வெள்ளி, 8 அக்டோபர், 2010

இலக்கியம்: பெரு நாட்டு எழுத்தாளருக்கு நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக். 7: பெரு நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மரியோ வர்கஸ் லோசாவுக்கு (74), 2010ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.  இதற்கான அறிவிப்பை நோபல் பரிசு கமிட்டி வியாழக்கிழமை அறிவித்தது.  அதிகார அமைப்புகள் பற்றி கூர்மைத்திறன் மிக்க தனது எழுத்துகளால் எடுத்துக்காட்டும் விதம், தனிநபர்களுடைய எதிர்ப்பு, கலகம், தோல்வி பற்றி அவர் தெளிவாக படம்பிடித்துக்காட்டும் பாங்கு ஆகியவற்றுக்காக இந்த பரிசை அவருக்கு வழங்குவதாக நோபல் பரிசு கமிட்டி, பாராட்டுரையில் தெரிவித்துள்ளது.  பெரு நாட்டின் அரேகுபா என்ற இடத்தில் 1936ம் ஆண்டில் பிறந்தார் லோசா. தனது பெற்றோர் விவாக ரத்து செய்து கொள்ளவே பொலிவியாவில் தனது தாயார், தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த லோசா மீண்டும் 1946ல் பெரு திரும்பினார்.  எழுத்தாளர், அரசியல்வாதி, பத்திரிகையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் அவர். அவரது படைப்புகள் பலவும் அரசியல் கருத்துகளையும், லத்தீன் அமெரிக்காவின் வன்முறை, கலவர வரலாற்றையும் படம் பிடித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன. அவரது நூல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றவை. 1959ல் பாரீஸýக்கு சென்ற லோசா, மொழி ஆசிரியராகவும், பத்திரிகையாளராக பிரான்ஸ் செய்தி ஏஜென்சியிலும் தேசிய தொலைக்காட்சியிலும் பணியாற்றினார்.  நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தற்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  1990ல் பெரு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அவர், ஆல்பர்ட்டோ பியூஜிமோரியிடம் தோற்றார். பியூஜிமோரி ஆட்சியில் நடந்த அத்துமீறல்களால் அதிருப்தி அடைந்த லோசா, 1993 மார்ச்சில் ஸ்பெயின் நாட்டவராக குடியுரிமை பெற்றார். இவரது இந்த நடவடிக்கைக்கு பெரு நாட்டவர் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது.    30க்கும் மேற்பட்ட நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகளை அவர் படைத்துள்ளார். "கான்வர்சேஷன் இன் த கதீட்ரல்', "தி கிரீன் ஹவுஸ்', "தி ஃபீஸ்ட் ஆப் தி கோட்', "தி பேட் கேள்' ஆகியவை அவரது மிகச்சிறந்த படைப்புகளில் அடங்கும். ஸ்பானிய மொழி உலகின் இலக்கியத்துறை சார்ந்த சிறந்த கெüரவ விருதாக கருதப்படும் செர்வான்டீஸ் பரிசு 1995ல் அவருக்கு வழங்கப்பட்டது.  1960ல் அவர் படைத்த "தி டைம் ஆப் தி ஹீரோ' என்கிற நாவல் அவரை உலகுக்கே அறிமுகப்படுத்தியது. லியான்சியோ பிரதோவில் உள்ள பெரு ராணுவ அகாதெமியில் தனக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை அதில் பகிர்ந்து கொண்டுள்ளார் லோசா.  இந்த படைப்பு பெருநாட்டில் அவருக்கு எதிராக சர்ச்சையை எழுப்பியது. இந்த நூலின் ஆயிரம் பிரதிகளை அகாதெமியைச் சேர்ந்த அதிகாரிகள் தீ வைத்துக் கொளுத்தினர்.  1982ல் கொலம்பியா எழுத்தாளர் காப்ரீயல் கார்சியா மார்கஸýக்கு இலக்கியத்துக்கான நோபல் கிடைத்தபிறகு இந்த விருதை பெறும் முதல் தென் அமெரிக்க எழுத்தாளர் என்கிற பெருமை லோசாவுக்கு கிடைத்துள்ளது.
கருத்துக்கள்

தமிழ்ப் படைப்பாளர்கள் நோபல் பரிசு பெறும் காலம் விரைவில் வரட்டும்! பரிசாளர் பற்றிய விவரமான செய்தியை வெளியிட்ட தினமணிக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/8/2010 4:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக