மதுரை,அக்.7: பஸ் நிறுத்தங்களில் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் விபத்துகள் ஏற்பட்டது தொடர்பாக தினமணியில் வெளியான செய்திகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து வழக்காக வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதுகுறித்த வழக்கு விவரம்: ராமநாதபுரத்தில் பஸ் பாஸ் எடுத்துவராத மாணவி ஒருவர், நடத்துனரால் அவமதிக்கப்பட்டு பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார். இதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார். பட்டுக்கோட்டை அருகே பஸ் நிறுத்தத்தில் மாணவர் ஒருவர் அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளையடுத்து நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதில் பஸ் நிறுத்தங்களில் அரசு பஸ்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும். இலவச பஸ் பாஸ் எடுத்துவராதவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது. பஸ்நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் சென்றால் போக்குவரத்துக் கழக பொது மேலாளரிடம் புகார் செய்யுமாறு கண்டிப்புடன் தெரிவித்திருந்தது. இதுகுறித்து தினமணியில் எது இலவசம் என்ற தலைப்பில் 18.9.2010-ல் தலையங்கம் வெளியானது. இந்நிலையில் செப்டம்பர் 22-ம் தேதி மதுரை தல்லாகுளம் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் நிற்காமல் சென்றபோது, அதில் ஏற முயன்ற ஒரு மாணவரின் கால்கள் நசுங்கிச் சேதமடைந்தது. இதுதொடர்பாக தினமணி விரிவான செய்தி வெளியிட்டது. இந்தச் செய்திகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.முருகேசன், டி.ராஜா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட தென்மண்டல அரசுப் போக்குவரத்துக்கழக பொது மேலாளர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். நீதிபதிகள்: நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், ஓட்டுநர், நடத்துனர்கள் அரசின் கொள்கையை உணராமல் செயல்பட்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படும்நிலை உள்ளது என்றனர்.அரசு வழக்கறிஞர்: நடத்துனர், ஓட்டுநருக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளித்து விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம் என்றார்.நீதிபதிகள்: உயர் நீதிமன்றம் முன்புற நிறுத்தத்திலேயே பஸ்கள் நிற்காமல் செல்வது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. மாணவர்கள் அதிகம் நிற்கும் பஸ் நிறுத்தத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் பஸ் நின்றுசெல்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான பதில் மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
கருத்துக்கள்
நீதிபதிகளுக்குப் பாராட்டுகள். தினமணியின் கடமை தொடரட்டும்!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/8/2010 1:51:00 PM
10/8/2010 1:51:00 PM
சிண்டு முடியும் செய்திகளைத் தவிர்த்து இப்படி உருப்படியான மக்களுக்கு பயன்படும் செய்திகளை வெளியிட்டால் அதுவே மக்களுக்கு செய்யும் பெரிய தொண்டு. தொடரட்டும் தினமணியின் இத்தகையப் பணி.
By நிரஞ்சன்
10/8/2010 11:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்10/8/2010 11:53:00 AM