சென்னை, அக். 4: ராஜராஜ சோழனின் நினைவிடத்தை உறுதிப்படுத்த இதுவரை அகழ்வாராய்ச்சி நடத்தாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதிக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதியும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கும் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். ராமஜென்ம பூமி பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அயோத்தியில் தான் ராமன் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேலி பேசி மத உணர்வுகளைத் தூண்டிவிட்டதும் இவர்கள்தான். ராமர் பாலம் பிரச்னை எழுந்த போது ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று முதல்வர் கருணாநிதி கடுஞ்சொல் உதிர்த்தார். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பு நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என்று வேதம் ஓதியவர், இப்போது மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் எழுதவும், பேசவும் தொடங்கியுள்ளார். ""அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்று நீதிமன்றம் அறுதியிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், ராஜராஜன் மறைந்த விதத்தையோ, அவரது கல்லறை அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லை'' என்று கருணாநிதி வருந்தியுள்ளார். இது வாழைப்பழத்தில் ஊசி இறக்கும் வேலை என்பதை எல்லோரும் நன்கறிவார்கள். 5-வது முறையாக முதல்வராக இருக்கும் கருணாநிதி, ராஜராஜ சோழனின் நினைவிடத்தை உறுதிப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ராஜராஜனின் ஆட்சிச் சிறப்புகள், நினைவுச் சின்னங்கள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தாதது யார் குற்றம்? நடத்தக் கூடாது என்று யாராவது தடுத்தார்களா? தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் யார் யார் மீதே வேதனையைத் திருப்பி விடுவது ஏன்? இனியாவது தமிழகத்தின் பழம்பெருமையைக் காக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2010 5:59:00 AM
10/5/2010 5:59:00 AM


By say
10/5/2010 5:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/5/2010 5:20:00 AM