புதன், 6 அக்டோபர், 2010

புலிகள் மீதான தடையை நீக்க வைகோ, நெடுமாறன் வலியுறுத்தல்

சென்னையில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்ற மத்​திய தீர்ப்​பா​யத்​தின் விசா​ர​ணைக்கு ஆஜ​ரான மதி​முக பொதுச்​செ​ய​லர் வைகோ,​​ தமி​ழர் தேசிய இயக்​கத் தலை​வர்
சென்னை, அக். 5: சென்னையில் மத்திய தீர்ப்பாயத்தின் முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜராகி, விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் கோரினர். சென்னையில் மத்திய தீர்ப்பாயத்தின் 3-வது கருத்தாய்வு கூட்டம் நீதிபதி விக்ரம் அஜித் சென் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, கடந்த மே 10-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. சட்ட விரோத செயல் தடுப்பு சட்டத்தின் கீழ், புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது குறித்து தீர்மானிக்க, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம் அஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.இந்தத் தீர்ப்பாயம் அடுத்த 6 மாதங்களுக்குள் அமர்வுகளை நடத்தி விசாரித்த பின் இதுகுறித்த முடிவை அறிவிக்க வேண்டும்.இதன்படி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் சார்புடையோர் தீர்ப்பாயத்தின் முன்பு நேரில் ஆஜராகி கருத்து தெரிவிக்கலாம் என்று அரசு ஏற்கெனவே அறிவித்தது. இதையடுத்து தீர்ப்பாயத்தின் 2 விசாரணை அமர்வு தில்லியில் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, முதல் முறையாக இந்தத் தீர்ப்பாயத்தின் 3-வது அமர்வு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஜுடிசியல் அகாதெமியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு எஸ்.பி. அசோக் குமார், புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கான தகுந்த ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து நீதிபதியின் முன்பு சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த 2008 முதல் இதுவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 47 பேர் மீதும், இவர்களின் தீவிர ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தினர் மீதான தடையை நீட்டிப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் தகவல் பரிமாற்றம் குறித்த ரகசிய ஆவணங்களும் தீர்ப்பாயம் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றார் அசோக்குமார்.இதன்பின் நீதிபதியின் முன்பு வைகோ ஆஜராகி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் இந்தியாவில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக மட்டுமே அந்த இயக்கம் உள்ளது. அதன் மீதான தடையை நீடிக்க அரசு கூறும் காரணங்கள் யூகத்தின் அடிப்படையிலானவை ஆகும் என்றார்.பழ. நெடுமாறன் கூறியதாவது:  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால், நான் நடத்தி வந்த தமிழர் தேசிய இயக்கம் என்ற கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. என் மீதும், எனது கட்சியினர் மீதும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டேன். எந்த இடத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டியுள்ளது. இதனால், அரசமைப்பு சட்டத்தின் படி பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர் என்பதால் தீர்ப்பாயத்தின் முன்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.இதே போல தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் ஆஜராகி, மனு தாக்கல் செய்தார். இதன்பின் விசாரணை நடத்திய நீதிபதி, இது குறித்த தீர்ப்பை தள்ளி வைத்தார்.  தீர்ப்பாயத்தின் விசாரணை 2-ம் நாளாக புதன்கிழமையும் தொடரும் எனத் தெரியவந்துள்ளது.ஊட்டியில் 20-ல் தீர்ப்பாயம் கூடுகிறது:இந்நிலையில், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, இந்தத் தீர்ப்பாயத்தின் அடுத்த கட்ட கருத்தாய்வு வரும் 20-ம் தேதி ஊட்டியில் நடைபெறவுள்ளது.
கருத்துக்கள்

மன உறுதி முன்னால் மலைபோல் தடையும் தூள் தூளாகும்! வெல்லும் தமிழ்ஈழம்! விரைவில் சொல்லும் உலகு அதனை! எனினும் ஈழத்தமிழர்களைக் கொல்லும் இந்தியப் போக்கிற்கு விரைவில் முடிவு வேண்டும். இந்திய ஈழ நட்புறவு வளர வேண்டும். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2010 4:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக