சனி, 30 ஏப்ரல், 2011

Anticipations from the new govt. - education : என்ன வேண்டும் எங்களுக்கு? பள்ளிக் கல்வித் துறை

இது போன்ற கட்டுரை வர வேண்டும் என எண்ணியதற்கேற்ப வெளிவந்துள்ளது. (அவ்வாறு எழுதி அனுப்பினால் தினமணி வெளியிடுமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது.)தினமணிக்குப் பாராட்டுகள். ஆனால், அனைவருக்கும் பாகுபாடற்ற கட்டணமில்லாக் கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் வலியுறுத்தவில்லையே! இவைதான் அடிப்படைத் தேவை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

என்ன வேண்டும் எங்களுக்கு? பள்ளிக் கல்வித் துறை

First Published : 30 Apr 2011 12:00:00 AM IST


வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 14 நாள்கள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், முக்கியமான துறைகளில் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன, அதற்குத் தீர்வு என்ன, அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசிடம் அந்தந்தத் துறைகளிடமிருந்து மக்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்கிற விவரங்களைத் தொகுத்தளித்து, அடுத்த அரசுக்கு சில ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.  - ஆசிரியர்.  கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 14 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஏழை, நடுத்தர வகுப்பினர் கூடத் தங்கள் பிள்ளைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். கந்து வட்டிக்கு கடன் வாங்கிக் கூட தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பக் காரணம் என்ன?  தமிழக அரசிடம் உங்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்வியைக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் வைத்ததுமே அவர்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் வைத்த கோரிக்கை அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான்.  கடந்த 20 ஆண்டுகளில் புற்றீசல் போல முளைத்துவிட்ட தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் அதிகக் கட்டணத்தை வசூல் செய்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்கு முக்கிய பிரசார ஆயுதமாகப் பயன்பட்டது அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் சிறப்பாக இல்லை என்பதுதான். தரம், தரம் என்ற பெயரில் சேவைத்துறை என்பதிலிருந்து வருமானம் ஈட்டும் துறையாக கல்வித் துறையை கீழே இழுத்துக் கொண்டுவந்துவிட்டனர் தனியார் பள்ளி நிர்வாகத்தின்ர்.  நிதிநிலை அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.10,148 கோடி ஒதுக்கப்பட்டாலும், அரசுப் பள்ளிகளின் நிலை மட்டும் மாறாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.  புதிதாக அரசுப் பள்ளிகளைத் தொடங்காமலும், இருக்கும் பள்ளிகளைத் தரம் உயர்த்தாமலும் 5 ஆண்டுகளைக் கடத்திவிட்டது இப்போதைய அரசு.  பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தும் சட்டம், சமச்சீர் கல்வி முறை ஆகியவற்றை அமல்படுத்தியிருந்தாலும், கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய அவை போதுமான நடவடிக்கைகளாக இல்லை.  பள்ளிக் கல்வித் துறை புத்துயிர்ப்பைப் பெற என்னென்ன நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளலாம்?  பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தும் சட்டம்: சென்ற கல்வியாண்டில், நீதிபதி குழு நிர்ணயித்தக் கட்டணத்தை மட்டுமே செலுத்துவோம் எனக் கூறிய பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான தொல்லைகள் தரப்பட்டன. பள்ளியை விட்டே வெளியேற்றுவது, வகுப்புகளில் தனியாக அமரச் செய்வது, வகுப்புகளுக்குள்ளே அனுமதிக்க மறுப்பது என ஏராளமான செயல்களைப் பல பள்ளிகள் செய்தன.  ஆனால், இதுவரை ஒரேயொரு பள்ளி மீதுகூட உறுதியான நடவடிக்கை எதையும் அரசோ, அதிகாரிகளோ எடுக்காதது பெற்றோருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டத்தை மீறுபவர்களைத் தண்டித்தால்தானே அந்தச் சட்டத்துக்கு மதிப்பிருக்கும்.  எனவே, நீதிபதி குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.  விதிகளை மீறும் பள்ளிகள் மீது யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் தெளிவு இல்லை. நீதிபதி குழு பரிந்துரை செய்தால்தான் நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் இதுபோன்று வரும் புகார்களைப் பதிவு செய்யவும், விசாரணையும் செய்யவும் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மாவட்ட அளவில் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.  நீதிபதி குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வசூலிக்கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.  அரசே அங்கீகரிக்கும் தனியார் பள்ளிகள்: நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் தரமான மேல்நிலைக் கல்வி வழங்க தமிழக அரசு 2007-ல் ஓர் அரசாணையைப் பிறப்பித்தது. அதில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தரமான தனியார், மத்திய, மாநில அரசு பள்ளிகளில் படிப்பதற்கான செலவை அரசே ஏற்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.  இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  ஒரு மாணவன் மாவட்ட அளவில் சிறப்பான இடம் பெற்றாலே அந்தப் பள்ளி தரமானதாக இருக்கும் என்றுதானே அர்த்தம். அந்த மாணவனை வேறு அரசுப் பள்ளியிலோ, தனியார் பள்ளியிலோ எதற்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்? இது அரசே தனியார் பள்ளிகளை அங்கீகரிப்பது போல் இருக்கிறதே என்று கல்வியாளர்கள் வாதிடுகின்றனர். சிறந்த மாணவர்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அரசுப் பள்ளிகளை தரம் தாழ்த்தும் நடவடிக்கைகளில் அரசே இறங்கக் கூடாது.  கட்டாயக் கல்விச் சட்டம்: அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் நாடு முழுவதும் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. ஆனால், தமிழக அரசு இதுவரை இந்தச் சட்டத்திற்கான விதிகளை உருவாக்கவில்லை.  இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தலைசிறந்த கல்வியாளர் தலைமையில் கல்வி ஆணையமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.  பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதியை எதிர்க்குமாறு சில தனியார் பள்ளிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.  பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி அறிவித்ததை தன்னிச்சையான நடவடிக்கை என்று கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தப் பள்ளிகளின் சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டத்தில் பள்ளிகளில் இருக்க வேண்டிய வசதிகள் குறித்து வரையறுத்து கூறப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து இப்போது என்னென்ன வசதிகள் உள்ளன, முழுமையான வசதிகளை ஏற்படுத்த எவ்வளவு செலவாகும் என்பது குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் கோருகின்றனர்.  சமச்சீர் கல்வி: இந்தக் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. ஆனால், இதுவரை சமச்சீர் கல்வி புத்தகங்கள் வெளிவரவில்லை. அதன் காரணமாக, சமச்சீர் கல்வியை எதிர்த்து தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பொதுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரிடம் விழிப்புணர்வு பிரசாரம் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து சரியான புரிதலை ஏற்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் கோருகின்றனர்.  பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தில் எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறைப்படுத்திக்கொண்டே இதை இன்னமும் செழுமைப்படுத்த வேண்டும்.  பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஒரே விதமான கல்வி என்பதை மையமாகக் கொண்டு புதிய அரசின் கொள்கைகள் இருக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவது, சமச்சீர் கல்விமுறையை செழுமைப்படுத்துவது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள கட்டாயக் கல்விச் சட்டத்திற்கான விதிமுறைகளை விரைந்து இயற்றுவது, நீதிபதி குழுவின் கட்டண நிர்ணயத்தை தீவிரமாக அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் ஒரே சீரான கல்வி என்ற இலக்கை நோக்கி புதிய அரசு எடுத்து வைக்கும் அடுத்த அடியாக இந்த நடவடிக்கைகள் இருக்கும். 

1 கருத்து: