கடல் கடந்து வெவ்வேறு வேலைகளுக்காகப் போகும் தொழிலாளர்களின் நிலை பற்றிய ஆய்வுக்காக – வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனுக்குச் சென்று வந்தவர் பத்திரிகையாளர் மணா.
ஓமனில் சில பகுதிகளுக்குப் போய் வந்ததின் அடிப்படையில் – இந்தக் கட்டுரை.
“முஸ்லிம் ஆண்கள் பாலை மணலில் ரத்தம் சிந்துகின்றனர். வெளிநாடு சென்று வியர்வை சிந்தி உழைப்பதால் அவர்கள் மிகுந்த துன்பங்களைச் சந்திக்கின்றனர். இங்கே அவர்களைப் பிரிந்து முஸ்லிம் பெண்களும் துன்பப்படுகின்றனர். இந்தக் கொடூரமான வாழ்க்கை இனி தொடரக்கூடாது.’’
- தஞ்சையில் சமீபத்தில் நடந்த முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பேரணிக்குப் பிறகு - அதில் கலந்து கொண்ட தனியார் கல்லூரி முதல்வரான மும்தாஜ் ஆலிமாவின் பேச்சு (உணர்வு-மார்ச், 26, 2004 இதழ்)
மிகைப்பட்ட பேச்சல்ல இது. வளைகுடா நாடுகளுக்குப் போய் உழைக்கிறவர்களின் சிரமங்களையும், தவிப்புகளையும் எதிரொலிக்கிற ஒரு மனசாட்சியின் குரல் - இந்தப் பேச்சு.
வளைகுடா நாடுகளுக்குப் போனாலே
வாழ்க்கையின் திசையே மாறிவிடும்;
சொந்த ஊரில் நிலபுலன்கள் வாங்கிப் போடலாம்;
வாசனைத்திரவியம் மணக்க ஊர் திரும்பலாம்
என்கிற எண்ணம்தான் பெரும்பாலானவர்களிடம் எழுகிறது. இது ஒரு புறத்தோற்றம்தானே ஒழிய, முழு உண்மையல்ல. இன்னொரு பக்கமும் இருக்கிறது.
கல்ஃப் நியூஸ் என்று வளைகுடா நாடுகளிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ்களின் பக்கங்களைப் புரட்டினாலே ‘காணாமல் போனவர்கள்’ என்று புகைப்படங்களுடன் விளம்பரங்கள் அதிர்ச்சியான விஷயம். இந்த லிஸ்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள். காணாமல் போகும் லிஸ்டில் தமிழர்கள் தொடர்ந்து இடம் பெற என்ன காரணம்? ஏன் கடல் கடந்தும், இந்தக் கொடுமையான நிலைமை?
வளைகுடா நாடுகளில் 1970களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோல் எண்ணெய் வளம் நியை உபரி வேலை வாய்ப்புகளை உருவாக்கிய போது – அந்தத் தேவைக்காகக் கடல் கடந்து போய் உழைக்க ஆரம்பித்தார்கள் இந்தியத் தொழிலாளிகள். குறிப்பாக தென்னிந்தியாவில் கேரளாவிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் போய் உதிரித் தொழிலாளர்களாகப் பாடுபட்டு அவர்கள் மூலமாக இந்தியாவுக்குக் கிடைத்த அந்நியச் செலாவணியும் அதிகம்.
உலகம் முழுக்கப் புலம்பெயர்ந்த இந்தியர்களின் ஆண்டு வருமானம் -இந்திய உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம். அதாவது 300 பில்லியன் (14,40,000 கோடி ரூபாய்) என்கிறது அரசு தரப்பிலான புள்ளி விவரம். இதில் கணிசமான வருமானத்தைத் தந்தவை வளைகுடா நாடுகள்தான்.
வளைகுடா நாடுகள் -
அவை மூலமாகக் கிடைக்கும் வருமானம், கணிசமான
தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த பொருளாதார மாற்றங்கள் -
இவையெல்லாம் நாம் பார்க்கும் பார்வையின் ஒரு கோணம் மட்டுமே. இதற்கும் அப்பால் கடல் கடந்து போகும் தொழிலாளிகளை வளைகுடா நாடுகள் எதிர்கொள்ளும் விதம், பரிதாபமும், தவிப்பும், தனிமையும் நிரம்பிய தொழிலாளர்களின் இன்னொரு பக்கத்தையும் பார்த்தால் மட்டுமே - பாலைவன வெப்பம் மாதிரி அதன் உண்மையான முகம் தெரியும்.
வளைகுடா நாடுகளான சௌதி, குவைத், துபாய், பஹ்ரைன், ஓமன், ஈராக், சௌதி அரேபியா என்று பல பகுதிகளுக்கும் தென்னிந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வெவ்வேறு வேலைகளுக்காகப் போனாலும், அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்திருக்கிற ஓமன் நாட்டைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்.
சுல்தானேட் ஓமன். இப்படித்தான்தேசியப் பெயராகச் சொல்கிறார்கள். ஓமனைப் பற்றி. மூன்று லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுக்கு அரேபியக் கடலோரம் விரிந்திருக்கிற ஓமனில் நடப்பது மன்னராட்சி. சுல்தான் குவாபஸ் பின் சையது தான் முப்பத்தி நான்கு ஆண்டுகளாக மன்னர். 1970ல் அப்போது மன்னராக இருந்த தைமூரைப் பதவியிலிருந்து இறக்கி விட்டுப் பதவியேற்றவர் இங்கிலாந்தில் படித்து பிரிட்டிஷ் ராணுவ அகாடெமியில் உயர் அதிகாரியாகச் சிறிது காலம் பணியாற்றி, பிறகு மன்னரான இவரே பிரதமர். 1999-ல் இவருக்கு சர்வதேச அமைதிக்கான விருது கிடைத்தது.
இவரால் நியமிக்கப்பட்ட ஒரு குழு தான் ஓமனில் ஆட்சி செய்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள் தொகை 2,017,591. மிக நீளமான 1700 கி.மீ. அளவுக்கு கடற்கரை. புகழ்பெற்ற சில துறைமுகங்களுடன் சரித்திரச் சாயல் படிந்த நாட்டின் முக்கிய வருமானம், எண்ணெய் வளம். இந்த வருமானத்திலிருந்தே கட்டிடங்களை வறண்ட மண்ணில் எழுப்புகிறார்கள். சாலைகள் அமைக்கிறார்கள். நீர் வளமில்லாதிருந்தாலும் சில தொழில் வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆனால் வாய்ப்புகள் எல்லாவற்றிலும் ஓமன் நாட்டாருக்கே முதலிடம். அரசு பொறுப்புகள், வங்கி வேலைகள் என்று பலவற்றில் அவர்களுக்கே முதலிடம். கட்டிட வேலை, நகரைச் சுத்தப்படுத்தும் வேலை, பாலைவன மணலில் எண்ணெய் வளப் பகுதியில் சில வேலைகள், சில ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள், சுத்திகரிப்பு நிறுவனங்கள் - இவற்றிற்கு மட்டும் வெளி நாடுகளிலிருந்து வந்திருக்கும் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஓமனில் மட்டும் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 3 லட்சம். (இது ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் கொடுத்த கணக்கு) இதில் பாகிஸ்தானியர்கள், பிலிப்பைன்ஸ், சீன நாட்டவர்களைச் சேர்த்தால் மொத்தம் 50 ஆயிரம் பேர். மீதமுள்ள இரண்டரை லட்சம் பேரும் இந்தியர்கள். இதில் அதிகம் கேரளாவிலிருந்து வந்திருக்கும் மலையாளிகள். அடுத்து தமிழர்கள். இப்போது ஆந்திராவிலிருந்து தொழிலாளர்கள் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களில் skilled, unskilled - என்று தொழிலாளர்களில் இரு பிரிவுகள். இதில் கல்வி மற்றும் தொழில் திறனுள்ள இந்தியத் தொழிலாளர்களும், சில வியாபாரிகளும் பெரும்பாலும் பிரச்சினையில்லாமல் சௌகர்யமான வாழ்க்கை வாழ்கிறார்கள். மன்னராட்சியைப் பற்றி அபாரமாகப் புகழ்கிறார்கள். பொற்காலம் என்று சொல்கிற அளவுக்குப் போகிறார்கள். தமிழகச் சூழலிலிருந்து போனாலும் மேற்கத்தியக் கலாச்சாரம் அவர்களின் வாழ்க்கை மீது படிந்திருக்கிறது.
இவர்களின் எண்ணிக்கை குறைவுதான் (சுமார் 50 ஆயிரத்திற்குள்). மீதமுள்ள இரண்டு லட்சம் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளிகள். அவர்களில் பலருக்கு முறையான விசா உண்டு. தொழிலாளருக்கான அடையாள அட்டை உண்டு. பெரும்பாலும் குடும்பத்தினருடன் இல்லாமல், தனிமையில் தங்கியிருக்கும் இவர்களுக்குச் சாப்பாட்டுச் செலவு போக மீதமுள்ள பணத்தைச் சேமிக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் இந்தியாவுக்கு வந்து விட்டுப் பரிதவிப்புடன் போகிறார்கள்.
இவர்களுக்க அடுத்து இருக்கம் தொழிலாளர்கள் ஆட்டம்தான் பிரச்சனையே. ஏதாவது ஒரு போலி ஏஜெண்டினால் வளைகுடா நாடுகள் பற்றிய அபரிதமான ஆசைகளும், கனவுகளும் கிளறிவிடப்பட்டுக் கையிலிருக்கம் சில சொத்துக்களை விற்றாவது 80 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை ஏஜெண்டுகளிடம் கொடுத்து விட்டு வறண்ட மண்ணில் கால் பதிப்பதில் ஆரம்பிக்கிறது சூடு.
இவ்வளவுக்கும் ஓமனைப் பொறுத்தவரை விசா வழங்குவதில் கெடுபிடிகள் அதிகம். யாராவது ஸ்பான்சர் இருந்தால்தான் டூரிஸ்ட் விசா கூட வழங்குகிறார்கள் அல்லது ஒரு ஹோட்டலில் தங்குவதற்கான வசதியுடன விசா வழங்குகிறார்கள். இருந்தும் இதையும் மீறி போலி ஏஜெண்டுகள் மூலம் ஒரு வழியாக ஏமாற்றப்பட்டு ஓமனுக்கு வந்திறங்குகிறவர்கள் தற்போது அதிகப்பட்டிருக்கிறார்கள். இதற்கென்றே தமிழகத்திலும், ஆந்திராவிலும் போலியான டிராவல் ஏஜெண்டுகள் உருவாகி, டூரிஸ் விசாவில் வந்திறங்குகிறவர்களை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். பலர் வெளியே வந்து வேலை தேடி தலைமறைவாக அலைய ஆரம்பிக்கிறார்கள். வறண்டு கிடக்கும் அந்நிய மண்ணில் வந்திறங்கியதும் தாங்கள் ஏமாற்றப்பட்ட அவலம் பலருக்குத் தெரிய வருகிறது. ஏதாவது சிறுசிறு கூலி வேலைகளைச் செய்கிறார்கள். இது தவிர குறைந்த கூலிக்கும் இவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் சில நிறுவனங்கள் இவர்களுக்கு உரிய சம்பளமும் கொடுப்பதில்லை. கையிலிருந்த பாஸ்போர்ட்டையும் உரிமையாளர் வாங்கிக் கொண்டு நிராதரவாக நிற்கும் தொழிலாளர்கள் மட்டும் சில ஆயிரக்கணக்கில்.
ஓமனில் செய்திகள் வெளியாவதற்கு அரசு தரப்பில் கடும் கட்டுப்பாடுகள்.எந்த முரண்பாடான செய்தியும் வெளியே போய்விடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருக்கிறார்கள். அதனாலேயே எந்த்த் தொழில் நிறுவனங்களில் எவ்வளவு மோசமானபடி தொழிலாளர்கள் நடத்தப்பட்டாலும் - அது குறித்து தகவல்கள் வெளியே தெரிவதில்லை.
ஏறத்தாழ 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெவ்வேறு தொழில்களில் வேறு வழியில்லாத நிலையில் ஈடுபட்டிருந்தாலும் வெளியே யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூட முடியாத நிலை.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என்று பல மாவட்டங்களிலிருந்து போலி ஏஜெண்டுகள் மூலமாக வந்து சேர்கிறவர்களுக்கு கிடைக்கிற வேலை - பெரும்பாலும் சுத்தப்படுத்துகிற வேலையும், கட்டிடவேலையும். எம்.ஏ., எம்.காம்., வரை படித்துவிட்டு நிறையச் சம்பாதிக்கலாம் என்கிற கனவுகளுடன் விமானம் ஏறியவர்கள் மஸ்கட் நகராட்சியில் சேர்ந்து கழிப்பறைகளையும், சாலைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிடைக்கிற சம்பளமும் 5 ஆயிரத்திற்கும் குறைவு. ஏமாற்றப்பட்டு ஊர் திரும்பிப் போகிற அவமானத்தை விட, ஏதோ கிடைத்த வேலையில் சேர்ந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை.
‘வாடிகபி’ பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஒரு முகாமுக்கு போனபோது, தகிக்கும் வெயில். அவ்வளவு அதிகமான வெப்பம். ஆனால் நகராட்சி ஊழியர்கள் தங்கியிருந்த பகுதியில் ஏ.ஸி. இல்லை. நீண்ட ஹாலிலும், கட்டிடத்திற்கும் வெளியிலும் சாதாரணக் கட்டில்கள். அதையொட்டி பழைய ஃபேன்கள். எதிரே பொதுவானதாக ஒரு டி.வி. தங்கியிருப்பவர்களுக்காய் மர போர்டுகளில் செய்யப்பட்ட ஒரு பெட்டி. போனதும் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்களுக்கும் குரலில் ஒருவித சந்தோஷம். அதே சமயம் தங்கள் அவஸ்தைகளைப் பகிர்ந்து கொள்ள இடம் கிடைத்த மாதிரி மனநிறைவுடன் பேசினார்கள். அந்த ஒரு முகாமில் இருந்த தொழிலாளர்கள் மட்டும் 800 பேர். இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
“பெரும்பாலும் 55 ரியால் (இந்திய மதிப்பில் 6 ஆயிரம் ரூபாய்) கிடைக்கிறது. சாப்பாட்டை நாங்களே சமைத்துக் கொள்வோம். சாலைகளைச் சுத்தப்படுத்துவதும், அரசு அலுவலகங்கள், கழிப்பறைகள் உட்படச் சுத்தப்படுத்துவதும் எங்களுடைய வேலை. ஆனால் ஏஜெண்டுகள் எங்களிடம் சொன்னது சாப்பாட்டுச் செலவெல்லாம் போக ஒரு மாதத்திற்குச் சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்றார்கள். அதை நம்பி ஏஜெண்டுகளிடம் ஒரு லட்சம் வரை கொடுத்து வந்தோம். இப்போது 1 லட்சத்து 10 ஆயிரம் வரை கொடுத்து வருகிறார்கள். ஆனால் இங்கு சாப்பாட்டுச் செலவெல்லாம் போக, கையில் இரண்டாயிரம் ரூபாய் கூட மிஞ்சுவதில்லை. இதைச் சம்பாதிக்கவா வீட்டைப் பிரிந்து இவ்வளவு தூரம் வந்தோம்? முதுகலைப் பட்டபடிப்பு படித்த சிலர் இங்கு வந்து இதே வேலையைத்தான் செய்கிறார்கள். காலையில் 6 மணியிலிருந்து 11 மணி வரையிலும், மதியம் 3 மணயிலிருந்து 6 மணி வரையிலும் வேலை நேரம்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சொந்த நாட்டிற்குப் போக டிக்கெட் செலவுடன், சம்பளமும் கொடுத்து அனுப்ப வேண்டும். ஆனால் கொடுக்காமல் கொடுத்த மாதிரி கையெழுத்து வாங்கி விடுவார்கள். இது தவிர உழைப்பாளர்களுக்கான அட்டையை ஒவ்வொரு வருஷமும் புதுப்பிக்க 120 ரியால் (சுமார் 14 ஆயிரம் ரூபாய் வரை) கட்ட வேண்டும். தெருக்களில் வேலை செய்யும்போது வெயில் ஒருபுறம், அவமானங்கள் ஒருபுறம். நடுரோட்டில் வேலை செய்யும்போது ஓமானியச் சிறுவர்களும், இளைஞர்களும் கற்களை விட்டெறிந்திருக்கிறார்கள். முட்டைகளை வீசியிருக்கிறார்கள். திருப்பி நாங்கள் ஏதாவது செய்தால் உடனடியாகப் போலீஸ் வந்து எங்களைத்தான் கைது பண்ணும் என்பதால் நாங்கள் ஒதுங்கிப் போய் விடுவோம். வெள்ளியன்றுதான் விடுமுறை. அன்றைக்கு மட்டும் வெளியே போவோம். சிலர் சம்பளம் வாங்கியதும் நாங்கள் சுத்தம் செய்யப் பயன்படுத்துகிற ஒரு ரசாயன திரவத்தை அதில் கிடைக்கும் போதைக்காக வாங்கிக் குடிப்பார்கள். சொந்த நாட்டிற்கு தொடர்ந்து ஆறு வருஷங்கள் போகாமல் உழைத்தால்தான் ஊரில் ஏஜெண்டுக்காக நாங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியும்’’ - சுற்றிலும் மணல் மேடும், அடர்ந்த வெப்பமும் சூழ்ந்திருக்க நிராதரவானபடி சொன்ன தமிழகத் தொழிலாளர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது குறித்து பயமும் கூடவேயிருக்கிறது.
‘யாராவது வந்து இந்தியா போக ஏற்பாடு செய்தால்’ கேள்விக்குக் கூட்டமான பதில் “உடனே கிளம்பி விடுவோம்.’’
‘காலா‘ என்று இன்னொரு பகுதி. அங்கே போக தொழிற்சாலைகள், பின்னால் பணியாளர்களுக்கான முகாம்கள். இங்கு இருப்பவை மட்டும் 162 முகாம்கள். பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கிருந்தாலும் தமிழர்கள் மட்டும் 10 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். முறையான விசா இல்லாமல் போலி ஏஜெண்டுகள் மூலம் ஓமனில் இறக்கி விடப்பட்டவர்களில் பலர் இங்கே இருக்கிறார்கள்.
கடந்த மாதம் ஓமனில் உள்ள தொழிலாளர் துறை இந்தப் பகுதியில் நடத்திய ஒருநாள் சோதனையில் பிடிபட்டவர்கள் மட்டும் 3 ஆயிரம் பேர். பிடித்ததும் நேரே சிறைக்குக் கொண்டு சென்று விடுகிறார்கள். இப்படிச் சிறையில் இருப்பவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.
‘காலா’ பகுதியிலுள்ள சில முகாம்களுக்குப் போனபோது, ஒவ்வொரு முகாமிலும் கும்பலாகத் தமிழர்கள். ஒரு முகாமில் மட்டும் 200 பேர்களுக்கு மேல் தாங்கள் வேலை பார்த்த கம்பெனிக்கு எதிராக பணியாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். போனதும் கூடிக் குமுறி விட்டார்கள்.
பிரச்சனை இதுதான்.
அக்கம்பெனியில் காலையில் துவங்கித் தினமும் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்தும் கடந்த எட்டு மாதங்களாகச் சம்பளம் தரப்படவில்லை. பாஸ்போர்ட், பணியாளர் அட்டையெல்லாம் நிறுவனத்திடம் மாட்டிக் கொள்ள சம்பளமும் இல்லாமல் போக கதறிவிட்டார்கள் ஐமபதுக்கு மேற்பட்ட தமிழகத் தொழிலாளிகள்.
“தூதரகத்திடம் போய்ச் சொன்னோம். எப்படியாவது ஆறு மாதச்சம்பளம் வாங்கித் தரவா என்று கேட்கிறார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வெயிலில் உழைத்ததற்கு ஒரு மதிப்பு கூட இல்லையென்றால் என்ன செய்வது. இது மாதிரி இங்குள்ள பல நிறுவனங்கள் வேலை செய்தும் சம்பளம் கொடுக்காமல் இருக்கின்றன. ஏஜெண்டுகளும் ஏமாற்றி, இங்குள்ள சில கம்பெனிகளும் எங்களை ஏமாற்றினால் நாங்கள் என்ன செய்ய முடியும்? கேரளாவிலிருந்து வந்து கஷ்டப்படும் தொழிலாளர்கள் அவர்களது பிரச்சனைகளைச் சொல்ல சில தலைவர்கள் இருக்கிறார்கள். துபாயிலிருந்து தனியாக ஒளிபரப்பாகும் ‘ஆசியா நெட்’ மலையாளச் சேனலில் எப்படியாவது இந்தப் பிரச்சனைகள் வெளிவந்து விடுகின்றன. ஆனால் தமிழர்கள் வந்து இங்கு கஷ்டப்பட்டும் யாரிடம் எங்கள் பிரச்சனைகளை சொல்வது என்று தெரியவில்லை. யார் எங்களைக் காப்பாற்றுவார்கள்? தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கருணாநிதியும் எங்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொள்வார்களா? சிறையிலும், வெளியிலும் வதங்கிக் கிடக்கும் எங்களுடைய பிரச்சனைக்கு விடிவு காலம் வருமா?’’ லேசான இருள் படர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தமிழ்க் குரல்கள் வெளிப்பட்டபோது பதில் பேச முடியவில்லை.
முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இதில் இருந்தாலும், அவர்களுக்குள் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தி இருக்கிறது அங்குள்ள சூழல். கடல் கடந்திருந்தாலும் போன் மூலமோ, கடிதங்கள் மூலமோ வீட்டிலுள்ள உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும் அந்த நேரம் அவர்களது துயரங்களை தற்காலிகமாக மறக்கடிக்கிறது. முகாமில் சிறு கட்டில் மட்டுமே இருந்தாலும் அதையொட்டி உறவினர்கள், குடும்ப புகைப்படங்கள்.
இந்தியாவுக்கு வந்து 4 வருடங்கள் ஆகிவிட்ட துப்புரவு பணியில் இருக்கிற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரிடம் பேசினபோது என்னவொரு நெகிழ்ச்சி? “எவ்வளவோ கஷ்டப்பட்டாச்சு. இங்கே வந்து ஒரு சமயம் நண்பர்களுடன் சேர்ந்து தமிழ்ப்பட வி.சி.டி. வாங்கி போட்டுப் பார்த்தோம். சேரனின் ‘வெற்றி கொடி கட்டு’ படம். ‘என்ன வாய்ப்பு இல்லை இங்கே? ஏன் வெளிநாட்டுக்கு போரேன்னு ஏமாந்து கஷ்டப்படணும்’ என்று இதில் ஒரு வசனம் வரும். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தாங்க முடியாமல் அழுதுட்டேன். பின்னால் திரும்பினால் என்னுடன் இருந்தவர்களும் அழுது கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் இங்கே வந்துதானே தெரியுது. அங்கே இருக்கும்போது தெரியலையே.’’ சொல்லும்போதே கண்கலங்கினார் அந்த சிவகங்கை இளைஞர்.
ஓமன் முழுக்க 40 ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள் இருந்தாலும் காலா பகுதியிலேயே 4 ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள்.சிலவற்றை நடத்துவது இந்தியர்கள்தான். ஜீன்ஸ் பேண்டுகளையும், டி-சர்ட்டுகளையும் தயாரித்து துபாய் மற்றும் பக்கத்தில் உள்ள நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். இங்கு வேலை செய்வது பெரும்பாலும் பெண்கள். அதிலும் இலங்கைப் பெண்கள். இதில் சில பெண்கள் தமிழர். மற்றவர்கள் சிங்களவர். வேலை செய்யும் ஆண்களிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு சம்பளம் 45 ரியால். கூடவே 15 ரியால் சாப்பாட்டுக்கு. பெண்களுக்கு வேலை செய்யுமிடம் தங்குமிடத்தைத் தவிர வேறு எங்கும் போக அனுமதி இல்லை. 3 மாதங்களுக்கு ஒருமுறை அரை நாள் ஷாப்பிங்கிற்காகப் பாதுகாப்புடன் அழைத்துச் செல்கிறார்கள். இரண்டு வருஷத்திற்கு ஒருமுறை விடுமுறை கொடுத்து சொந்த நாட்டிற்கு அனுப்புகிறார்கள். கம்ப்யூட்டர் மூலமாக ‘கட்டிங்’ நடக்கும். இந்தக் கம்பெனியின் உரிமையாளர்களுக்கு பிடிக்காவிட்டால் எந்தச் சமயமும் இவர்கள் வெளியேற்றப்பட்டு விடுகிறார்கள்.
இதுதவிர தமிழகத்திலிருந்து போன தொழிலாளர்கள் வேலை செய்வது கட்டிட வேலைகளில். ஓமனில் பல இடங்களில் மாறி மாறி கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் குறைந்த கூலிகளுக்குக் கூட போய் வேலை செய்கிறார்கள் தமிழர்கள். ஒருநாள் இருக்கும் வேலை மறுநாள் நீடிக்கும் என்கிற உத்தரவாதம் இல்லை. சில குறிப்பிட்ட காண்ட்ராக்ட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு முறையான பாதுகாப்பு, அதற்கான கவச உடைகள் எல்லாம் உண்டு. சிறு நிறுவனங்களில் இந்தப் பாதுகாப்பு இல்லை. சம்பள உத்தரவாதமும் இல்லை. டூரிஸ்ட் விசாக்களில் வந்து மாட்டிக் கொள்பவர்களை பிழைக்க வைப்பது இம்மாதிரியான சிறு நிறுவனங்கள்தான்.
தொழிலாளர் நலத்துறை, காவல்துறை, மஸ்கட் நகராட்சி இந்த மூன்றில் எந்த ஊழியர்கள் வந்து சோதனை இட்டாலும் உடனே 250 ரியால் (சுமார் 30 ஆயிரம் ரூபாய்) கட்டத் தயாராக இருக்க வேண்டும். அதோடு சிறை தண்டனை.
டூரிஸ்ட் விசாவில் வந்திருந்தால் ஒரு மாதத்திற்கு மேல் அங்கு தங்குகிற ஒவ்வொரு நாளுக்கும் 10 ரியால் (1200 ரூபாய்) அபராதமாக கட்டியாக வேண்டும். கட்ட வழியில்லாத தொழிலாளர்களை நேரே சிறைக்கு அழைத்துச் சென்று அடைக்கிறார்கள். பிறகு இந்தியத் தூதரகத்திடம் தொடர்பு கொண்டு அவர்கள் குறிப்பிட்ட நபரின் இந்திய முகவரியைத் தேடி அங்கிருந்து அவரது வீட்டு ரேஷன் கார்டு, அடையாள அட்டை நகல் வந்து சேர்ந்த பிறகு தூதரசம் ‘அவுட் பாஸ்’ கொடுத்து இவர்கள் வெளியேறுவதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது.
ஆய்விற்காக நாங்கள் போயிருந்ததற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஓமனின் ஒரு மாநிலத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்து இந்தியத் தூதரக வாசலிலேயே படுத்திருந்தார்கள் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள். சிலர் சாப்பிடுவதற்கு உதவியிருக்கிறார்கள் ஓமனில் உள்ள மலையாளிகளும், தமிழர்களும். எட்டு மாதங்களாக அவர்கள் வேலை பார்த்த கம்பெனியில் சம்பளம் வழங்கப்படாமல் பசியும், பட்டினியுமாகக் கிடந்த அவர்களை அங்கிருந்து அனுப்பி தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்ப முன்பு போதுமென்றாகிவிட்டது தூதரக அதிகாரிகளுக்கு. ஆனால் இது மாதிரி சமீப காலங்களில் நிறையச் சம்பவங்கள்.
நாங்கள் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு கூடச் சென்னையிலிருந்து வந்த நான்கு இளைஞர்கள் போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு, வேலை செய்கிற இடத்திலிருந்து தப்பி வந்தபோது அவர்களுக்கு உதவி செய்தவர்கள் பாகிஸ்தானியர்கள். மஸ்கட் வந்ததும் அபராதத் தொகை போடப்பட்டு கனத்த அவமானத்துடன் ஒரு வழியாகத் திருப்பியனுப்பப்பட்டிருந்தார்கள்.
தேசிய உடையை அணிந்த ஓமானியர்களைத் தவிர மற்ற வெளிநாட்டினரை எந்த நேரத்திலும் சோதனை செய்கிறார்கள் ஓமானியப் போலீசார். கையில் பாஸ்போர்ட்டோ, உரிய பணியாளர் அடையாள அட்டையோ இல்லாமலிருந்தால் உடனடியாக அவர் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு சிறைத்தண்டனை.
“இங்கு மன்னராட்சி நடப்பதால் வெளிநாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிவதில்லை. தெரிந்தாலும் புகார் செய்ய முடிவதில்லை. முறைகேடான விசா மூலமாக வருவதற்கு முதல் காரணம் — இந்தியாவிலுள்ள போலி ஏஜெண்டுகள் தான். அவர்களுக்கு இங்குள்ள நிலைமை தெரியாதா? நம் நாட்டில் உள்ள இந்தக் குறையைத் தீர்க்காமல் இங்குள்ள அதிகாரிகளை எப்படிக் குறை கூறமுடியும்? எங்களால் இங்கு தவிக்கிற சில தொழிலாளர்களுக்கு உதவ முடிகிறது. ஆனால் தொடர்ந்து எவ்வளவு பேருக்கு உதவ முடியும்’’ - என்று சொல்கிற ஓமனில் உள்ள தமிழ் அமைப்பினர் மன்னராட்சியைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
வசதியுள்ளவர்கள் அங்கு நிலவுகிற 50 டிகிரி சென்டிகிரேடுக்கும் அதிகமான வெப்பத்தை குளிர்சாதன வசதியுடன் தாங்கிக் கொள்கிற போது, இந்தியாவைப் போன்ற நாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்கள் ஓமனுக்குள் தாங்க முடியாமல் போகிற விஷயம் – இங்குள்ள அதிகமான வெப்பம். அதிலும் வெப்பத்தில் நின்று உழைக்கிற தொழிலாளர்களுக்கு ‘ஸன்ஸ்ட்ரோக்’ பாதிப்பும், சில தோல் வியாதிகளும் உடனடி விளைவாக உருவாகியிருக்கின்றன.
இவ்வளவையும் தாங்கிக் கொண்டு தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு இருக்கக் காரணம், இந்தியாவை விட வளைகுடா நாடுகளுக்கு வந்தால் கூடுதலாக சம்பாதிக்கலாம் என்கிற நம்பிக்கை. அதிலும் தமிழைத் தவிர வேறு மொழி தெரியாத தமிழகத் தொழிலாளிகளுக்கு எவ்வளவோ நெருக்கடிகள் இருந்தாலும் இந்தியத் தூதரகத்தில் கூடத் தன் குறைகளைச் சொல்ல முடியாத நிலை.
ஏறத்தாழ இருபதாயிரம் தமிழர்கள் வரை இம்மாதிரி மாட்டித் தவிப்பதாகச் சொன்னாலும், இவர்களுடைய பிரச்சனைகளுக்கு மாற்று என்ன?
‘ரூவி’ (RUWI) பகுதியில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குப் போனபோது - விசாவைப் புதுப்பிக்கக் கூடியிருந்தார்கள் பல இந்தியத் தொழிலாளர்கள்.
தொழிலாளர் நல அதிகாரியாக வட இந்திய அதிகாரியைச் சந்தித்த போது - கடந்த வாரத்தில் தூதரகத்தின் முன்பு இந்தியத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்பட்டாலும்-தொழிலாளர்களைப் பற்றி எந்தப் புகார்களும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். ‘விசா புதுப்பிக்கப்படும்போது சில பிரச்சனைகள் வரலாம்’ என்றதோடு, வேறு விபரங்கள் எதையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை.
இவ்வளவு மோசமானபடி இந்தியத் தொழிலாளர்கள் - அதிலும் தமிழகத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டும் இந்தப் பாதிப்புக்கு மூல காரணமான போலி ஏஜெண்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அவர்கள் இன்னும் தொடர்ந்து இயங்க இயங்க, பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் கூடத்தானே வாய்ப்பிருக்கிறது.
ஓமனில் அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும் அதை இந்தியத் தூதரகத்தில் வாய்விட்டுச் சொல்லக்கூட முடியாத அளவுக்குத் தமிழர்களே தூதரகத்தில் ஏன் இல்லை? ஓமனில் உள்ள தொழிலாளர் நலத்துறையிடம் உரிய முறையில் தமிழகத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறதா?
பிரச்சனைகள் - அது உருவான நாட்டைப்போல வெப்பத்துடன் இருக்கின்றன. தணிக்கப் போவது யார் என்பதுதான் கேள்வி.
(within the last minute)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக