நன்கு எழுதியுள்ளார். கோவில் சமையலறைகள் மடப்பள்ளிகள் என்றே இன்றும்அழைக்கப் பெறும். இசுட்டா பூர்த்தம் என்று தமிழில் இலலை. பின்னர் ஆரியச் செல்வாக்கால் குறிப்பிட்ட வகுப்பினரிடையே பயன்படுத்தி உள்ளனர். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா என்ற பழமொழி வந்ததன் காரணமே கோயில்கள் உணவும் அறிவும் மருத்துவமும் வழங்கும் அறநிலையங்களாகச் செயல்பட்டமைதான். எனவே, கோயிலைச் சார்ந்த மடங்கள் உண்டி கொடுத்ததோர் உயிர் கொடுத்தோர் என்னும் அறநெறியில் தமிழர்களின் உயரிய பண்பான விருந்தோம்பலைப் பின்பற்றியதில் வியப்பில்லை. ஆனால், இன்றைக்கு மடங்கள் பலவும் பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கியோ வணிக நோக்கில் தவறாகச் செயல்பட்டோ வருவது வருத்தத்திற்குரியது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
மடம் என்ற சொல், தமிழில், "மடு' என்ற சொல்லில் இருந்து தோன்றியது.
"மடு' எனில், "உண்ணுதல், ஊட்டுவித்தல்' என்ற பொருள்களில் காணப்படுகிறது.
பண்டைய தமிழ் இலக்கியமாகிய புறநானூற்றில் (56) "ஒண்டொடி மகளிர் மடுப்ப'
என்ற வரியால், ஊட்டுதல் என்ற பொருள், இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில்
இருந்து வந்துள்ளது என்பது தெளிவு. சமஸ்கிருத மொழியிலும், "மட்' என்ற
சொல்லில் இருந்து, "மடம்' என்ற சொல் வந்ததாக அகராதிகள் கூறுகின்றன. "மட்'
எனில், "அத்தி' - உண்ணுதல், எனப் பொருள் கூறுகின்றன. ஆதலின், "மடம்' என்ற
சொல், உண்பது, ஊட்டுவதுடன் தொடர்புடையது என்பதில் ஐயமில்லை.
உணவளிக்கும் புண்ணியம்:மிகத் தொன்மையான காலங்களில் ஒற்றையடிப்
பாதைகள் அல்லது மாட்டு வண்டிப் பாதைகள் தான் அதிகம். குறிப்பாக,
கோவில்களுக்கும், தீர்த்தங்களில் நீராடவும், பயண யாத்ரீகர்கள் வருவது மரபு.
அவர்களுக்காகவே, ஆங்காங்கே, தங்குமிடங்களும், உணவு வழங்க ஏற்பாடும்
செய்வதை, "இஷ்டா பூர்த்தம்' என்று கூறுவர். அதனால், அரசும், பொருள்
படைத்தோறும் இவ்வாறு இலவசமாகவே, தங்கவும், உண்ணவும் ஏற்பாடு செய்வது மரபு.
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்னும் பண்டைய மரபுக்கு ஏற்ப,
இவ்வாறு தோன்றியவை தான், பின்னர் மடங்கள் என்று அழைக்கப் பெற்றன.
தேவார கால மடங்கள்:திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் சுவாமிகளும்
திருவீழிமிழலை அடைந்தபோது, அங்கு, படிக்காசு பெற்ற வரலாறு அனைவரும்
அறிந்ததே. அவர்கள் இருவரும் தங்கி அடியார்களுக்கு அடிசில் அளித்தது,
மடத்தில் தான் என்பதையும் அறிவோம். அதுபோல் ஞானசம்பந்தப் பெருமான், மதுரையை
அடைந்தபோது, தங்கியதும், "மடம்' என அறிவோம்.
வரலாற்றில்...:வரலாற்று நோக்கிலே காணும்போது, ஆயிரம்
ஆண்டுகளுக்கும் முன்பெல்லாம், மடங்கள் கோவிலைச் சார்ந்தவையாகவே
குறிக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தின் அருகில், எட்டாம் நூற்றாண்டில் பல்லவ
மன்னன் நந்திவர்மன் காலத்தில், பிள்ளைப்பாளையம் என்ற ஊரில், "அரசன் பழம்
திருமேற்றளியும் மடமும் நடக்க நிலம் கொடுத்தான்' எனக் கல்வெட்டு கூறுகிறது.
கி.பி., 800ம் ஆண்டில் இருந்த மடம், கோவிலைச் சார்ந்திருந்ததை இதனால்
அறிகிறோம். திருச்சி அருகில், லால்குடி வட்டத்தில், சென்னி வாய்க்கால் என்ற
இடத்தில், "அறிஞ்சிகை ஈச்வரம்' என்ற கோவில் இருந்தது. அதை ஒட்டி ஒரு
மடமும் இருந்தது.
சோழர்காலத்தில்: சோழர் காலந்தொட்டு இவ்வாறு கோவிலை ஒட்டிய
மடங்கள் அதிகமாக அமைக்கப்பட்டதை, பல கல்வெட்டுகள் குறிக்கின்றன. இவற்றில்
சைவ மடங்களாகட்டும், வைணவ மடங்களாகட்டும், கோவிலை அண்டியவையாகவே
காணப்படுகின்றன. இவற்றில் வசிப்பவர்கள், தவசியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
உடுமலைப்பேட்டை வட்டம், குமாரலிங்கத்தில் வெங்கடேசப் பெருமாள் கோவிலில்
உள்ள கல்வெட்டு வீரராஜேந்திரன் காலத்தது. அதில், திருமுத்திறத்தீசரம்
கோவிலில் திருநீறிட்டான் திருமடம் என்னும் ஒரு மடம் இருந்தது. அதில்
வசிப்பார் தம்பிரான் தோழன் என்னும் பெயர் பெற்றவர். அவரைக் குறிக்கும்போது,
"குப்பிட்டிருக்கும் தவசி' என்று கல்வெட்டு கூறுகிறது. மடத்திலிருந்து
உண்பவர்களுக்குத் தனி உரிமை என்றன்றி, கோவிலில் சில பணிகளும் செய்ய
வேண்டும் என்றும் முறை இருந்துள்ளது.
பாண்டி நாட்டில்: திருநெல்வேலி, தென்காசி வட்டம், தென்காசியில்
பராகிரம பாண்டியன், ஒரு கோவில் கட்டினான். இதை, தென்காசி என்று
பெயரிட்டான். இக்கோவிலில் பூஜை, திருவிழாக்கள் எல்லாம் நடக்கத் தொடங்கின.
அருகில் பனையூர் என்ற ஊரில் பிராணானந்த சன்யாசி என்பவரை, பல சன்யாசிகளில்
இருந்து சிறந்தவராகத் தேர்ந்தெடுத்து, அவரிடத்தில் இக்கோவிலை ஒப்பித்து,
இதைக் காத்துத் தரவேண்டும் என்று வேண்டி, இவருக்கு உதவியாக மேலும், சில
சன்யாசிகளையும் நியமித்து, பெருந்தெருவில் ஒரு மடம் அமைத்தும் கொடுத்தான்.
இது, 1486ல் நடந்த நிகழ்ச்சி. இங்கு, ஒரு கோவிலையே பாதுகாக்கும் பணியை, ஒரு
சன்யாசியிடம் ஒப்படைத்து, மேலும், பல சன்யாசிகளை நியமித்தான் என கல்வெட்டு
கூறுகின்றது. சன்யாசிகளை நியமிக்க, அரசனுக்கு உரிமையிருந்தது, கோவிலுக்கு
உள்ளதை காப்பதற்குத்தான் அவர்களுக்கு உரிமையை அளித்தானே ஒழிய,
தன்னிச்சைப்படி செய்ய உரிமை கொடுக்கப்படவில்லை. இதுபோல் தூய்மையாலும்,
அறிவாலும், ஆற்றலாலும், மன்னனுக்கும், மக்களுக்கும் ஒத்த மரியாதைக்குரிய
சன்யாசிகளிடம் சில சமயம் பல கோவில்களும் வந்து சேர்ந்தன. இதுபோல் பெருமாள்
கோவில்களிலும், சில மடங்கள் இருந்திருக்கின்றன. திருவரங்கம் கோவில்
கல்வெட்டுகளில், முதலாம் இராஜாதிராஜ சோழன் கல்வெட்டில், 1048ல், "அழகிய
மணவாள மடம்' கொடுத்த செய்தி காணப்படுகிறது. எது எப்படியிருப்பினும், "மடம்'
என்பது, பெரும்பாலும் கோவிலை ஒட்டியதாக, கோவிலின் அங்கமாக வரும்
யாத்ரீகர்களுக்கோ அல்லது அவ்வச்சமய அடியார்களை உண்பிப்பதற்காகவோ
நிறுவபட்டது என்பது தெளிவு.
மடத்தின் நிர்வாகம் கோவிலை ஒட்டியது:கோவிலின் அங்கமாக மடம்
விளங்கிய காரணத்தால், மடங்களின் நிர்வாகமும் கோவில் நிர்வாகத்தின்
அங்கமாகவே காணப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோவிலில், பல கல்வெட்டுகள் வாயிலாக
இதைக் காண்கிறோம். அக்காலத்தில், கோவில் நிர்வாகம் என்பது, ஒரு பெரும்
குடியாட்சியாகவே செயல்பட்டது. அதாவது, கோவிலை ஒட்டிய ஒவ்வொரு பிரிவு
பணியையும், செய்யும் பணியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி,
நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருப்பர். அரசின் அதிகாரி, பூஜகர், தோட்ட
வேலை செய்வோர், கோவில் நிலங்களை உழுகுடிகள், நந்தவனம் பயிர் செய்வோர்,
மெய்க்காப்பாளர், பண்டாரத்தார், இசைக் கருவியாளர், பாடுவோர், நடமாடும்
பெண்கள் என, எல்லா பணிப் பிரிவுகளின் பிரதிநிதிகளும், இக்குழுவில் இடம்
பெறுவர்; அனைவரையும் கலந்தாலோசித்துத் தான் முடிவு எடுப்பர். இப்பிரிவுகளை,
"கொத்து' என்றும் கூறுவர். கோவிலைச் சார்ந்த எந்த ஒரு முக்கிய
செயல்பாடும், அசையும் சொத்து வாங்குதல், அசையா சொத்து வாங்குதல், விற்றல்
செயல்முறைகளில் மாற்றங்கள், ஆக, ஏதாயினும் இந்நிர்வாகக் குழுவின்
கூட்டத்தில் முடிவு செய்ய வேண்டும். 13ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியன்
ஏராளமான தங்க நகைகள், நிலங்கள் முதலியன கொடுத்தபோது, கோவிலின் மிகவும்
அதிகமான சொத்துகளைப் பராமரிக்க, எல்லா பிரிவுகளின் பிரதிநிதிகளையும்
சேர்த்துக் கொண்டு நடத்த வேண்டும் என ஆணையிட்டான். ஆதலின், மடமும்,
கோவிலின் அங்கம் ஆதலின், மடத்தைப் பற்றிய முடிவுகளையும் அனைத்துக்
கொத்துக்களின் ஆலோசனைப்படியே நடத்த வேண்டும் என்பதில் ஐயமில்லை.
மடங்களின் தலைவர்கள்
மடங்களின் தலைவர்கள்
சில மடங்களில், தலைவராக சன்யாசிகளையும், தவசிகளையும், பிற்காலத்தில்
வேண்டிக் கொண்டனர் என்று கண்டோம். இவர்கள் துறவிகளாக, தமக்கென வாழாத
தகைமையராக, தாங்கள் சொத்து சேர்க்காதவராக, அறிவாளிகளாக, தூய்மையாளர்களாக
இருந்துள்ளனர் என்பதால், அவர்களைத் தேர்ந்தெடுத்து, நியமித்தான் அரசன்.
பொதுமக்களிடம் பெருமதிப்பு பெற்று, அவர்களால் வணங்கத்தக்கோராக இருந்தார்.
ஆதலின், அவர்களிடம் யாத்ரீகர்களுக்கு உணவளிக்கும் புண்ணியப் பணி
ஒப்படைக்கப்பட்டது. அந்தந்த சமயத்தைப் பின்பற்றும் அடியார்களுக்கு ஏற்ப
இக்கட்டளைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கட்டுப்பாடு உண்டு. இவ்வாறு சன்யாசம்
மேற்கொள்ளும்போது, அவர்கள் இவ்விரதம் எவ்வாறு அனுஷ்டிப்பேன் என சத்தியம்
செய்ய வேண்டும். அச்சத்தியத்தை மீறும் சன்யாசிகளுக்கு மிகக் கடும் தண்டனையை
தர்ம சாத்திரங்கள் கூறுகின்றன. மடமும் மடத்தைக் காப்போரும், மக்கள்
மத்தியில் ஆன்மிகத் தலைவர்களாக, தமது நடவடிக்கையால் வெளிக் காட்டியோரையே
தமிழகம் போற்றியுள்ளது.
- டாக்டர் இரா.நாகசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக