புதன், 27 ஜூன், 2012

solgiraarkal

    

சொல்கிறார்கள்


"ஆத்மார்த்தமான கட்டடங்கள்...!'



இந்தியாவிலேயே முதன் முறையாக கட்டட வடிவமைப்பு (ஆர்க்கிடெக்ட்) நிறுவனத்தை நிறுவிய ஷீலா: அண்ணா பல்கலைக் கழகம், என் கல்லூரி நாட்களில், "அழகப்பா செட்டியார் கல்லூரி' என்ற பெயரில் இருந்தது. அங்கு, ஆர்க்கிடெக்ட் துறையை தேர்ந்தெடுத்தேன். இந்த துறை குறித்து படிக்க, நம் மாநிலத்தில், ஒரே கல்லூரி அது தான்.ராணுவத்தில் வேலை பார்த்த என் அப்பா, ஆர்க்கிடெக்ட் துறை பற்றி நிறையப் புரிதல்களுடன் இருந்தது, என்னை வளர்த்துக்கொள்ள துணையாக இருந்தது.நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே, ஸ்ரீபிரகாஷ் என்பவரை, காதல் திருமணம் செய்து கொண்டேன். படிப்பு முடிந்ததும், தனி ஆளாக, "ஷில்பா ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தை' ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், இதில் பல தயக்கங்கள் இருந்தன. எனக்குள் தைரியத்தை விதைத்தது, ஆறு வயதில் இருந்து, நான் கற்றுக் கொண்ட பரத நாட்டியம், குச்சிப்புடி நடனங்களுக்காக, நான் ஏறிய மேடைகளும், கிடைத்த பாராட்டுகளும் தான்.கட்டடத்தில், ஒரு டிசைனை வடிவமைக்கத் துவங்கும் போதே, இந்திய கோவில்களில் உள்ள ஆர்க்கிடெக்ட் சாராம்சத்தை மனதில் வைத்துத் தான், வடிவமைக்கிறேன். அதனால் தான், என் படைப்புகள், தனிப்பட்ட கவனத்தை ஈர்க்கின்றன. இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, நம்மை மாற்றிவிட்டது. குறிப்பாக, நாம் வசிக்கும், இளைப்பாறும், பணியாற்றும் அனைத்து நேரங்களிலும், நம்மைச் சுற்றியுள்ள கட்டடங்களை, ஆத்மார்த்தமாக அணுகாமல், கடமைக்காக உபயோகிக்கிறோம். இதை மாற்ற நினைத்ததன் வெளிப்பாடு தான், கட்டட வடிமைப்பு. பழமை குறைவில்லாமல், அதே சமயம், நவீனம் ததும்ப உருவாகும் இடத்தில் வாழும் போது, மகிழ்ச்சியாக இருக்கும்.நகரம் கொள்ள முடியாத அளவிற்கு, சென்னையில், கட்டடங்கள் வளர்ந்து விட்டன. அடுத்து, வேறொரு நகரத்தைத் தேர்ந்தெடுத்து முன்னேறாமல், இடங்களை குறுக்கி, மேலும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறோம். வளர்ச்சியாக நினைக்கும் இந்த விஷயம், நாளுக்கு நாள், மக்களை எரிச்சலடையவே செய்யும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக