வெள்ளி, 29 ஏப்ரல், 2011

Messenger to Mercury: dnamani article: எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'

தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் நன்றாக எழுதியுள்ளார். பாராட்டுகள். தூது கலம் பற்றியும் புதன் பற்றியும்  மேலும் அறிய
http://messenger.jhuapl.edu/  என்னும் வலைத்தளத்தினைக் காண்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'

First Published : 29 Apr 2011 12:28:00 AM IST


தன் ஒரு தொல்லை பிடித்த கிரகம். அதை வெறும் கண்ணால் பார்க்க இயலும் என்றாலும், அது எளிதில் தென்படாது. சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதன் கிரகம் சிலசமயம் கிழக்கு வானில் சூரிய உதயத்துக்கு முன்னர் சிறிது நேரம் தெரியும்; அல்லது மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சிறிதுநேரம் தெரியும். புதன் கிரகம் ஒருவேளை உங்கள் கண்ணில் தென்பட்டாலும் அது வடிவில் சிறியது என்பதால் மங்கலான சிறிய ஒளிப்புள்ளியாகக் காட்சி அளிக்கும்.எந்த ஊராக இருந்தாலும் அடிவானம் பெரும்பாலும் மேகம் சூழ்ந்ததாக இருக்கும் என்பதால் எப்போதாவதுதான் அடிவானில் புதன் கிரகத்தைக் காண இயலும். ஆகவேதான், "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்ற பழமொழி தோன்றியது.பிரபல வானவியல் விஞ்ஞானியான கோப்பர்னிக்கஸ் மரணப்படுக்கையில் கிடந்தபோது கடைசிவரை என்னால் புதன் கிரகத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தத்துடன் கூறினாராம்.ஒருவகையில் பார்த்தால் புதன் சீந்தப்படாத கிரகம். குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி வரும் போதெல்லாம் விலாவாரியாகப் பலன்களை வெளியிடும் பத்திரிகைகள் புதன் பெயர்ச்சி பற்றிச் சீந்துவதில்லை. ஜோசியர்களும் சரி, புதன் பெயர்ச்சிப் பலன்கள் பற்றிய புத்தகங்களை வெளியிடுவதில்லை. புதன் கிரகம் மாதாமாதம் ராசி மாறுவதே இதற்குக் காரணம். இது கிடக்கட்டும்.ஆளில்லா விண்கலங்களை அனுப்பி செவ்வாய், வியாழன் முதலான கிரகங்களை ஆராய்ந்துள்ள அமெரிக்க, ரஷிய விஞ்ஞானிகள்கூட புதன் பக்கம் திரும்பியது இல்லை. செவ்வாய் கிரகத்துக்கு இதுவரை பல ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்போதும் ஓரிரு விண்கலங்கள் செவ்வாயைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.வியாழன் கிரகத்தை கலிலியோ விண்கலம் 1995 முதல் 14 ஆண்டுகள் ஆராய்ந்தது. 2004-ம் ஆண்டில் போய்ச் சேர்ந்த காசினி விண்கலம் இன்னமும் சனி கிரகத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளி (சுக்கிரன்) கிரகமும் நன்கு ஆராயப்பட்டுள்ளது. ஆனால், புதன் கிரகத்தை 1973-ம் ஆண்டில் மாரினர் 10 விண்கலம் எட்டிப்பார்த்ததோடு சரி. அதன் பிறகு புதன் கிரகத்தை நோக்கி விண்கலம் அனுப்பப் பெரிய முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மற்ற கிரகங்களுக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்புவதில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், புதன் கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதில் பல பிரச்னைகள் உண்டு. பூமியானது சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் புதன் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய மண்டலத்திலேயே புதன் கிரகம்தான் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. ஆகவே, புதன் கிரகத்தை நோக்கி ஒரு விண்கலம் செலுத்தப்படுமானால் அது சூரியனை நோக்கிச் செல்வதாக இருக்கும்.இதில் இரண்டு பிரச்னைகள் உள்ளன. முதலாவதாக, புதன் கிரகத்தை(சூரியனை) மேலும் மேலும் நெருங்கும்போது விண்கலத்தைக் கடும் வெப்பம் தாக்கும். இரண்டாவது பிரச்னை நாம் அனுப்பும் ஆளில்லா விண்கலத்தின் வேகம் மேலும் மேலும் அதிகரிக்கும். இது திருப்பதி அல்லது ஏற்காடு மலை உச்சியிலிருந்து ஒரு லாரி அல்லது பஸ் கீழே இறங்குவதற்கு ஒப்பானது. புதனை நோக்கிச் செல்கிற விண்கலத்தின் வேகம் அதிகமாக இருந்தால் அதில் என்ன சிக்கல் என்று கேட்கலாம். வேகமாக வருகிற எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி ரயில் நிலையத்தை நெருங்கும்போது அதன் வேகம் குறைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அது ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நிற்காமல் வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்.புதன் கிரகத்தை நெருங்கி புதன் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்குகிற அளவுக்கு விண்கலத்தின் வேகம் குறைந்தால்தான் விண்கலம் புதன் கிரகத்தைச் சுற்ற ஆரம்பிக்கும். விண்கலத்தின் வேகத்தை எப்படிக் குறைப்பது?ஒரு ராக்கெட் உயரே கிளம்புகையில் நெருப்பும் சூடான வாயுவும் பின்னோக்கிப் பீச்சிடுவதன் விளைவாகவே ராக்கெட் முன்னோக்கி அதாவது உயரே பாய்கிறது. அதே ராக்கெட்டில் (அல்லது விண்கலத்தில்) முன்னோக்கிப் பீச்சிடும் வகையில் ராக்கெட் எஞ்சின் பொருத்தப்பட்டு குறிப்பிட்ட கட்டத்தில் அது முன்னோக்கிப் பீச்சினால் ராக்கெட்டின் வேகம் குறையும்.சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் அனைத்திலும் இவ்வித ஏற்பாடு உண்டு. அதன் பலனாகத்தான் சந்திரனை நெருங்கும் விண்கலங்களின் வேகம் குறைந்து அந்த விண்கலங்கள் சந்திரனால் ஈர்க்கப்பட்டு சந்திரனைச் சுற்ற முற்பட்டன. புதனுக்கு அனுப்பப்படும் விண்கலத்தில் இவ்வித ஏற்பாடு செய்வது என்றால் நிறைய எரிபொருளை வைத்தாக வேண்டும்.இதன் விளைவாக, ராக்கெட் மற்றும் விண்கலத்தின் எடை கூடும். புதனை ஆராய்வதற்கான எல்லாக் கருவிகளையும் விண்கலத்தில் வைத்து அனுப்ப இயலாது என்ற நிலை ஏற்படும். ஆகவே, புதன் கிரகத்தை ஆராய 2004-ம் ஆண்டு ஆகஸ்டில் மெசஞ்சர் என்னும் சுருக்கமான பெயர் கொண்ட விண்கலம் செலுத்தப்பட்டபோது அதன் வேகத்தைப் படிப்படியாகக் குறைக்க வேறு வழி கையாளப்பட்டது.இத் திட்டப்படி மெசஞ்சர் விண்கலம் சூரியனை ரவுண்டு அடித்துவிட்டு மறு ஆண்டு ஆகஸ்டில் பூமியை நெருங்கியது. அப்போது அதன் வேகம் சற்று மட்டுப்பட்டது. அதாவது பூமியின் ஈர்ப்பு சக்தியானது அந்த விண்கலத்தின் வேகத்தை ஓரளவு குறைத்தது.ஒரு விண்கலம் ஒரு கிரகத்தைக் கடந்து செல்லும்படி செய்ய முடியும். அக் கட்டத்தில் அது அக் கிரகத்தை எந்தப் பக்கமாகக் கடந்து செல்கிறது என்பதைப் பொறுத்து விண்கலத்தின் வேகம் குறையும் அல்லது அதிகரிக்கும். மெசஞ்சர் விண்கலம் பூமியை மாற்றுப் பக்கமாகக் கடந்து சென்றதால் அதன் வேகம் குறைந்தது. பின்னர் மெசஞ்சர் விண்கலம் மேலும் சில தடவை சூரியனைச் சுற்றி விட்டு சுக்கிரன் (வெள்ளி) கிரகத்தை 2006-ம் ஆண்டிலும், பின்னர் 2007-ம் ஆண்டிலும் கடந்து சென்றது.இதன் பலனாக வேகம் மேலும் குறைந்தது. பின்னர், அந்த விண்கலம் சூரியனைச் சிலதடவை சுற்றிவிட்டு புதன் கிரகத்தை மூன்று முறை கடந்து சென்றது. இதற்குள்ளாக அதன் வேகம் நன்கு குறைந்துவிட்டதால் இந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி அந்த விண்கலம் புதனின் பிடியில் சிக்கி அக் கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்தது.அமெரிக்க நாஸா விண்வெளி அமைப்பைச் சேர்ந்த சென் வான் யென் என்ற நிபுணர் தான் மெசஞ்சர் விண்கலம் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக் கொடுத்தார். இதன் விளைவாக, அந்த விண்கலம் சூரியனை மொத்தம் 15 தடவை சுற்ற வேண்டியதாகி கடைசியில் புதன் கிரகத்தை அடைந்தது.2004-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட மெசஞ்சர் விண்கலம் சுமார் ஆறரை ஆண்டுக்காலம் விண்வெளியில் அங்குமிங்குமாக வட்டமடித்து புதனை அடையும்போது அது பயணம் செய்த மொத்த தூரம் சுமார் 790 கோடி கிலோ மீட்டர். இத்துடன் ஒப்பிட்டால் பூமியிலிருந்து புதன் கிரகத்துக்கு உள்ள அதிகபட்ச தூரம் சுமார் 22 கோடி கிலோ மீட்டர். பூமிக்குள் 18 புதன் கிரகங்களைப் போட்டு நிரப்பிவிடலாம். அந்த அளவுக்குப் புதன் கிரகம் சிறியது என்பதால் அதற்கு ஈர்ப்பு சக்தி குறைவு. ஆகவே, மெசஞ்சர் விண்கலத்தைப் புதனின் பிடியில் சிக்க வைப்பதில் மேலும் பிரச்னை இருந்தது.நல்லவேளையாக எல்லாம் திட்டமிட்டபடி நடந்து மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தைச் சுற்றுகிறது. வருகிற மாதங்களில் மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகம் பற்றி ஏராளமான தகவல்களையும் படங்களையும் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்போது மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தை வட்ட வடிவப் பாதையில் சுற்றாமல் நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. அந்த அளவில் அது ஒருசமயம் புதன் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து 200 கிலோ மீட்டர் உயரத்திலும் இன்னொரு சமயம் புதன் கிரகத்திலிருந்து 15 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்திலும் அமைந்தவாறு புதன் கிரகத்தைச் சுற்றி வருகிறது.ராஜ சகவாசம் ஆபத்து என்பார்கள். அந்த மாதிரி சூரியனின் பார்வையால் புதன் கிரகத்தில் பகலாக உள்ள பகுதியில் வெப்பம் சுமார் 450 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இரவாக உள்ள பகுதியில் கடும் குளிர். மைனஸ் 200 டிகிரி செல்சியஸ்.புதனில் பகலாக உள்ள பகுதியிலிருந்து மேலே கிளம்பும் வெப்பம் மெசஞ்சர் விண்கலத்தைத் தாக்குகிற ஆபத்து உண்டு என்பதால்தான் புதனை மெசஞ்சர் விண்கலம் நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது.மெசஞ்சர் விண்கலத்தை சூரியனின் வெப்பமும் புதன் கிரகத்திலிருந்து மேல்நோக்கி வரும் வெப்பமும் தாக்காதபடி ஒருவகையான காப்புக் கேடயம் காப்பாற்றுகிறது. இந்தக் காப்புக் கேடயத்தையும் இதைத் தயாரிப்பதற்கான பொருளையும் உருவாக்குவதற்கு மட்டுமே ஏழு ஆண்டுகள் பிடித்தன.மெசஞ்சர் விண்கலத்தை உருவாக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு அதைச் செய்து முடிக்கவும் அதன் பாதையை நிர்ணயிக்கவும் தகுந்த உத்திகளை உருவாக்குவதற்கும் மொத்தம் 20 ஆண்டுகள் ஆனது. புதனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதில் உள்ள விசேஷ பிரச்னைகளே அதற்குக் காரணம். விண்வெளி விஞ்ஞானிகளும் புதனை நீண்ட காலம் சீந்தாததற்கு இதுவே காரணம்.

1 கருத்து: