புதுச்சேரி, அக். 2: பாரதி கவிஞனாக இருந்தாலும் தன்னை உலகை உய்விக்க வந்த தலைவனாகக் கருதிச் செயல்பட்டவன். தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளும் பாரதியிடம் இருந்தது என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்."புதுவை பாரதி' மாத இதழின் வெள்ளிவிழா புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தினமணி ஆசிரியர் ஆற்றிய சிறப்புரை:சிற்றிதழ் நடத்துவது சாதாரண விஷயமல்ல. சிற்றிதழ்களில் தமிழ் காப்பாற்றப்படுகிறது. நல்ல இலக்கியங்கள் நிலை நிறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிற்றிதழ்கள் பற்றி அதிகம் பேசி வருகிறேன். கால் நூற்றாண்டு காலம் வெளிவந்துள்ள புதுவை பாரதி இதழையும், ஆசிரியர் பாரதிவாணர் சிவாவையும் வாழ்த்துகிறேன்.பாரதியின் நூற்றாண்டு விழா முடிந்துவிட்டது. 2021-ல் பாரதி இறந்து 100 ஆண்டுகள் ஆகப் போகின்றன. ஆனால் இன்னும் பாரதியைப் பற்றி பேசுகிறோம். பாரதி இறந்த பிறகு மயானத்துக்கு 1 டஜன் பேர் கூட போகவில்லை. ஆனால் பாரதி பேசப்படுகிறான். அதற்கு என்ன காரணம்? காலத்தை மீறி எழுத்தும், செயல்களும்தான் பதிவு செய்யப்படும்.பாரதியைப் பற்றி விமர்சனம் செய்யும் சிலர் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள். பாரதியின் காலத்தில் இருந்துதான் அவர்கள் பாரதியையும், பாரதி படைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அப்படியில்லாமல் இன்றைய சூழலில் ஆய்வு நடத்த முடியாது. அப்படி செய்தால் அந்த ஆய்வு சரியாக இருக்காது.பாரதியைப் பற்றி கண்ணதாசன் குறிப்பிடுகையில், நான் வாழும்போதே என்னுடைய கவிதையை மற்றவர்கள் பாராட்டுவதையும், என்னுடைய பாடல்களை லட்சக்கணக்கானவர்கள் பாடுவதையும் கேட்டு மகிழும் அதிர்ஷ்டத்தைப் பெற்றவன் நான். ஆனால் பாரதிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. என்ன எழுதினோம், அதை மற்றவர்கள் எப்படி ரசித்தார்கள் என்று அனுபவிக்கக் கொடுத்து வைக்காதவன் கவிஞன் பாரதி என்கிறார்.பாரதியிடம் தலைவனுக்குரிய எல்லா தகுதியும் இருந்தன. மக்களிடம் மூடநம்பிக்கையை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறான். வறுமை ஒழிய வேண்டும் என்று விழைகிறான். தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று பராசக்திக்கு வேண்டுகோள் விடுக்கிறான். வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்றும், தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றும் பாடியவன் பாரதி. இது போன்ற சமூக சிந்தனையுடன் கூடிய தலைவனின் பார்வை காரணமாகத்தான் காலத்தைக் கடந்து நிற்கிறான் பாரதி என்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/3/2010 3:37:00 AM
10/3/2010 3:37:00 AM


By Ram
10/3/2010 1:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
10/3/2010 1:44:00 AM