கொழும்பு, அக்.3: இலங்கையில் விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட்டு இலங்கை அரசுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்த ராணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகா (59) இப்போது கொழும்பு நகரில் வெலிக்கடை சிறையில் சாதாரணக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.மருமகன் பெயரிலான நிறுவனத்திடமிருந்து இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்தததாகவும் அதில் முறைகேடாகப் பணம் சம்பாதித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ராணுவத்தின் தலைமைத் தளபதி என்ற வகையில் அதிபர் மகிந்த ராஜபட்ச அவருடைய தண்டனையை இரண்டரை ஆண்டுகளாகக் குறைத்து கருணை காட்டியிருக்கிறார்.கடந்த வியாழக்கிழமை இந்த உத்தரவை அவர் பிறப்பித்ததும் வெலிக்கடை சிறைக்குக் கூட்டிவந்து சாதாரணக் கைதிகளுடன் அவரையும் தனி அறையில் அடைத்துவிட்டனர். சிறையில் அவருக்கு 0/22032 என்ற எண் தரப்பட்டிருக்கிறது. அதுவரை இலங்கையின் தேசிய உடை அணிந்திருந்த அவருக்கு அவற்றைக் களையச் செய்தனர். ஏனைய கைதிகளைப் போல அரைக்கால் சட்டையும் காலர் இல்லாத பனியன் போன்ற சட்டையையும் பொன்சேகா அணிந்துகொண்டார். சிமென்ட் தரையில் சாதாரண விரிப்பு ஒன்றை விரித்து அதில் படுத்து தூங்கினார். போர்த்திக்கொள்ள ஒரு போர்வையும் தலைக்கு வைத்துக்கொள்ள ஒரு தலையணையும் தரப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அவரையும் பிற கைதிகளைப் போல வார்டன் எழுப்பிவிட்டார். அவருடைய அறையிலேயே கழிப்பறை இருந்தும் அதில் தண்ணீர் வடியாமல் துர்நாற்றத்துடன் இருந்தது. எனவே வெளியில் பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அங்கு கிணற்றிலிருந்து தண்ணீரை அவரே இழுத்து இரும்பு பக்கெட்டில் நிரப்பி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. வியாழக்கிழமை நள்ளிரவுதான் வெலிக்கடை சிறையின் எஸ் வார்டில் அவரை அடைத்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலையே எழுப்பிவிட்டனர். இதனால் சற்று சோர்வாகவே அவர் இருந்தார்.பிறகு இரும்புக் குவளையையும் தட்டையும் கொடுத்து மற்ற கைதிகளுடன் வரிசையில் நின்று தேத் தண்ணீரையும் சிற்றுண்டியையும் வாங்கிச் சாப்பிடுமாறு கூறினர்.பிறகு சிறை டாக்டர் அவரைப் பரிசோதித்தார். சிறையில் இடும் வேலையைச் செய்ய அவருக்கு உடல் வலுவுடன் இருக்கிறதா என்று பார்த்து அவர் உறுதி செய்தார். பிறகு சிறை அதிகாரிகள் அவரிடம் என்னென்ன வேலைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்று கூறினர்.பிறகு சிறை தையல்காரர் வந்து அவருடைய மார்பளவு, இடுப்பளவு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டார். சிறையில் முதலில் தந்திருந்த உடை தொளதொளவென்று இருந்தது.பிறகு மதிய சாப்பாட்டையும் அதே போல இரும்புத் தட்டு டம்ளருடன் வரிசையில் வந்து வாங்கிக்கொண்டார். அரிசிச் சாதம், பூசணிக்காய் கூட்டு,வேகவைத்த பருப்பு, ஊறுகாய், தேங்காய் துருவலுடன் கூடிய கீரைக்கறி, கொஞ்சம் மீன், கிரேவி என்று எளிதான உணவு தரப்பட்டது. பிறகு உண்ட மயக்கம் தீர பகல் 12 மணி வரையில் சிறை அறையில் போய் ஓய்வெடுக்கக் கூறினர். பிறகு மீண்டும் வெளியே அழைத்து சிறையிலேயே வேறு சில வேலைகளைச் செய்யச் சொல்லி அவரை வேலை வாங்கினர். இரவு சாப்பாடு கொடுத்துவிட்டு 7 மணிக்கெல்லாம் அறையின் விளக்கை அணைத்துவிட்டு தூங்கச் சொன்னார்கள். அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு வார்டன் வந்து எழுப்பும்வரை அவர் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்க வாய்ப்பாக நீண்ட இரவுகள் அவருக்கு வாய்த்திருக்கின்றன.கடந்த ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான மோதல்கள் முற்றுப் பெற்றபோது அதிபர் மகிந்த ராஜபட்சவைவிட நாட்டின் கதாநாயகனாக, கடவுளாகக் கருதப்பட்டபொன்சேகா, தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டதால் தனிமைச் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார். அரசியலிலேயே ஊறியவர்களைப் பதவிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அவர்களைப் போலவே குறுக்கு வழியில் சிந்திப்பதுடன் துணிந்து செயல்படவும் வேண்டும். இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் தலைமைத் தளபதியாக இருந்து என்ன பயன், சாதாரண ஊழல் வழக்கிலேயே சிக்க வைத்து உள்ளே தள்ளிவிட்டார்களே என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கருத்துக்கள்
பக்சேக்களும் கொட்டடியில் அடைக்கப்படும் நாள் விரைவில் வருவதாக!
எதிர்பார்ப்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
எதிர்பார்ப்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/4/2010 4:45:00 AM
10/4/2010 4:45:00 AM