்சல் துறை முதன்மை தலைவர் (தமிழ்நாடு வட்டம்) சாந்தி நாயர் பேசியதாவது: நாட்டில் 1.55 லட்சம் அஞ்சலகங்களில் 5.30 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.  அஞ்சல் துறை பல்வேறு கட்டமாக வளர்ச்சி பெற்ற போதும் எதிர்காலத்தில் மக்களின் சேவையை மேலும் சிறப்பாக்குவதே இப்போதைய கனவாக உள்ளது.  இந்த நூல் இளைய தலைமுறை ஊழியர்களுக்கு அஞ்ல்துறை வரலாற்றை விளக்குவதோடு, வழிகாட்டியாக அமையும். இதே போல அஞ்சல் துறையின் நீண்ட வரலாற்றை அலுவலர்கள் பதிவு செய்ய முன்வர வேண்டும் என்றார் சாந்திநாயர்.  முன்னதாக பத்திரிகையாளர் என். ராம், நூலை வெளியிட சாந்தி நாயர் பெற்றுக் கொண்டார். வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலாசிரியர் கே. ராமச்சந்திரன் ஏற்புரை வழங்கினார்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக