வெள்ளி, 29 ஏப்ரல், 2011

dinamani editorial about 49.O. : தலையங்கம்: "ஓ' போட முடியவில்லை!

உள்ளன உள்ளபடி எழுதப்பட்டுள்ள அருமையான தலையங்கம். தேர்தல் ஆணையம் கவனிக்குமா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தலையங்கம்: "ஓ' போட முடியவில்லை!

First Published : 29 Apr 2011 12:26:00 AM IST


சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைத் தெரிவித்து 49 (ஓ) பிரிவைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு செய்தவர்களின் விவரங்களைப் போலீஸார் சேகரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.வெளிப்படையாக நடத்தப்படும் இந்த வாக்குப்பதிவைச் செய்தவர்களின் பெயர்ப் பட்டியலைச் சாதாரண பூத் ஏஜெண்டுகளே கையில் வைத்திருக்கும்போது, இந்த இடைக்காலத் தடையால் என்ன பயன் நேர்ந்துவிடும்?நியாயமாகப் பார்த்தால், தனிமனித ரகசியத்துக்கான உரிமையில் தலையிட்டதற்காகக் காவல்துறையினர் மீது துறைவாரி நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும்கூடத் தவறில்லை. வெறுமனே இடைக்காலத் தடையால், மனுதாரர் குறிப்பிடும் தொந்தரவுகளிலிருந்து 49(ஓ) வாக்காளர்களைக் காப்பாற்றிவிட முடியாது.49(ஓ) விதியைப் பயன்படுத்தியவர்கள் எத்தனை பேர் என்கிற எண்ணிக்கை தொடர்பான தகவலை மட்டுமே தேர்தல் ஆணையம் அறிவிக்க முடியுமே தவிர, இந்த விதியைப் பயன்படுத்தி யாரெல்லாம் வாக்களித்தார்கள் என்று தெரிவிக்கத் தேர்தல் ஆணையம் உள்பட யாருக்கும் உரிமையில்லை என்று சட்டம் சொல்கிறது. ஆனால், இந்த 49(ஓ) விதியைப் பயன்படுத்த விரும்பும் ஒரு வாக்காளருக்கு நேரிடும் இன்னல்கள் என்ன? அவர், வாக்குச் சாவடியில் உள்ள தலைமை அலுவலரை அணுகி தனது எண்ணத்தைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக 17ஏ என்ற படிவம் தனியாக வைக்கப்பட்டிருக்கும். அதை அவர் எடுத்துப் பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண் எல்லாவற்றையும் பதிவு செய்து, வாக்காளரின் கையொப்பத்தையும் பெற்றுக்கொள்வார் தலைமை அலுவலர். அதன் பிறகு வாக்குச் சாவடியைவிட்டு அந்த வாக்காளர் வெளியேறலாம்.இந்த நடைமுறைகளுக்குக் குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் ஆகும். அங்குள்ள பூத் ஏஜெண்டுகளுக்கு இந்தக் கால அவகாசம் போதுமானது. இந்த வாக்காளர்களின் பெயர்களை தங்கள் கையில் இருக்கும் பட்டியலில் ஒரு சுழி போட்டுக் கொண்டு விடுகிறார்கள்.மறுநாள் அவரது வீட்டுக்குக் குடிநீர் வராவிட்டால், (வேண்டுமென்றே குடிநீர்க் குழாய் துண்டிக்கப்பட்டிருந்தாலும்) அவர் உள்ளாட்சி அலுவலகங்களுக்குச் சென்று முறையிட்டாக வேண்டும். பூத் ஏஜெண்டாக இருந்தவர் நகர் மன்றக் கவுன்சிலராக அல்லது ஒன்றியக் கவுன்சிலராக இருக்கிறார் என்றால், இவரது முறையீட்டை அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இழுத்தடிப்பார்கள். "கேட்டால், உனக்குத்தான் எவனுமே வேண்டாமே' என்று 49(ஓ) பயன்படுத்தியதை நினைவூட்டுவார்கள். அந்த வாக்காளர் உலகில் மிகப்பெரிய குற்றத்தைச் செய்தவர்போல இந்த ஊழல் அரசியல்வாதிகள் முன்பாகப் பதைப்புடன் நின்றாக வேண்டும்.1961-ம் ஆண்டு முதலாகவே இவ்வாறு யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத ஒருவர் 49(ஓ) விதியைப் பயன்படுத்தி படிவம் 17ஏ அளிக்கும் வசதி இருந்து வருகிறது. ஆனால், அதை யாரும் பயன்படுத்தவில்லை. அதற்கு முக்கிய காரணம் அப்போதெல்லாம் வாக்குச் சீட்டு நடைமுறையில் இருந்தது. ஒரு நபர் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத நிலையில், வாக்குச்சீட்டில் பல இடங்களில் முத்திரையைக் குத்தி அதைச் செல்லாத வோட்டாக மாற்ற முடிந்தது. ஆகையால், பூத் ஏஜெண்ட் உள்பட எல்லோரும் அறிந்துகொள்ளும்படியாக 49 (ஓ) பயன்படுத்தப்படவில்லை.வாக்களிக்க விருப்பமில்லை என்பதைப் பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே ஒரு பொத்தான் ஒதுக்கப்படும் என்றால் ஒரு வாக்காளரின் வாக்குப்பதிவு ரகசியமானதாகவே இருக்கும். அவர் யார் முன்பாகவும் அம்பலப்பட்டு, பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை இருக்காது. வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாகப் பலரும் எடுத்துச் சொல்லியும்கூட, தேர்தல் ஆணையம் இந்தக் கோரிக்கையைப் புறக்கணித்துவிட்டது. ஒருவேளை, இவ்வாறு 49(ஓ) பிரிவைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்ற கருத்தாக இருக்கலாம்.இப்போது நிலைமை மாறிவருகிறது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு செய்த 3,67,53,114 பேரில் 24,824 பேர் மட்டுமே 49 (ஓ) பயன்படுத்தி வாக்களித்தவர்கள். இதில் சென்னையில் 3,407 பேரும், கோவையில் 3,061 பேரும் அதிகபட்சமாகப் பதிவு செய்துள்ளனர்.தொகுதி என்ற நிலையில் கூடலூர் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 787 வாக்குகளும், சிங்காநல்லூர் தொகுதியில் 646 வாக்குகளும் 49(ஓ) பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளன.அரசியல் சூழ்நிலை மாறாத நிலையில் அடுத்துவரும் தேர்தல்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அதைக் கருத்தில்கொண்டு புதிய விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.முதலாவதாக, வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே 49(ஓ) பயன்படுத்த தனி பொத்தான் வசதி அளிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, ஒரு தொகுதி அல்லது வார்டு தேர்தலில், பதிவான வாக்குகளில் 30 சதவீதம் 49(ஓ)வாக இருந்தால், அந்தத் தேர்தலை ரத்து செய்யச் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்.எதிர்க்கட்சிக்கு வாக்களித்தவர்கூட தனது வாக்கு ரகசியம் காப்பாற்றப்பட்டதற்காக மகிழ்ச்சி கொள்ளும்போது, யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதைப் பதிவு செய்தவருக்கு மட்டும் இத்தகைய இடையூறுகள் தேவையற்றவை. தேர்ந்தெடுக்க உரிமையுள்ள வாக்காளர்களுக்கு நிராகரிக்கவும் உரிமை உண்டு என்பது நிலைநாட்டப்படாத வரை 49(ஓ) ரகசியத்தை அம்பலப்படுத்தும் விதியாகவே நீடிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக